|
புத்தருக்கு ஏராளமான சீடர்கள் இருந்தனர். வயதான
பின் தன்னைக் கவனித்துக்கொள்ள அந்தரங்க சீடராக ஒருவரை நியமிக்க எண்ணினார்.
அதற்காக சீடர்கள் நான், நீ என்று முந்தினர், யாரையும் புத்தர்
கண்டுகொள்ளவில்லை. ஆனால் அவரின் பார்வை ஒரு சீடர் மீது மட்டும்
பதிந்திருந்தது. அவரிடம் ஆனந்த் தீர்த்தரே! என்னைக் கவனித்துக்கொள்ளும்
சீடராக வருவீரா? என்றார் புத்தர். ஆனால் ஆனந்த் தீர்த்தரோ, பகவானே!
தங்களுக்கு அந்தரங்க சீடராய் நான் இருக்க வேண்டுமெனில் என்
நிபந்தனைகளுக்குக் கட்டுப்படவேண்டும் என்று கூற, அனைவரும் அதிர்ந்தனர்.
புத்தரோ புன்கைத்தபடி, சொல்லுங்கள்... என்றார். பகவானே! உங்களுக்கு யாராவது
நல்ல உணவைக் கொடுத்தால் அதில் எனக்குப் பங்கு தரக்கூடாது. நல்ல ஆடைகள்
கிடைத்தால் அதையும் எனக்குத் தரலாகாது. தாங்கள் உடுத்திக் கிழிந்த கந்தலாடை
மட்டுமே எனக்குப் போதும், தாங்கள் என்னை நல்வழிப்படுத்த வேண்டும்! என்றார்
சீடர் ஆனந்த். அவரையே தன் அந்தரங்க சீடராக ஏற்றார், புத்தர். |
|
|
|