|
ஒரு நாட்டில், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மழையே பெய்யவில்லை. பஞ்சத்தால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். பயிர் பச்சைகள், புல்பூண்டுகள் வாடிக் கருகின; குடிப்பதற்குக் கூட தண்ணீர் இல்லை. ஆடு, மாடுகள் பல இறந்துபோயின.இந்த நிலையில், மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த துன்பத்தை எப்படி போக்குவது? என்று அரசன் யோசனை செய்தான். பஞ்சம் நீங்குவதற்கு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டும் என்று விரும்பினான்.உடனடியாக அரசவையைக் கூட்டி, ராஜகுரு உட்பட அரண்மனை அதிகாரிகளையும், பண்டிதர்களையும் வரவழைத்தான். அனைவரும் ஆலோசனை நடத்தினார்கள். பிரச்னைக்குராஜகுரு ஒரு பரிகாரம் கூறினார். மழைக்குத் தேவதை இந்திரன். இந்திரனை மகிழ்வித்துத் திருப்தி செய்தால்தான் மழை பெய்யும். இந்திரனின் மனம் மகிழ வேண்டுமானால், அதற்கு நரபலியிட்டு யாகம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை.அந்தப் பரிகாரம் அவ்வளவு சுலபத்தில் நிறைவேற்றக் கூடியதாக இல்லை.
வேறு ஒரு வழியும் இல்லாததால், அரசன் உட்பட அனைவரும் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. யாகத்திற்கு நாளும் குறித்து விட்டனர்.நாடு முழுவதும் தண்டோரா போட்டு, யாகம் நடத்த இருக்கும் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். யாகம் நடக்கவிருந்த நாளன்று, தலைநகரத்தில் எள் விழ இடமின்றி, மக்கள் ஏராளமாகக் கூடினார்கள். யாகம் நல்லவிதமாக நடந்து, மழை பெய்து நாட்டில் பஞ்சம் நீங்க வேண்டும் என்ற ஆவலும், நரபலிக்குத் தன்னைப் பலி கொடுப்பதற்கு யார் முன் வரப்போகிறார் என்ற பரிதவிப்பும் மக்கள் முகங்களில் பிரதிபலித்தது.நரபலி கொடுக்க வேண்டிய நேரம் நெருங்கியது. ராஜகுரு எழுந்து நின்றார். மக்கள் பார்வை முழுவதும் அவர் மேலேயே பதிந்து லயித்திருந்தது. மக்கள் வைத்த கண் வாங்காமல், ராஜகுரு என்ன சொல்லப் போகிறார்? என்பதைக் கேட்பதற்கு அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ராஜகுரு குழுமியிருந்த மக்களை நோக்கிக் கூறினார்:மக்களே! நமது நாட்டின் நலனுக்காக இன்றைய தினம் இந்த யாகம் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறோம் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
யாகம் முழுஅளவில் சிறப்பாக நடைபெற்றால் தான், நாட்டில் மழை பெய்து பஞ்சம் நீங்கும். இதில் நரபலி என்பதும் நடைபெற வேண்டிய முக்கியமான ஓர் அம்சமாக இருக்கிறது. நரபலிக்குத் தன்னையே ஒப்படைத்து, யாகத்தை நடத்திக் கொடுக்க முன்வருபவர் வரலாம், என்று அறிவித்தார்.அவர் பேசி முடித்ததும், கூட்டத்தில் அமைதி நிலவியது. தன்னைப் பலியாகக் கொடுப்பதற்கு யார் முன் வரப்போகிறார்? என்ற எண்ணம் அனைவரின் உள்ளத்தையும் சூழ்ந்திருந்தது. சிறிய தியாகம் என்றால் செய்யலாம்; தன்னையே பலி கொடுப்பது என்றால்...?யாருமே தன்னை பலி கொடுக்க முன்வரவில்லை.அப்போது, அங்கே நிலவிய மயான அமைதியைக் கிழித்துக்கொண்டு, ஒரு சிறுவனின் குரல் பலமாகக் கேட்டது. மக்களின் பார்வை குரல் வந்த திசையை நோக்கித் திரும்பியது.இதோ! நமது தாய்நாட்டின் நன்மைக்காக, என்னையே நான் பலி கொடுக்க முன் வருகிறேன். என்னைப் பலியிட்டு யாகத்தை நடத்தி முடியுங்கள். அதன் மூலம் மழை பெய்து நாட்டிற்கு நன்மைகள் ஏற்படட்டும்!பன்னிரண்டே வயது நிரம்பிய சிறுவன் சதமன்யு தான், இவ்விதம் கூறியபடி யாகசாலையை நோக்கி நடந்து வந்தான்.சதமன்யுவைப் பெற்றெடுத்த தாய் அருகிலேயே இருந்தாள். அவள், மகனே! என் கண்மணி சதமன்யு!
