|
சீதை அசோகவனத்தில் இருந்த போது,அவளுக்கு அரக்கிகள் பலவிதமாக துன்பம் அளித்தார்கள். ராவண வதம் முடிந்தது. அனுமன்,சீதையைத் துன்புறுத்திய அரக்கியர்களுக்குச் சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்தான். அதற்கு அவன் சீதையிடம் அனுமதி வேண்டினான். அப்போது அனுமனுக்குசீதை பின்வரும் ஒரு கதையைக் கூறினாள்: வேடன் ஒருவன், காட்டிற்குள் நடந்து கொண்டிருந்தான். எதிர்பாராத விதமாக ஒரு புலி, வேடனைத் துரத்தியது. வேடன் மிகவும் பயந்துவிட்டான். தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகஅருகில் இருந்த ஒரு மரத்தின் மீது ஏறிக்கொண்டான். வேடன் ஏறிய மரத்தின் மேல் கிளையில் ஒரு கரடி உட்கார்ந்திருந்தது. கரடியைப் பார்த்த வேடன் அதனிடம், ஒரு புலி என்னைத் துரத்தி வருகிறது. இந்த ஆபத்திலிருந்து என்னை நீதான் காப்பாற்ற வேண்டும். நான் உன்னிடம்சரணடைகிறேன் என்று கூறி சரணடைந்தான். தன்னிடம் சரணடைந்த வேடனிடம் கரடி,நீ பயப்படாதே! உன்னை நான் காப்பாற்றுகிறேன், என்று வாக்குறுதி அளித்தது. இதற்குள் வேடனைத் துரத்தி வந்த புலி, அந்த மரத்தின் கீழ் வந்து நின்றது. புலி அந்த இடத்தைவிட்டுப் போகாமல்,அங்கேயே நின்றுகொண்டிருந்தது. சிறிது நேரம் ஆயிற்று. வேடனுக்குத் துõக்கம் வந்தது. வேடன் கரடியின் மடியில் தலைவைத்து, தன்னை மறந்து துõங்கிக்கொண்டிருந்தான்.
அப்போது மரத்தின் கீழே நின்றுகொண்டிருந்த புலி, மரத்தில் உட்கார்ந்திருந்த கரடியிடம்,நண்பனே! நாம் இருவரும் மிருகங்கள், ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். நம் இருவருக்கும் தொடர்பு இருக்கிறது. இவனோ மனிதன், அதிலும் வேடன்.. நம் இருவருக்கும் ஜென்மப் பகைவன். இவன் நம்மைக் கொல்வதையே தன் தொழிலாகக் கொண்டிருக்கிறான். இவன் நமது இனத்தைச் சேர்ந்தவன் அல்ல, நாம் வாழும் இடத்தில் வாழ்பவனும் அல்ல. இன்றைய தினம் நீஇவனைக் காப்பாற்றினாலும் - அதை மறந்துவிட்டு, நாளைய தினமே இவன் உன்னைக் கொல்வதற்கு முயற்சி செய்வான். எனவே, நீஇந்த வேடனை என்னிடம் பிடித்துத் தள்ளிவிடு. அதனால் நமக்குப் பெரிய ஓர் ஆபத்து நீங்கும், என்று கேட்டுக்கொண்டது. புலி கூறியதைக் கேட்ட கரடி, இது என்ன அநியாயம்? நான் இருக்கும் இடத்தைத் தேடி வந்து, இந்த வேடன் என்னிடம் சரணடைந்திருக்கிறான். அத்தகைய வேடனை நான் கைவிடக் கூடாது, கைவிடவும் மாட்டேன். அப்படிகைவிட்டால், எனக்கு இந்த உலகத்தில்,நண்பனுக்குத் துரோகம் செய்தவன் என்ற கெட்ட பெயர் ஏற்படும். அதோடு, மறுஉலகத்தில் கடுமையான நரகமும் கிடைக்கும். எனவே நீ சொல்வதுபோல், செய்ய மாட்டேன், என்று கூறியது.இந்த உரையாடலுக்குப் பிறகு, துõங்கிக்கொண்டிருந்த வேடன் உறக்கம் கலைந்து கண் விழித்தான். இப்போது கரடிக்குத் துõக்கம் வந்தது.அது வேடன் மடியில் தன் தலையை வைத்து துõங்க ஆரம்பித்தது. கரடி நன்றாகத் துõங்கிக் கொண்டிருந்தது.
