|
சந்நியாசி ஒருவர் ஊர் ஊராக திருத்தலப் பயணம் சென்று கொண்டிருந்தார்.ஒரு சமயம் அவர் ஓர் ஆற்றில் நீராடிவிட்டு, ஆற்றங்கரையில் இருந்த மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தார். இவ்விதம் சந்நியாசி செய்ததை, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் பார்த்தான். கண்விழித்த பிறகு, அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறியும் ஆவல் அவனுக்குள் வந்து விட்டது. அவரையே கண்கொட்டாமல், கவனித்துக்கொண்டிருந்தான். நீண்ட நேரம் கழிந்தது. சந்நியாசி தியானம் கலைந்து எழுந்தார். அவர் அருகில் மாடு மேய்க்கும் சிறுவன் சென்றான். சுவாமி! நீங்கள் இது வரையில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? என்று கேட்டான். அதற்குத் துறவி, நான் இறைவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் தியானம் செய்து கொண்டிருந்தேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். அதைக் கேட்ட சிறுவன், இந்த ஆற்றில் நீராடி, இந்த மரத்தடியில் உட்கார்ந்து தியானம் செய்தால் இறைவனைப் பார்க்க முடியும் போலும்! சந்நியாசி அதைத்தானே செய்தார். ஏன் நாமும் அவரைப் போலவே இறைவனை பார்க்க முயற்சிக்கக் கூடாது என்று நினைத்தான். உடனடியாக ஆற்றில் நீராடிவிட்டு, மரத்தடியில் கண்களை மூடி அமர்ந்து இறைவனை நினைத்து, இறைவனே! நீ என் முன்னால் தோன்றி, எனக்குத் தரிசனம் தர வேண்டும், என்று, மனதிற்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.
கள்ளம் கபடமில்லாத குழந்தை உள்ளத்துடன், அவன் தன்னை நினைத்து பிரார்த்தனை செய்ததைக் கண்ட கடவுளும் சிறுவன் முன்னால் தோன்றினார். சிறுவன் அதற்கு முன் இறைவனை நேரில் பார்த்ததில்லை. அதனால் அவன் அவரிடம், நீங்கள் யார்? என்று வினவினான். இறைவன், நான்தான் இறைவன். நீ என்னை பார்க்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தாய் அல்லவா! அதனால் தான், இப்போது உனக்குக் காட்சி கொடுத்திருக்கிறேன் என்றார். சிறுவன், நீங்கள்தான் இறைவன் என்று நான் எப்படி நம்புவது? ஏற்கனவே உங்களைப் பார்த்த ஒருவர் இங்கு வந்து, இவர்தான் இறைவன்! என்று உங்களைச் சுட்டிக்காட்டி கூறினால் தான், நீங்கள் இறைவன் என்று நம்புவேன்! என்றான். அப்படியா! என்ற இறைவன், என்னை இதற்கு முன் பார்த்த யாரையாவது உனக்கு தெரியுமா? என்று கேட்டார். ஏன் தெரியாது? என்ற சிறுவன், இங்கு சற்று முன் அமர்ந்து தியானம் செய்த துறவிக்கு உங்களைத் தெரியும். அவர் இதற்குள் நீண்ட துõரம் சென்றிருக்கமாட்டார். நான் அவரைத் தேடிப் பிடித்து இங்கு அழைத்து வருகிறேன். அதுவரை நீங்கள் இங்கேயே இருக்க வேண்டும். புரிகிறதா! என்றான். அதற்கு இறைவனும், சரியப்பா...