|
ஸ்ரீரமண மகரிஷி விருபாக்ஷ குகையில் பழனி சுவாமியுடனும், பெருமாள் சுவாமியுடனும் தங்கியிருந்த காலம். ஒரு நாள் அவர்கள் இருவரும் வெளியே சென்றிருந்தார்கள். பகவான் மட்டும் தனியே இருந்தார். அச்சமயம் நாலைந்து முரட்டு பைராகிகள் குகைக்குள் புகுந்து பகவானிடம் அதிகாரமாக, நாங்கள் விந்தியமலைச் சாரலிலிருந்து வருகிறோம். அங்குள்ள மகா சித்தர்கள் எங்களுக்குத் தரிசனம் தந்தனர். விருபாக்ஷ குகையிலிருந்து உங்களை உடனே அழைத்து வருமாறு எங்களுக்குக் கட்டளை. புறப்படுங்கள் என்றனர். பகவான் அசைந்து கொடுக்கவில்லை. மவுனசாமியாகவே அமர்ந்திருந்தார். பைராகிகளின் அட்டகாசத்தைப் பார்த்த ஒரு சில விறகு வெட்டிகள் ஓடிப்போய் இந்த செய்தியை பெருமாள் சுவாமிக்குத் தெரிவித்தனர். ஓடி வந்த பெருமாள் சுவாமி, இந்த முரட்டு பைராகிகளைப் பார்த்தார்.
பிறகு ஊருக்குள் சென்று ஒரு பெரிய அண்டாவையும் டின்களில் எண்ணெயையும் கொண்டு வந்து முரட்டு பைராகிகளின் முன் வைத்தார். உடனே விறகு, சுள்ளி இவற்றைச் சேகரித்தார். பெருமாள் சுவாமியின் இந்த ஏற்பாடுகள் யாருக்கும் புரியவில்லை; பைராகிகளோ, இவர் இவையெல்லாம் கொண்டு வந்து என்ன செய்யப் போகிறார் என்று புரியாததால், இவர் யார்? என்று வினவினார்கள். பெருமாள் சுவாமி அடுப்பை மூட்டி அதன் மீது பெரிய அண்டாவை வைத்தார். பைராகிகளைப் பார்த்துக் கூறினார்; நான் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்தவன். சற்று முன் விந்தியமலை மகாசித்தர் தரிசனம் தந்து என்னிடம், உடனே விருபாக்ஷ குகைக்குப் போ. அங்கே சில பைராகிகள் இருப்பார்கள். சித்து சக்தியெல்லாம் அவர்களுக்கு அத்துபடி வேண்டுமென்றால் கொதிக்கும் எண்ணெயை அவர்கள் மீது ஊற்றிப் பார். அது அவர்களை ஒன்றும் செய்யாது என்றார். அதன்படியே நான் இங்கு வந்துப் பார்த்தால் மகாசித்தர் கூறியபடியே நீங்கள் இங்கு இருக்கிறீர்கள். அவர் உத்தரவுப்படி எண்ணெயை உங்கள் மீது ஊற்றப் போகிறேன். இல்லையென்றால் நான் அவரது சாபத்திற்கு ஆளாவேன். இவ்வாறு கூறி பெருமாள் சுவாமி குகைக்குள் சென்றதும் பைராகிகள் ஓட்டமெடுத்தார்கள். பகவானும் வாய்விட்டுச் சிரித்தார். |
|
|
|