உன்னை நான் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியை விடவும், இப்போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்! என்று கூறி, அவனை ஆசீர்வதித்து வாழ்த்தி அனுப்பி வைத்தாள்.சதமன்யுவின் தந்தையும் அருகில் நின்றார். கண் எதிரில், தன் மகன் பலியாகப் போகிறான்...! ஆனால், அவரும் எந்த சலனத்திற்கும் ஆளாகாமல், மகனுக்கு ஆசி கூறினார். மக்களுக்கு ஒரே ஆச்சரியம்! ஒரு சிறிய பையன் நாட்டின் நலனுக்காகத் தானாகவே மரணத்தை ஏற்றுக்கொள்ள முன்வருகிறான்! இப்படி ஒரு பையன்... இப்படி ஒரு தாய்... இப்படி ஒரு தந்தை...! சதமன்யு பலிமேடையில் ஏறி நின்றான். சில விநாடிகளில் அந்தச் சிறுவனின் தலை தரையில் உருண்டு விடும்!சதமன்யுவின் தலை வெட்டப்படும் சமயத்தில் அங்கு ஓர் அற்புதம் நிகழ்ந்தது. வானம் இருண்டு திரள்திரளாக மேகம் சூழ்ந்தது! பளீர், பளீர்! என்று மின்னல்கள் மின்னின. மலையோடு மலை மோதுவது போல், பெரிய பெரிய இடிமுழக்கங்கள் நான்கு திசைகளிலும் கேட்டன.அப்போது அதே சமயத்தில் யாகமேடையில் ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. சதமன்யு மீது பூமாரி பொழிந்து கொட்டியது! மழைக்கு அதிதேவதையான இந்திரனே அங்கு தோன்றினான்!மக்கள் இந்திரனை வீழ்ந்து பணிந்தார்கள்.இந்திரன் மக்களைப் பார்த்துக் கூறினார்:நாட்டு மக்களின் நலனுக்காக சதமன்யு தன்னையே பலி கொடுக்க முன் வந்தான்.
அவனுடைய தியாக உள்ளம் என் மனதை நெகிழச் செய்து விட்டது. இவனைப் போன்ற தியாகச் செல்வங்களைப் பெற்றெடுத்த ஒரு நாடு, இனியும் பஞ்சத்தால் வாடுவது நியாயமில்லை. ஆதலால், நான் இன்று நரபலி இல்லாமலேயே, யாகம் சிறந்த முறையில் நடைபெற்றதாக ஏற்றுக் கொண்டேன். மழையையும் தேவையான அளவுக்குப் பெய்விக்கிறேன்.இத்தகைய சதமன்யுவைப் போன்றவர்களும், வீரத்துறவி சுவாமி விவேகானந்தரைப் போன்றவர்களும், பிறந்தும் வளர்ந்தும் நடமாடியும் மக்களை வாழ வைத்த புண்ணிய பூமிதான் நமது பாரத தேசம். நாம் அவர்களுடைய பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அதைக் குறித்து நாம் எவ்வளவு வேண்டுமானாலும் பெருமை கொள்ளலாம். அவர்களைக் குறித்து நாம் பெருமை கொள்வதைப்போல, நம்மைக் குறித்து நமக்குப் பின்வரும் சந்ததியினரும் பெருமை கொள்ள வேண்டாமா? அதற்குரிய உயர்ந்த தியாக வாழ்க்கையை நாமும் வாழ வேண்டாமா? இப்படி எல்லாம் தம்பி, தங்கைகள், பெரியவர்களைக் குறித்துப் படிக்கும்போதும் கேட்கும்போதும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதுவே உங்களிடம் என்னுடைய பிரார்த்தனை.நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை. |
|
|
|