|
பாண்டவர்களின் சார்பாக, திருதராஷ்ட்ரரின் அவைக்கு துாதுவராக வந்த கிருஷ்ணரின் முயற்சி, தோல்வியில் முடிந்தது. பின், குந்தியை சந்தித்து, யுதிஷ்டரருக்கு அவள் சொல்ல விரும்பிய செய்தியை தெரிந்து கொண்டார் கிருஷ்ணர். அதன்பின், கர்ணனிடம் தனியாக பேச வேண்டும் என்றார் கிருஷ்ணர். கர்ணனும் அவரது உள்ளத்தை புரிந்து கொண்டு, அவரது தேரில் ஏறினான். தன் சாரதி தாருகனை இறக்கி விட்டு, தானே தேரை ஓட்டிய கிருஷ்ணர், ‘கர்ணா... நான், உன்னிடம் தனித்துப் பேச விரும்பியது, உனக்கு ஆச்சரியமாக இருந்திருக்குமே...’ என்றார். ‘கிருஷ்ணா... தாங்கள் ஆச்சரியம் எனும் எல்லைகளுக்கு கட்டுப்படாதவர்; எனவே, தங்கள் விஷயத்தில் எனக்கு எவ்வித ஆச்சரியமும் இல்லை...’ என்றான். ‘கர்ணா... நீ தர்ம சாஸ்திரங்களை நன்கு கற்றவன். தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணரும் சக்தி படைத்த நீ, அதர்மத்தின் பக்கம் நின்று கொண்டிருக்கும் துரியோதனனுக்கு, துணை போவது ஆச்சரியமாக இருக்கிறது...’ என்றார் கிருஷ்ணர்.
‘கிருஷ்ணா... எனக்கும், துரியோ தனனுக்கும் இடையே உள்ள நட்பு தர்மம், அதர்மம் எனும் எல்லைகளை கடந்தது. அவமானங்களை மட்டுமே சந்தித்துக் கொண்டிருந்த எனக்கு, சத்ரிய அந்தஸ்தை வழங்கியவன் துரியோதனன். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, என்னை அங்க தேசத்தின் மன்னனாக்கிய துரியோதனனை, அதர்மியாகப் பார்க்க, என் மனம் இடம் கொடுக்கவில்லை. ‘என் வாழ்வில், என் உயிரினும் மேலானவர்களாக நான் கருதுவது இருவரை மட்டுமே! முதலாமவர், எனக்கு பாலுாட்டி, தாலாட்டி, சீராட்டி வளர்த்த என் தாய் ராதை; இவள் தான், நான் அனாதையல்ல என்ற உணர்வை எனக்கு ஊட்டியவள். இன்னொருவர் துரியோதனன்; என் ஆருயிர் நண்பன். ‘நான், அவமானத்துக்குரியவன் அல்லன்’ என்ற உண்மையை இவ்வுலகுக்கு உணர்த்தியவன். இந்த இருவருக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்...’ என்றான் கர்ணன்.
‘உன் நன்றியுணர்வை மிகவும் பாராட்டுகிறேன். ஆனால், நன்றியுணர்வை விட, நியாய உணர்வு மேலானது அல்லவா... அதர்மத்திற்கு துணை போவதன் மூலம், துரியோதனனிடம் விலை போய் விட்டாய் என்று கருத இடம் உள்ளது அல்லவா...’ என்றார் பகவான் கிருஷ்ணர். ‘எந்த நிர்ப்பந்தமும் இன்றி, நானாகவே என்னை துரியோதனனுக்கு ஆட்படுத்திக் கொண்டேன் என்பது தான் உண்மை. விலை போவது என்பதெல்லாம் உன் வீணான கற்பனை...’ என்றான் கர்ணன். ‘கர்ணா... நான் உன்னுடன் தனியாக பேச விரும்பியதே, உன் பிறப்பை பற்றிய உண்மையை நீ, தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான். நீயோ, இவ்வுலகமோ நினைப்பது போல நீ சூதபுத்ரன் அல்ல, சத்ரிய வீரன் என்பதை அறிவாயா...’ என்றார் கிருஷ்ணர். ‘வாசுதேவரே... என் உடம்பில் ஓடுவது சத்திரிய ரத்தமாகத் தான் இருக்க வேண்டும் என்பதை நானே பல முறை உணர்ந் திருக்கிறேன்...’ என்றான் கர்ணன். ‘நீ எப்போதாவது உன்னை பெற்றெடுத்தவளை பார்த்து விட வேண்டும் என்று துடித்திருக்கிறாயா?’ என்று கேட்டார் கிருஷ்ணர்.
