|
ஆஞ்சநேய பக்தன் ஒருவன் மாட்டு வண்டியில் தானிய மூடைகளை ஏற்றிச் சென்றான். மழை காலம் என்பதால் வழியெங்கும் சேறாக இருந்தது. மாடுகளால் வண்டியை இழுக்க முடியவில்லை. ஓரிடத்தில் சேற்றில் சக்கரம் சிக்கிக் கொண்டதால், வண்டி குடை சாய்ந்து, நெல் மூடைகள் சரிந்தன. வண்டிக்காரன் வண்டியை நகர்த்த முயற்சி செய்யாமல், ஆஞ்சநேயா! இங்கிருந்து வண்டி நகர ஏதாவது வழி செய், என்று பிரார்த்தித்தான். ஆஞ்சநேயர் பெயரைச் சொல்லி பலமுறை கூவினான். ஆனாலும், வண்டி நகர்ந்த பாடில்லை. பொறுமை இழந்த அவன், தன்னைக் காப்பாற்ற வராத ஆஞ்சநேயரைத் திட்டத் தொடங்கினான். அப்போது அவன் முன் தோன்றிய ஆஞ்சநேயர்,சக்கரத்தை சரிபடுத்தும் பலம் உனக்கு இருந்தும், அதை சரி செய்யாமல் என்னை எதிர்பார்த்து நிற்கிறாயே. மந்திரத்தால் மாங்காய் வந்திடுமா? முயற்சியில் முழு மூச்சாக ஈடுபடு. எல்லாம் நலமாக அமையும், என்று அறிவுரை சொல்லி மறைந்தார். பக்தனும் தவறை உணர்ந்தான். தோள்களால் வண்டியைத் தாங்கி இழுத்தான். சிறிது நேரத்தில் சக்கரம் சேற்றில் இருந்து மெல்ல நகர்ந்து வெளி வந்தது. முயற்சி செய்தால் தான் கடவுள் அருள் செய்வார் என்பதை உணர்ந்த வண்டிக்காரன், ஆஞ்சநேயரை வழிபட்டு புறப்பட்டான். |
|
|
|