அப்போது மரத்தின் கீழே இருந்த புலி வேடனிடம், முட்டாளே! என்னிடமிருந்து தப்பவேண்டும் என்று நீ போயும் போயும் ஒருகரடியிடம் சரணடைந்திருக்கிறாயே! கரடி என்ன.. உன் மனிதஇனத்தைச் சேர்ந்ததா? அது உன்னுடைய நண்பனா? கரடி உன்னுடைய பகைவன் என்பதை நீ சரியாகப் புரிந்துகொள். நான் எப்போது இந்த மரத்தின் கீழிருந்து போவேன் என்று, இந்தக் கரடி காத்துக் கொண்டிருக்கிறது! நான்இங்கிருந்து சென்றதும், உடனே கரடி உன்னைக் கொன்றுவிடும்! கரடியின் உறக்கம் கலைவதற்கு முன்பு, அதைப் பிடித்து நீ என்னிடம் தள்ளிவிடு. நான் உனக்குப் பதிலாக அதை தின்றுவிட்டு, இங்கிருந்து சென்று விடுகிறேன். அதனால் நம் இருவருக்கும் நன்மை ஏற்படும், என்று கூறியது. புலி கூறியதைக் கேட்ட வேடன் மயங்கினான். அவனுக்குக் கரடியிடம் இருந்தநம்பிக்கை போய்விட்டது. எனவே அவன் கரடியை மரத்திலிருந்து கீழே தள்ளிவிட்டான்! கீழே விழும்போதே கரடிக்குத் துõக்கம் கலைந்தது. அதனால் அது தன் இயல்பு காரணமாகஒரு கிளையைப் பிடித்து, மீண்டும் மரத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டது. இதை வேடன் பார்த்தான்.அப்போது அவன், கரடிக்கு நான் செய்த துரோகம் இப்போது தெரிந்துவிட்டது. அதனால் அது இப்போது என்னைக் கொன்றுவிடப் போகிறது! என்று நினைத்து பயந்து நடுங்கினான். வேடன் பயப்படுவதை கரடி புரிந்துகொண்டது. எனவே அது வேடனிடம்,நண்பனே! நீ பயப்படாதே... நீ எனக்குத் துரோகம் செய்தாய், என்று நான் நினைக்கவேமாட்டேன்.
நான் உன்னைக் காப்பாற்றுவதாக வாக்கு கொடுத்திருக்கிறேன். அதை நிச்சயம் காப்பாற்றுவேன். நான் வாக்குத் தவறமாட்டேன் என்று கூறியது. அப்போது புலி கரடியிடம், நண்பனே! நான் கூறியது போலவே நடந்ததை நீயே பார்த்தாய் அல்லவா? இந்த வேடன் நன்றி இல்லாதவன், செய்நன்றி கொன்றவன் - நண்பனுக்குத் துரோகம் செய்பவன் என்று, இப்போதாவது நீ தெரிந்துகொண்டாயா? இனியும் இவன் மீது நீ இரக்கம் காட்டாமல், இவனை என்னிடம் தள்ளிவிடு, என்றது. அதற்குக் கரடி, தீய இயல்பு உடையவர்கள், மற்றவர்களுக்குத் தீமை செய்தாலும், அறிவுள்ள ஒருவன், தீமை செய்தவர்களைப் பகைத்துக் கொள்வானா? நான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதுதான் எனக்குப் பெரிதே தவிர, என் உயிர் எனக்குப் பெரிதல்ல. உலகில் பிறவி எடுத்தவர்களுக்கு அணிகலனாக இருப்பதுசத்தியம் மட்டுமே! என்று பதில் கூறியது. சொன்னபடி கரடி வேடனைக் காப்பாற்றியது. இந்தக் கதையை சீதை அனுமனுக்குக் கூறிவிட்டு, ஆஞ்சநேயா! நான் என்ன மிருகத்தைவிடத் தாழ்ந்தவளா? நமக்கு நன்மையைச் செய்தவர்களிடம், நாம் எப்படி அன்பு பாராட்டி அவர்களுக்கு உதவி செய்கிறோமோ, அது போலவே நமக்குத் தீமை செய்தவர்களுக்கும் நாம் உதவி செய்யவேண்டும். நமக்கு உதவி செய்தவர்களுக்கு நாம் உதவி செய்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. நமக்குத் தீமை செய்பவர்களுக்கு உதவி செய்வது தான் சிறப்புக்கு உரியது, என்று கூறி, அரக்கியர்களை மன்னிக்கும்படிச் செய்தாள். |
|
|
|