|
ஓர் ஊரில் ஞானி ஒருவர் இருந்தார். அவரிடம் இளைஞன் ஒருவன் சென்று, ஐயா! நீங்கள் மிகவும் பெரியவர், ஆன்மிகஞானம் உடையவர். நான்உங்களிடம் சீடனாக இருந்து சாஸ்திரங்களைக் கற்க விரும்புகிறேன். என்னை நீங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள், என்று கேட்டுக்கொண்டான். அதற்கு ஞானி, நீ என்னிடம்சீடனாக இருந்து சாஸ்திரங்கள் கற்க விரும்புகிறாய், நல்லது. ஆனால், நீ என் சீடனாக இருப்பதற்குத் தகுதி உடையவனா? என்று நான்உன்னைச் சோதித்துப் பார்க்க வேண்டும். முக்கியமாக உன்னிடம் புலனடக்கம் (மனதையும் உடலையும் கட்டுப்படுத்தும் திறமை) இருக்க வேண்டும். உன்னிடம் புலனடக்கம் இருக்கிறதா? என்று கேட்டார்.ஆமாம் குருவே! நான் புலனடக்கம் உடையவன்தான், என்றான்இளைஞன். ஞானி, உன்னிடம் புலனடக்கம்இருக்கிறதா, இல்லையா என்பதை அறிந்து கொள்வதற்கு நான் உனக்கு ஒரு சோதனை வைக்கப் போகிறேன், என்றார்.இளைஞன்,மீண்டும் சொல்கிறேன். நிச்சயமாக நான் புலனடக்கம் உடையவன் தான். நீங்கள் வேண்டுமானால் அதைச் சோதித்துப் பாருங்கள், என்றான். ஞானி, சரி, நாளை நீ இதே நேரத்திற்கு வா. நான் உனக்கு சோதனை வைக்கிறேன், என்றார். சீடன் மறுநாள் ஞானியின் இருப்பிடத்திற்குச் சென்றான்.
ஞானி இளைஞனிடம் பூட்டியிருந்த ஒரு மரப்பெட்டியைக் கொடுத்து, இதை நீ ஐந்து மைல் துõரத்தில் இருக்கும் இன்ன கிராமத்தில்இருக்கும், என்நண்பரிடம் கொண்டுபோய் கொடுக்க வேண்டும். ஆனால் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்று நீ திறந்து பார்க்கக் கூடாது, என்றார்.மேலும் ஞானி தன் நண்பரின் பெயர், அவர் வீடு இருக்கும் இடம் பற்றியஅடையாளங்கள்போன்றவற்றையும் இளைஞனிடம் கூறினார். இளைஞன்,அவ்வளவுதானே! இது ஒரு பெரிய காரியம்இல்லையே! இதுவா, நீங்கள் எனக்கு வைக்கும் சோதனை! இதைச்சுலபமாக என்னால் செய்ய முடியும், என்று கூறிவிட்டு, பெட்டியுடன் அங்கிருந்து புறப்பட்டான். இளைஞன் பெட்டியைக் துõக்கிக்கொண்டு ஒரு மைல் நடந்தான். அது வரையில் அவனுக்குப் பிரச்னை இல்லை. இப்போது அவன் இரண்டாவது மைல் துõரத்தைக் கடந்து கொண்டிருந்தான்.அப்போது அவன் உள்ளத்தில், இந்தப்பெட்டிக்குள் அப்படி என்ன தான் இருக்கிறது? இதை ஏன் திறந்து பார்க்கக் கூடாது என்று ஞானி கூறினார் என்ற எண்ணம் தோன்றியது. அவன் மூன்றாவது மைல் துõரத்தைக் கடந்து சென்றபோது, பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல், மேலும் அவனிடம் அதிகமாயிற்று.உடனே அவன் பெட்டியை மேலும் கீழும், இப்படியும் அப்படியும் ஆட்டிப் பார்த்தான். பெட்டிக்குள் ஏதோ ஓடுவதுபோல் தோன்றியது. அவன் நான்காவது மைல் துõரத்தைக் கடந்து கொண்டிருந்தான்.
அப்போது, இந்தப் பெட்டிக்குள் என்னதான் இருக்கிறது? என்ற ஆவலை அவனால் அடக்க முடியவில்லை. பெட்டியைத் தன் மூக்குக்கு அருகில் எடுத்துச் சென்றான். பெட்டிக்குள்ளிருந்து ஏதோஇனிப்பின் நறுமணம் வருவது தெரிந்தது.பெட்டியின் இடுக்கில் கூர்ந்து பார்த்தான்; உள்ளே இருட்டு தான் தெரிந்தது. பெட்டியைக் காதுக்கு அருகில் வைத்து கூர்ந்து கவனித்தான். ஏதோ மெல்லிய சப்தம் வருவதுபோல் இருந்தது. அவனால் ஒன்றும் புரிந்துகொள்ள முடியவில்லை. அதற்கு மேலும் ஆவலை அவனால்கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே அவன் பூட்டை உடைத்து பெட்டியைத் திறந்தான். பெட்டிக்குள்ளிருந்து ஒரு சுண்டெலிதப்பி ஓடியது! பெட்டிக்குள் சுண்டெலி தின்றிருந்த பாதி மசால் வடையும், இனிப்பும் இருந்தன. இப்போது அவன் பெட்டியை மீண்டும்மூடிப் பூட்டினான். அவன் பெட்டியை எடுத்துச் சென்றுஞானியின் நண்பரிடம் கொடுத்தான். ஞானியின் நண்பர், பெட்டிக்குள்ளிருந்த சுண்டெலி தப்பி ஓடிவிட்டதா? என்று கேட்டுக்கொண்டே பெட்டியை இளைஞனிடமிருந்து பெற்றுக்கொண்டார்.இளைஞன் மவுனமாகத் தலை குனிந்து நின்றான். அவன் புலனடக்கம் இல்லாததால்,ஞானியிடம் சீடனாக இருக்கும் வாய்ப்பைஇழந்தான். இளைஞனுக்கு இருந்ததுபோல்தான்வாழ்க்கையில் பல உன்னதங்கள் நமக்குக்காத்திருக்கின்றன. ஆனால், நம்மில் பலர்மனக்கட்டுப்பாடு, புலனடக்கம் இல்லாததால், நாம் பெற வேண்டிய உன்னதங்களை இழக்கும் நிலையை உருவாக்கிக்கொள்கிறோம். |
|
|
|