|
தன்னை வென்று, அமைதியில் நிலைத்திருப்பவனுக்குப் பரம்பொருள் தத்துவம் தெளிவாக விளங்குகிறது. அத்தகையவன், குளிர் வெப்பம், இன்பம் துன்பம், மானம் அவமானம் முதலிய இருமை அனுபவங்களை ஸமமாகப் பார்க்கிறான் என்று கூறியருளினார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். பரம்பொருள் தத்துவத்தில் நிலைத்திருக்கும் ஞானயோகியின் இலக்கணத்தை மேலும் விவரிக்கிறார் பகவான். ஞாநவிஜ்ஞாநத்ருப்தாத்மா கூடஸ்த்தோ விஜிதேந்த்ரிய: யுக்த இத்யுச்யதே யோகீ ஸமலோஷ்டாஸ்மகாஞ்சந: (ஸ்ரீமத் பகவத்கீதை 6-8)
மெய்யறிவைப் பெற்று திருப்தி அடைந்தவராய், அசையாத மனதை உடையவராய், இந்த்ரியங்களை வென்றவராய், மண், கல், பொன் ஆகிய மூன்றையும் ஸமமாகப் பார்ப்பவராய், யோகத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர் யோகி எனப்படுவார். ஞானயோகத்தில் மெய்யறிவு நூற்கருத்துக்களை முறையாக குருவிடமிருந்து கேட்டல், அவற்றை நன்கு சிந்தித்து, ஐயங்களை நீக்கிக் கொள்ளுதல், அவற்றை தியானித்து உள்வாங்கிக்கொள்ளுதல் என மூன்று ஸாதனைகள் உள்ளன. தன்னைப் பற்றிய மெய்யறிவைப் பெறும் இந்த ஞானயோகத்தில் இரண்டு நிலைகள் இருக்கின்றன. ஒன்று ஞானம், மற்றொன்று விஜ்ஞானம். என்னுடைய உடலுக்குள் உணர்வு தத்துவம் இருக்கிறது என்பதை உணர்வது ஞானம். நானே உணர்வு என்று உணர்ந்துகொள்வது விஜ்ஞானம். ஞான, விஜ்ஞானத்தினால்தான் திருப்தி என்பது வாழ்வில் ஏற்படும்.
நான் என்பது உடல் மனக்கூட்டமைப்பு. உணர்வு அதில் இருக்கிறது என்று எண்ணினால், உடல் வாழ்க்கையின் துன்பங்களை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். உடல் வாழ்க்கையில் மூன்றுவிதமான துன்பங்கள் இருக்கின்றன. மூப்பு, மரணம், நோய் ஆகிய மூன்றும் அதில் தவிர்க்க முடியாதவை, மனித உடல் எடுத்த எல்லோரும் இந்த மூன்றையும் சந்தித்தே ஆக வேண்டியிருக்கிறது. வேதாந்தம், ஞானத்திலிருந்து விஜ்ஞானத்துக்கு அழைத்துச் செல்கிறது. மூப்படைகின்ற, நோய்களால் தாக்கப்படுகின்ற, ஒருநாள் இறக்கப்போகின்ற உடல் நான் அல்ல. மாற்றமடையாத, அழியாத, எவ்வித நோயாலும் தாக்கப்படமுடியாத, யாண்டும் இருக்கின்ற தூய இருப்பு உணர்வு இன்ப வடிவம் நான் என்பதை வேதாந்தம் உணர்த்துகிறது.
நான் என்ற அடையாளத்தை உடலிலிருந்து உணர்வுக்கு மாற்றிக்கொள்வதால், மனித உடலில் வாழ்கின்ற உயிர் மரணத்தைக் கடக்கிறது. அத்தகையவர் நிறைவில் நிலைத்திருப்பார். மூப்பு, நோய், மரணம், ஆகிய மூன்றும் உடலைத்தான் தாக்கக்கூடியவை. அவை உணர்வாகிய என்னை ஒருபொழுதும் தாக்க முடியாது. நான் யாண்டும் நிறைவில் நிலைத்திருக்கிறேன். தன்னுடைய பொறிகள், உடல், மனம், புத்தி இவற்றை ஆளக்கூடிய ஆற்றல் படைத்தவர் ஞானி. அவர் உறுதியான, அசைக்க முடியாத மெய்யறிவில் நிலைத்திருக்கிறார். உலக வாழ்க்கையில் ஏற்படும் எத்தகைய நிகழ்வுகளும் அவரை பாதிப்பதில்லை. உலக வாழ்வில் வருங்காலம் இப்படித்தான் இருக்கும் என்று கணிக்க முடியாது. அப்படியே கணிக்க முடிந்தாலும், அதனை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
புயல்காற்று வீசப்போகிறது என்பதை முன்னரே அறிந்துகொள்ள முடிந்தாலும், அதனைத் தடுக்க நம்மால் முடியாது. அதுபோல, வாழ்வின் ஒவ்வொரு நிலைகளிலும் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகள் நம் கட்டுப்பாட்டில் இல்லை. பாரதப் பண்பாட்டில், ஆண்களுக்கு உபநயனத்தின் போதும், பெண்களுக்குத் திருமணத்தின்போதும் அச்மாரோஹணம் என்ற சடங்கு செய்யப்படுகிறது. உறுதியான ஒரு கல்லின் மீது ஏறி நிற்கச் செய்து, பின்வருமாறு கூறப்படுகிறது. ஓ.... மணப் பெண்ணே! நீ இந்தக் கல்லின் மீது ஏறி நிற்பாயாக! இந்தக் கல்லைப் போன்று உறுதியானவளாக, அசைக்க முடியாதவளாக நீ இருப்பாயாக! வாழ்வின் சவால்களை நீ தைரியமாகச் சந்திப்பாயாக! துன்பங்களால் அழிக்கப்படாதவளாக, அனைத்தையும் தாங்குபவளாக நீ விளங்குவாயாக! நம்மைச் சுற்றியிருப்போரின் உடல்நிலை, மன நிலை, ஆயுட்காலம், சமூக நிகழ்வுகள், தட்பவெப்பம், பொருளாதார ஏற்றத்தாழ்வு எதுவும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. ஞானி இவை எதனாலும் பாதிக்கப்படாமல், மெய்யறிவில் உறுதிபெற்ற கூடஸ்தராக இருக்கிறார்.
அதிக விலை மதிப்புடையது பொன். கல் என்பது அதிக மதிப்பில்லாதது, இருப்பினும் வீடு கட்டுவதற்கு உதவுவது போன்ற ஒரு பயனை உடையது அது. பொதுவான உலக வழக்கில், மண் என்பது விலைமதிப்பற்றது. ஞானியானவர் இந்த மூன்றையும் ஒன்றாகப் பார்ப்பவர். தன்னை மெய்ப்பொருளாக உணர்ந்துகொண்ட இத்தகைய ஞானியானவர், யோகி எனப்படுகிறார். |
|
|
|