|
வீணையை முதன்முதல் கையாண்டவர் இறைவனே. அவன் தர, அதனை அன்புடன் ஏற்று அதில் இன்னிசை எழுப்பியவள் சரஸ்வதி. சரஸ்வதியே நாரதருக்கு அளித்திருக்கிறாள். அவரிடம் இருந்து வான்மீகி ரிஷி பெற்று அதை மீட்டும் கலையை லவ குசர்களுக்குக் கற்பித்திருக்கிறார். இந்த குசலவர்களே ராமாயணத்தை வீணையில் இசைத்துப் பாடி அயோத்தி நகர மக்களையும் ராமனையும் மகிழச் செய்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர அனுமனும் அகத்தியரும் வீணையைக் கையாள்வதில் சிறப்பானவர்கள் என்கின்றன பழந்தமிழ் நூல்கள். இலங்கேஸ்வரனான ராவணன் வீணை வாசிப்பதில் சிறந்தவனாக இருந்திருக்கிறான். அன்று அவன் கயிலையை அசைத்து அதன் கீழ் அகப்பட்டுக் கொண்டபோது வீணையை இசைத்தே இறைவனை மகிழ்வித்து விடுதலை பெற்றிருக்கிறான்.
மற்ற இசைக் கருவிகளுக்கு இல்லாத சில தனிச்சிறப்புகள் இந்த வினைக்கு உண்டு. வீணையின் ஒலி அலைகள் வீணை வாசித்து முடித்த பின்னும் அடுத்தடுத்துப் பரவி நிற்கும் இயல்புடையது. இசையின் தசவித சமகங்களையும் ராகத்தின் சாயையையும் அப்படியே காட்டவல்லது வீணை ஒன்றே. அதனாலேயே மாணிக்கவாசகர் இறைவனுக்கு திருப்பள்ளி எழுச்சி பாடுகின்றபோது, இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால், இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால். என்று இன்னிசை வீணையரை முதலிடத்தில் வைத்திருக்கிறார். வீணை ஏந்திய தெய்வத் திருவுருவங்களில் முதன்முதல் நம் எண்ணத்தில் வருபவர் வீணாதீர தட்சிணாமூர்த்திதான். இந்த வீணாதரனின் சிறந்த வடிவினைக் காண நாம் தஞ்சைக் கலைக் கூடத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு அவர் செப்புச் சிலை வடிவில் நின்று கொண்டு வீணை வாசிப்பார். வீணை இராது அவர் கைகளில் என்றாலும், வீணையின் ஒலி மட்டும் நம் உள்ளமாம் வீணையை மீட்டும் இன்னிசையைக் கேட்கத் தவற மாட்டோம். கொடும்பாளூர் மூவர்கோயில், தொண்டைமான் புதுக்கோட்டையில் உள்ள பொருட்காட்சி சாலை ஆகிய இடங்களிலும் வீணாதரனைக் காணலாம்.
சரஸ்வதி வீணை வாசிக்கும் கோலங்கள் எத்தனை எத்தனையோ; சிறப்பான வடிவம் இருப்பது கங்கைகொண்ட சோழபுரத்திலே. இந்தக் கலைமகள் கைகளில் வீணை ஏந்தியிருக்கமாட்டாள். வீணை ஏந்திய சரஸ்வதி, சுவாமி மலையில் சாமிநாதன்கோயில் மேலப் பிராகாரத்தில் இருக்கிறாள். காலத்தால் பிந்தியவள்தான் என்றாலும் நல்ல கலை அழகு வாய்ந்தவள். திருச்செங்கோட்டு மலைமீதுள்ள அர்த்த நாரீச்வர் கோயிலிலே, அவள் நிற்கின்ற ஒயில், கையில் வீணை ஏந்தியிருக்கின்ற நேர்த்தி எல்லாம் மிகமிக அழகானது. இவர்களைப் போன்று வீணை ஏந்திய நாரதரை, ஸ்ரீரங்கத்து அரங்கன் சன்னிதியை அடுத்த வேணுகோபாலன் கோயிலில் தரிசிக்கலாம். இவர் வீணையை ஏந்தி நிற்கிறாரே ஒழிய, வாசிக்கக் காணோம்! யாருக்கோ உபதேசிக்கும் நிலையில் நின்றுகொண்டிருக்கிறார். |
|
|
|