நீ கூறியபடியே அந்தத் துறவியை இங்கு அழைத்து வா! நான் காத்திருக்கிறேன், என்றார். அவரிடம் சிறுவன், இப்படிச் சொல்லிவிட்டு, நான் இங்கிருந்து சென்றதும் போய்விடலாம் என்று நினைக்கிறாயா? என்னை ஏமாற்ற முடியாது. நீ இங்கிருந்து தப்ப முடியாதபடி நான் உன்னை மரத்தில் கயிற்றால் கட்டிவிட்டு, பிறகு சென்று இங்கு துறவியை அழைத்து வருகிறேன், என்றான். சிறுவன் நாலைந்து மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை அவிழ்த்தான். அந்தக் கயிறுகளைக் கொண்டு இறைவனை மரத்தில் நன்றாகக் கட்டினான். பிறகு சிறுவன் துறவி சென்ற திசையை நோக்கி வேகமாக ஓடினான். துறவியை நெருங்கிய அவன், சுவாமி! நீங்கள் கூறியபடி நான் ஆற்றில் நீராடிவிட்டு மரத்தடியில் அமர்ந்து, இறைவனே! நீ என் முன்னால் தோன்றி எனக்குத் தரிசனம் தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். அப்போது என் முன்னால் ஒருவர் தோன்றி, நான்தான் இறைவன். நீ பிரார்த்தனை செய்ததால், இப்போது உனக்குக் காட்சி கொடுத்திருக்கிறேன் என்று கூறினார். அவர் கூறியதை நான் நம்பவில்லை. ஆதலால் அவரை நான் ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டு வந்திருக்கிறேன். நீங்கள் அங்கு வந்து அவர் இறைவனா, இறைவன் இல்லையா? என்று எனக்குச் சொல்லுங்கள் என்று கூறி அழைத்தான். அதிர்ந்து போன துறவி சிறுவனுடன் சென்றார். சிறுவன் மரத்தில் கட்டப்பட்டிருந்த இறைவனைச் சுட்டிக்காட்டி துறவியிடம், அதோ பாருங்கள்! நான் இவரைத்தான் மரத்தில் கட்டிப்போட்டேன். இவர்தான் இறைவனா? என்று கேட்டான். துறவியின் கண்களுக்கு மரத்தில் கட்டியிருந்த இறைவன் தெரியவில்லை. எனவே அவர் சிறுவனிடம், நீ என்ன சொல்கிறாய்? இங்கு யாருமே இல்லையே! என்றார். அதற்குச் சிறுவன், என்ன சுவாமி சொல்கிறீர்கள்? நன்றாகப் பாருங்கள்! அதோ, அங்கு நான் மரத்தில் கட்டியவர் இருக்கிறாரே! என்றான். துறவிக்கோ ஒன்றும் புரியவில்லை.
அப்போது மரத்தில் கட்டப்பட்டிருந்த இறைவன், சிறுவனே! நீ கள்ளம் கபடமற்ற துõய உள்ளத்துடன், நம்பிக்கையோடு என்னை அழைத்தாய். அதனால் நான் உனக்குத் தரிசனம் கொடுத்தேன். உனக்கு இருக்கும் நம்பிக்கை இந்தத் துறவிக்கு இல்லை. அதனால் நான் உன் கண்களுக்கு மட்டும் தெரிகிறேன். துறவியின் கண்களுக்குத் தெரியவில்லை! என்றார். அதைக் கேட்ட சிறுவன், இறைவனே! இவர் எனக்கு குரு போன்றவர். இவர் கூறிய வழியைப் பின்பற்றியதால்தான், எனக்கு உங்கள் தரிசனம் கிடைத்தது. எனவே இவருக்கும் நீங்கள் இப்போது தரிசனம் கொடுங்கள், என்று கேட்டுக்கொண்டான். சிறுவனின் பிரார்த்தனையை ஏற்று, இறைவன் துறவிக்கும் தரிசனம் கொடுத்தார். ஆன்மிக வாழ்க்கையில் இறைவன் மீது நம்பிக்கை என்பது மிகவும் முக்கியத்துவம் உடையது. ஒரு குழந்தை, நான் கேட்பதை என் தாய் நிச்சயம் கொடுப்பாள் என்ற நம்பிக்கையுடன் தாயிடம் கேட்கிறது. அது போன்ற நம்பிக்கையுடன் தான், நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். புரிகிறதா! |
|
|
|