|
பிரார்த்தனை அல்லது வேண்டுதல் என்பது இறைவனுடன் நாம் தொடர்பு கொள்வதற்கான மகத்தான சாதனம். பிரார்த்தனை மூலம் இறைவனுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு அவரது ஆற்றலையும் ஒளியையும் கருணையையும் பெற முடியும் என்பது சுவாமி விவேகானந்தரின் ஆழமான கருத்து. பசியால் அழும் குழந்தை தாயிடம் பால் கேட்கும் ஆனால் ஞானப்பசி வராத நாம் யாரிடம் பிரார்த்தனை செய்வது? சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். கடவுளிடமும், அவரது தூதர்களிடமும், உலகைக் காக்க வந்த மகான்களிடமும், ஆன்மாவிடமும் உதவி கோரிப் பிரார்த்தனை செய்யுங்கள். இறைவனிடம் சுவாமிஜி, ஓ கவுரிமணாளா, ஓ உலக நாயகியே, எனக்கு ஆண்மையைக் கொடு; அம்மா, எனது பலவீனத்தைப் போக்கு; என் கோழைத்தனத்தைப் போக்கு! என்னை மனிதனாக்கு என்று வேண்டுகிறார். இறைவனிடம் என்ன வேண்டிப் பிரார்த்திக்கலாம்? வேதம் ஒரு பொதுப் பிரார்த்தனையை வடிவமைத்துக் கொடுத்துள்ளது.
எல்லோரும் ஆனந்தமாக இருக்கட்டும். அனைவரும் நோயிலிருந்து விடுபடட்டும்; மங்களம் உண்டாகட்டும். எவருக்கும் எந்தவிதத் துக்கமோ, கஷ்டமோ உண்டாகாமல் இருக்கட்டும். இறைவா என்னை உண்மை அல்லாதற்றிலிருந்து உண்மைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும், மரணத்திலிருந்து மரணமிலாப் பெருவாழ்வுக்கும் இட்டுச் செல்லுங்கள் என்று பிருஹதாரண்ய உபநிஷதமும் கூறுகிறது. இறைவனிடம் உயர்ந்த பொருளையே கேட்டுப் பெற வேண்டும். புலன்களைக் கவரும் அற்பப் பொருளையா கேட்பது? அற்பமான பலவித ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காக, கீழ்நிலைக்கு இறங்கி முட்டாள்தனமாகப் பிரார்த்தனை செய்யக் கூடாது. என்கிறார் சுவாமிஜி. இவ்வாறு கூறும் சுவாமிஜி, ஒருவன் கடவுளிடம் எனக்கு இதைத் தா, அதைத் தா, என்று கேட்பது எப்படி உண்மையான அன்பாகும் என வினவுகிறார். நான் உன்னிடம் வேண்டுகிறேன். அதற்குப் பதிலாக இவற்றைத் தா என்று கேட்பது கடைக்காரனிடம் வியாபாரம் செய்வதேயன்றி வேறென்ன? என்றும் சாடுகிறார்.
உண்மையான பக்தர்களின் வேண்டுதல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சுவாமிஜி ஓ இறைவா! என்னிடம் எதுவுமில்லை. எனவே எனது இந்த உடலையும் மனதையும் உன் காலடியில் சமர்ப்பிக்கிறேன். என்னைக் கைவிட்டு விடாதே பிரபோ என்று பக்தன் தன் இதய ஆழத்திலிருந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்கிறார். அதே சமயம் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். எனக்கு உடல் நலத்தைத் தா, பொருள் வளத்தைத் தா என்று பிரார்த்திப்பது பக்தியல்ல. அது வெறும் கருமம் அல்லது உயரிய சடங்கு என்றும் கண்டிக்கிறார். பிரார்த்தனைகளின் பல்வேறுநிலைகள் என்னென்ன? சுவாமிஜி சொல்கிறார். இறைவனைப் போற்றுவதும், பிரார்த்திப்பதும் நமது வளர்ச்சிக்கு வழிகள். பிரார்த்திப்பதற்கு வார்த்தைகள் தேவையில்லை. மவுனமே நலம். வடிவமைக்கப்பட்ட சொற்களால் பிரார்த்தனை செய்வதென்பது செயற்கையாக அமையும். தியானமும் ஒருவகைப் பிரார்த்தனைதான். பிரார்த்திப்பதும் தியானத்திற்குச் சமம்தான். பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் தியானத்தின் ஆரம்ப நிலைகள்.
பிரார்த்தனைகளும் தலயாத்திரைகளும் நமது உள்ளத்தைச் சுத்திகரிக்கும் சாதனங்கள். நீங்கள் உயரிய நிலையை அடையும் போது உங்களது மூச்சுகூடப் பிரார்த்தனையே. நமது எல்லா நல்ல எண்ணங்களும், பிரார்த்தனைகளும் நமது மிருக சக்தியின் ஒரு பகுதியை ஓஜஸ் சக்தியாக மாற்றி, நமக்கு ஆன்மிக சக்தியை அளித்து உதவுகின்றன. ஸ்ரீராமகிருஷ்ணரின் அறிவுரைப்படி, சுவாமிஜி தன் குடும்பத்து வறுமையை விலக்கும்படி காளி தேவியிடம் கேட்க வேண்டும் என எண்ணிக் கொண்டு மூன்று முறை போன போதும் முடிவில் என்ன கேட்டார் தெரியுமா? அம்மா! எனக்கு வேறெதுவும் வேண்டாம். ஞானத்தையும் பக்தியையும் மட்டும் தந்தருள். சுவாமிஜி நமக்காகப் பிரார்த்திக்கிறார். துறவின் உயர்நிலையில் திளைத்த சுவாமிஜியின் பிரார்த்தனை என்னவாக இருந்திருக்கும்? அவரே சொல்கிறார். உலக நன்மைக்காக போராடிக் கொண்டிருக்கும்போதே ஒரு வீரனைப் போல் நான் உயிர் விட வேண்டும். எப்போதும், எவ்விடத்தும் உங்களை இறைவன் ஆசீர்வதிக்கட்டும். இதுவே இந்த விவேகானந்தனின் தொடர் பிரார்த்தனை.
அறியாமையில் மூழ்கித் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இந்திய மக்களுக்காக உங்கள் இதயங்கள் இரங்கித் துடிக்குமாறு இறைவன் அருள வேண்டும் என்பதே இந்த விவேகானந்தனின் பிரார்த்தனை. |
|
|
|