|
சத்தியவிரதன் என்று ஓர் அரசன் இருந்தான். அவனுடைய ஒரே மகன் சந்திரசூடன். அவன் விஷ்ணுவின் மீது பெரிதும் பக்தி கொண்டவன். சத்தியவிரதனுக்கு அனந்தன் என்பவர் ராஜ குருவாக இருந்தார். சத்தியவிரதன் தன் மகன் சந்திரசூடனை, ராஜகுரு அனந்தனிடம் குருகுல வாசம் செய்வதற்கு அனுப்பினான்.ராஜகுருவுக்கு சுமுகி என்று ஒரு மகள் இருந்தாள். அவளும் தன் தந்தையின் குருகுலத்திலேயே சாஸ்திரங்கள் கற்று வந்தாள். சந்திர சூடனுக்கும், சுமுகிக்கும் சாஸ்திர வகுப்புகளை மிகவும் நல்ல முறையில் எடுத்து வந்தார் அனந்தன். சுமுகிக்குத் திருமண வயது வந்தது. அவள், சந்திரசூடனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்தாள். இந்தத் தன் விருப்பத்தை அவள் சந்திரசூடனிடம் தெரிவித்தாள். ஆனால் சந்திரசூடன் அவள் விருப்பத்திற்குச் சம்மதிக்கவில்லை. சந்திரசூடன் சுமுகியிடம், சுமுகி! நீ என் குருவின் மகள். நீ எனக்குத் தங்கை போன்றவள். உன்னை நான் வேறுவிதமாக நினைத்து பார்க்க இயலாது. நானே உனக்குப் பெரிய ஓர் இடத்தில் மணமகனைத் தேர்ந்தெடுத்து, விமரிசையாகத் திருமணம் செய்து வைக்கிறேன். அப்போது நான் உனக்குப் பெரிய அளவில் சீர் வரிசைகளெல்லாம் சிறப்பாகச் செய்கிறேன், என்று கூறினான். ஆனால், சுமுகி இதற்கு சம்மதிக்கவில்லை.
தொடர்ந்து தன் விருப்பத்தை சந்திரசூடனிடம் தெரிவித்துக் கொண்டிருந்தாள். ஆனால், சந்திரசூடன் ஒரேயடியாக அவளது வேண்டுகோளை ஏற்க மறுத்து விட்டான். ஒரு நாள் மாலை நேரம். சந்திரசூடன், குரு கற்றுக் கொடுத்த பாடத்தில் ஏதோ ஒரு சந்தேகம் கேட்பதற்கு ஆஸ்ரமத்திற்குச் சென்றான். அந்தச் சமயத்தில் குரு ஆஸ்ரமத்தில் இல்லை. சுமுகி மட்டும் இருந்தாள். அவள் சந்திரசூடனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, என்னை உங்கள் மனைவியாக ஏற்றுக்கொள்ளுங்கள்! என்று கெஞ்சினாள். சந்திரசூடன் அவளை வேகமாக உதறிவிட்டு, நீ இப்படி செய்வது முறையாகுமா? நான் உன் சகோதரன் போன்றவன் அல்லவா! உன்னை ஏற்றால் குரு துரோகம் செய்த பாவத்துக்கு ஆளாவேனே! என்று கூறி அவளை உதறி விட்டு, வேகமாக அந்த இடத்தை விட்டு சென்று விட்டான். கோபம் கொண்ட சுமுகி, அவனை தன் வலைக்குள் வீழ்த்த வேறு மாதிரியாக முடிவெடுத்தாள். சந்திரசூடன் சென்றபிறகு, சுமுகி தன் உடைகளைக் கலைத்துக் கொண்டும், வளையல்களை உடைத்துக் கொண்டும், தலைமுடியை விரித்துப்போட்டும் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். இந்த சமயத்தில் அவளது தந்தை அனந்தன் ஆஸ்ரமம் திரும்பி விட்டார். மகள் அழுவதைப் பார்த்து அதிர்ந்த அவர் சுமுகியிடம், என்ன நடந்தது? ஏன் அழுகிறாய்? என்று விசாரித்தார். தன் தந்தையிடம் சுமுகி, நீங்கள் ஆஸ்ரமத்தில் இல்லாத சமயத்தில் இங்கு சந்திரசூடன் வந்தான். அவன் என்னிடம் தவறாக நடந்து விட்டான்! என்று பொய் சொல்லி விட்டு தொடர்ந்து அழுதாள்.