‘ஒரு போதும் இல்லை; ஏனெனில், எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, என் மீது பாசத்தை பொழிந்து வரும் ராதையை தவிர, வேறு யாரையும் என் தாயாக நினைத்துப் பார்க்க விரும்பவில்லை...’ ‘கர்ணா... உன் உடலில் ஓடுவது சத்ரிய ரத்தம்; அதுவும், பாண்டவர்களின் உடலில் ஓடும் அதே ரத்தம் தான், உன் உடலிலும் ஓடுகிறது என்பதையாவது அறிவாயா...’ ‘என்ன சொல்கிறீர்கள்?’ ‘ஆம்... நீயும், அர்ஜுனனைப் போலவே, குந்தியின் மகன் தான். அவள் பாண்டு மன்னரை மணக்கும் முன், கன்னிகையாக இருந்த போதே, நீர் சூர்யதேவனின் அருளால் பிறந்தவன்...’ என்றார் கிருஷ்ணர். ‘நான் சூர்ய புத்திரனா...’ ‘ஆம்... அர்ஜுனன் எப்படி இந்திர புத்திரனோ, அவ்வாறே நீ சூர்ய புத்திரன். பாண்டவர்கள் ஐவரும் உன் தம்பிமார்கள். நீயும் எனக்கு அத்தை மகன் தான்...’ என்றார் கிருஷ்ணர். ‘கேட்க ருசிகரமான தகவலாக இருந்தாலும், இத்தகவல் எனக்கு எவ்வித மகிழ்ச்சியையும் கொடுக்கவில்லை மாதவரே...’ ‘கவுந்தேயா... பாண்டவர்களது ராஜ்யம், உனக்கு உரிய ராஜ்யம். ஒருக்கால், பாண்டவர்களில் நீ தான் மூத்தவன் என்பது துரியோதனனுக்கு தெரியவந்தால், அவன் போர் புரிய முன் வர மாட்டான்; யுத்தத்தினால் ஏற்படும் பேரழிவை தடுத்து விட முடியும். ‘இந்திர பிரஸ்தத்தின் அரியாசனத்தில் உன்னை அமரச் செய்வது என் பொறுப்பு. யுவராஜாவாக உனக்கு உதவியாக இருப்பார் யுதிஷ்டிரர்; பீமன் குடை பிடிப்பான்; அர்ஜுனன், உம் தேரை ஓட்டுவான்; நகுல, சகாதேவர்கள் உமக்கு பணிவிடை புரிவர்; நானும் உனக்கு பக்க பலமாக இருப்பேன்.
‘எந்த பாஞ்சாலி உம் குலத்தை கூறி, உன்னை மணக்க மறுத்தாலோ, அவள் உனக்கு மனைவியாவாள்; உன்னை ஈன்றெடுத்த குந்தியும், மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்வாள்...’ என்றார் கிருஷ்ணர். ‘மதுசூதனரே... அன்று, குந்தி தேவியார் என்னை ஆற்றிலே விட்ட பின், தேர்ப்பாகர் அதிரதன் தான் காப்பாற்றினார்; அவர் மனைவி என்னை மார்போடு வாரியணைத்து முத்தமிட்ட போது, அவள் மார்பகத்தில் பால் சுரந்தது. அவள் அல்லவா என் தாய்; அந்த அதிரதன் அல்லவா என் தந்தை. எனக்கு நாமகரணம் செய்து வைத்து, வாழ்க்கை துணைவியை தேடி தந்தவர்கள் இவர்கள். இந்த ஜென்மத்தில் அதிரதனும், ராதையும் தான் என் பெற்றோர். ‘இன்று நீர் ஆசை காட்டுவது போல, அவனியை ஆள்வதற்காக, அவர்களை என் பெற்றோர் இல்லை என்று உதறித் தள்ள மாட்டேன். அத்துடன், துரியோதனன், பாண்டவர்களை பகைத்து கொள்ள துணிந்ததே, நான் இருக்கும் தைரியத்தில் தான்! அப்படிப்பட்ட நண்பனுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன். யுதிஷ்டிரனுக்கு நான் உடன் பிறந்த மூத்தவன் என்ற உண்மை தெரிய வரும் போது, அவன் ராஜ்ய பாரத்தை என்னிடம் ஒப்படைப்பான் என்பது எவ்வளவு சத்தியமோ, அவ்வளவு சத்தியம், எனக்கு கிடைக்கும் அந்த ராஜ்ஜியத்தை, துரியோதனனின் காலடியில் நான் சமர்ப்பித்து விடுவேன் என்பதும்!
‘மதுசூதனரே... என் ஆரூயிர் நண்பனுக்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டேன். என் உடன் பிறந்தவர்களான பாண்டவர்களை விட, துரியோதனனே எனக்கு உயிரினும் மேலானவன். என் பிறப்பின் ரகசியத்தை இன்று என்னிடம் கூறியது போல, வேறு யாரிடமும் சொல்லி விடாதீர்கள். யுத்தத்தில் மிகவும் முனைப்போடு இருக்கும் நான், இன்னொரு உண்மையையும் அறிவேன். நடக்க இருக்கும் போரில், கவுரவர்கள் தோற்பது நிச்சயம்; உம் பாதுகாப்பில் இருக்கும் பாண்டவர்களை, யாராலும் வெல்ல முடியாது என்பதையும் அறிவேன். அத்துடன், நானும், இந்த யுத்தத்தில் கொல்லப்படுவேன் என்பதும் தெரியும். ‘ஆனால், நான், என் ஆரூயிர் நண்பனுக்காக, அர்ஜுனனை எதிர்த்து, கடும் யுத்தம் செய்வேன். யுத்தத்தில் வீர மரணம் அடைந்து, வீர சுவர்க்கம் புகுவேன். இப்போது விடை பெறுகிறேன்; அடுத்த நம் சந்திப்பு போர்க்களத்தில் தான்...’ என்று தேரிலிருந்து குதித்த கர்ணன், கண்ணனை திரும்பிக் கூட பார்க்காமல் நடந்தான். உடன் பிறப்புகளையும், தனக்கு உருக்கொடுத்த தாயையும் ஒரு பொருட்டாகவே மதிக்காமல், உலகையே ஆளும் வாய்ப்பு அவன் காலடியில் கிடக்கும் போதும், அதை, காலால் எட்டி உதைத்து, உற்ற நண்பனுக்காக, உயிர் துறக்க தயாராகி, வீர நடைபோட்டு செல்லும் கர்ணனையே, வியந்து நோக்கியவாறு நின்றார் வாசுதேவர்!
|
|
|
|