|
ஒரு சமயம் சுவாமிஜி ரயிலில் முதல் வகுப்பு வண்டியில் செல்ல அனுமதி சீட்டுப் பெற்றார். வண்டியில் தம் உடைமைகளைத் தம் அருமைச் சீடர் அளசிங்கர் பொறுப்பில் விட்டுவிட்டு வெளியே சென்றார். அப்போது ஓர் ஆங்கிலேயன் முதல் வகுப்பில் ஏற வந்தான். சுவாமிஜியின் பொருள்களை அப்புறப்படுத்தச் சொன்னான். அளசிங்கர் மறுத்துவிட்டார். கோபத்தில் ஆங்கிலேயன் அளசிங்கரின் சிண்டைப் பிடித்தப்படி பொருள்களை எடுத்து வெளியே போடுகிறாயா, இல்லையா? என்று கத்தினான். தனது உதவியாளனையும் அழைத்தான். ஆங்கிலேயன் சிண்டைப் பிடித்ததால் ரோஷம் வலி, அதைவிடத் தமது குருவை அவமதிப்பதால் வந்த ஆத்திரம், கோபம் வேறு, அளசிங்கருக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை.
சுவாமிஜியின் அனுமனல்லவா அளசிங்கர்! உடனே சிண்டைப் பிடித்திருந்த கையைக் கடித்தேவிட்டார். நரசிங்கமாக மாறி. வலியில் துடித்து அலறினான் ஆங்கிலேயன். இதற்குள் சுவாமிஜியும் நண்பர்களுடன் அங்கு வந்து சேர்ந்தார். ஆங்கிலேயன் அரண்டு விட்டான். உடனே தன் உதவியாளனுடன் அங்கிருந்து அகன்றான். சிண்டைப் பிடித்து இழுத்த வலி தாங்க முடியாமல் கையைக் கடிக்க வேண்டியதாயிற்றே சுவாமிஜி என நாத் தழுதழுக்கக் கூறினார் அளசிங்கர். சுவாமிஜியோ, சபாஷ் நீ செய்தது சரியே, அவனுக்கோ அரசு பலத்துடன் ஆள்பலம் வேறு. உனக்கோ ஒன்றுமே இல்லை. ஆகவே இத்தகைய சூழ்நிலையில் உன்னால் வேறு என்ன செய்ய முடியும்? இப்படி நீ செய்யவில்லை எனில் உன் மனைவியே உன்னை ஏளனம் செய்யமாட்டாளா? என்று அளசிங்கரைத் தட்டிக் கொடுத்தார் சுவாமிஜி. |
|
|
|