அனந்தன், தன் மகள் கூறியதை அப்படியே நம்பி விட்டார். அதேநேரம், இது பற்றி சந்திரசூடனிடம் விசாரித்து விளக்கம் கேட்க முற்படவில்லை. நேரே அரசனிடம் சென்று, சுமுகி கூறியதைத் தெரிவித்தார். சத்தியவிரதன், தன் குரு கூறியதை முழுமையாக நம்பினான். அதனால் கோபம் கொண்ட அவனும் சந்திரசூடனை நேரில் அழைத்து விசாரணை செய்யாமல், தன் வீரர்களிடம், சந்திரசூடன் எங்கேயிருந்தாலும் அவனைக் கைது செய்து காட்டிற்கு இழுத்துச் சென்று, அவனை மாறு கை, மாறு கால் வாங்குங்கள், என்று கட்டளையிட்டான். வீரர்கள் சந்திரசூடன் இருந்த இடத்திற்குச் சென்று அவனைக் கைது செய்தார்கள். காட்டிற்கு இழுத்துச் சென்று, அவனுடைய ஒரு கையையும், காலையும் வெட்டினார்கள். பிறகு, அவனை அப்படியே காட்டில் விட்டுவிட்டு, அரசனிடம் சென்று விவரம் தெரிவித்தார்கள். காட்டில் தனிமையிலிருந்து சந்திரசூடன், ஸ்ரீ விஷ்ணுவை நினைத்து, பகவானே! நான் குற்றமற்றவன் என்பது உனக்குத் தெரியும். நான் மனமறிந்து எந்த பாவமும் இதுவரை செய்ததில்லை. ஒரு குற்றமும் செய்யாத எனக்கு ஏன் இந்தத் தண்டனை? என்று கூறி அழுதான். அப்போது சந்திரசூடனுக்கு ஆதிசேஷன் தரிசனம் தந்தார். சந்திரசூடா! நீ இந்தப் பிறவியில் தவறு எதுவும் செய்யவில்லை என்பது உண்மைதான். ஆனால், நீ முந்தைய பிறவிகளில் தீவினைகள் செய்தாய். அந்த சஞ்சிதவினை காரணமாக உனக்கு இப்போது இந்தத் தண்டனை கிடைத்தது.
நீ, ஸ்ரீ விஷ்ணுவின் மீது பக்திகொண்டவன். ஸ்ரீ விஷ்ணு, ராமபிரானாக அயோத்தியில் அவதரிக்க இருக்கிறார். அப்போது அவருடன் நான் லட்சுமணனாகப் பிறக்க இருக்கிறேன். நீ ராவணனின் தம்பி விபீஷணனாகப் பிறப்பாய். சுமுகி ராவணனின் தங்கை சூர்ப்பனகை என்ற பெயரில் பிறப்பாள். அப்போது, லட்சுமணனாகிய நான் சூர்ப்பனகையின் மூக்கையும் காதையும் அறுத்து அவளை மானபங்கப்படுத்துவேன். விபீஷணனாகிய நீ, ஸ்ரீ ராமரின் சிறந்த பக்தனாக இருப்பாய். அவரிடம் சரணடைவாய். ஸ்ரீ ராமர் பெயர் உள்ள வரையில், உன் பெயரும் உலகில் நிலைத்து நிற்கும், என்று கூறினார். அதிசேஷன் கூறியபடியே, பிறகுஸ்ரீ ராமவதாரத்தில் நிகழ்ச்சிகள் நடந்தன. |
|
|
|