|
அப்போது தர்மபுத்திரரும், துரியோதனனும் இளைஞர்கள். இருவரும் ஒவ்வொரு நாளும் காலையில் பக்கத்தில் இருக்கும் காட்டிற்குச் சென்று, வில்வித்தை பழகி வந்தனர். ஒரு நாள் பயிற்சி முடிந்ததும், தர்மபுத்திரர் தன் அரண்மனைக்குத் தேரில் செல்லாமல் நடந்து செல்ல முற்பட்டார். அதைப் பார்த்த துரியோதனன், நீங்கள் ஏன் உங்கள் அரண்மனைக்குத் தேரில் செல்லாமல், நடந்து செல்கிறீர்கள்? என்று கேட்டான். அதற்கு தர்மபுத்திரர், எதிர்காலத்தில் நான் இந்த நாட்டை ஆட்சி செய்யப் போகிறேன். அதனால் தரையில் என் கால்படிய இந்தப் பூமியில் நான் நடந்து செல்ல விரும்புகிறேன், என்றார். அவர் கூறியதைக் கேட்டதும் துரியோதனன், தர்மபுத்திரர் எதிர்காலத்தில் இந்த நாட்டை ஆளப் போவதாகச் சொல்கிறாரே! எதிர்காலத்தில் நான் அல்லவா இந்த நாட்டை ஆட்சி செய்யப் போகிறேன்? எனவே தரையில் என் கால் படிய நானும் இந்தப் பூமியில் நடந்து செல்ல வேண்டும் என்று நினைத்தான். இந்த எண்ணத்துடன், அவனும் தர்மபுத்திரருடன் ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தான். இருவரும் ஊருக்குள் நுழைந்து, தங்கள் அரண்மனைகளை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்.
அப்போது, தர்மபுத்திரர் கண்ணில் ஒரு காட்சி தென்பட்டது. இறைச்சி விற்கும் இளைஞன் ஒருவன், தன் இறைச்சிக் கடையை அப்போது தான் திறந்திருந்தான். அதைப் பார்த்த தர்மபுத்திரர், இறைச்சி விற்கும் இந்த இளைஞனுக்கு உயிர்க்கொலை பாவம் என்பது தெரியாதா? இவன் ஏன் போயும் போயும் இந்தப் பாவத் தொழிலைச் செய்கிறான்? இவன் உள்ளத்தில் கருணை, அன்பு, நியாயம், தர்மம், சத்தியம் போன்றவற்றிற்கு இடமே இல்லையா? உலகத்தில் வாழ்வதற்கு இவனுக்கு வேறு தொழில் எதுவும் கிடைக்கவில்லையா? என்று நினைத்தார். சிறிது நேரத்தில் அந்த இறைச்சிக் கடைக்காரன், மாமிசத்தை சிறு சிறு துண்டுகளாக்கி, அவற்றைத் தன் கடைக்கு மேலே கூரையில் உட்கார்ந்திருந்த காக்கைகளை நோக்கி வீசினான். அற்காகவே காத்திருந்த காகங்கள் அவற்றை எடுத்துக் கொண்டன. அந்த இறைச்சிக்கடை எதிரில் சில நாய்கள் நின்று கொண்டிருந்தன. அவற்றை நோக்கியும் இறைச்சி வியாபாரி சில மாமிசத் துண்டுகளை வீசினான். அவன் வீசிய மாமிசத் துண்டுகளை நாய்கள் உட்கொண்டன. இவ்விதம் இறைச்சி வியாபாரி, காகங்களுக்கும் நாய்களுக்கும் இறைச்சி துண்டுகளை வீசியதையும் தர்மபுத்திரர் பார்த்தார்.
அப்போது அவர் உள்ளத்தில், இவன் செய்வது பாவத் தொழில்! என்றாலும், இவனுக்கும் காகங்களுக்கும், நாய்களுக்கும் சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற நல்ல குணமும் இருக்கிறதே... என்று நினைத்தார். தர்மபுத்திரரும் துரியோதனனும் தொடர்ந்து நடந்து சென்றார்கள். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும், இருவரும் பிரிந்து வேறு வேறு திசைகளில் இருந்த தங்கள் அரண்மனைகளுக்குச் சென்றார்கள். தர்மபுத்திரர் எப்போதும் நல்லதையே நினைப்பவர், நல்லதையே செய்பவர், நல்லதையே பேசுபவர். மற்றவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களை மட்டுமே பார்க்கும் இயல்புடையவர். அவருக்குப் பிறரிடம் இருக்கும் குற்றங்களைப் பார்க்கத் தெரியாது. அவர் செல்லும் வழியில், இந்த இறைச்சி விற்கும் இளைஞனைப் பற்றி, என் மனதில் அப்படி ஒரு தவறான எண்ணம் ஏன் தோன்றியது? என்று நினைத்துக் கொண்டே தன் அரண்மனைக்குள் நுழைந்தார். அங்கு அவர் ஸ்ரீ கிருஷ்ணர் வந்திருப்பதைப் பார்த்தார்.
கிருஷ்ணரிடம் தர்மபுத்திரர், கிருஷ்ணா! நான் எல்லோரிடமும் இருக்கும் நல்ல குணங்களை மட்டும் பார்ப்பவன். இது உனக்குத் தெரியும். ஆனால் இன்றைய தினம் என் இயல்புக்கு மாறாக இறைச்சி விற்கும் இளைஞன் ஒருவனைப் பார்த்ததும், முதலில் அவனைப் பற்றித் தவறாக நினைத்தேன். பிறகு அவனைப் பற்றிய என் தவறான எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். இதற்கு என்ன காரணம்? என்று தன் மனதில் தோன்றிய எண்ணங்களைத் தெரிவித்தார். தர்மபுத்திரர் கூறியதைக் கேட்ட கிருஷ்ணர, உங்கள் மனதில் இறைச்சி விற்கும் இளைஞனைப் பற்றி தவறான எண்ணம் தோன்றிய சமயத்தில், உங்களுடன் துரியோதனன் இருந்தானா? என்று கேட்டார். தர்மபுத்திரர், ஆமாம். இருந்தான், என்றார். உடனே ஸ்ரீ கிருஷ்ணன், உங்களுடன் துரியோதனன் இருந்ததால் தான், உங்கள் உள்ளத்தில் இறைச்சி விற்கும் இளைஞனைப் பற்றிய தவறான எதிர்மறைக் கருத்து தோன்றியிருக்கிறது, என்றார். எனவே நல்லவர்களாக இருப்பவர்கள், எப்போதும் நல்லவர்களுடன்தான் இருக்க வேண்டும். அது மட்டுமின்றி அவர்கள் தீயவர்களின் தொடர்பைக் கட்டாயம் தவிர்க்கவும் வேண்டும். தீயவர் தொடர்பு நிச்சயம் தீமை தான் விளைவிக்கும். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்று பெரியோர்கள் சொல்ல நாம் கேட்டிருக்கிறோம்.
துஷ்டர்களுடன் நாம் தொடர்பு கொண்டால், நம் வாழ்க்கையே திசை மாறித் தவறாகச் சென்றுவிடும். நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று என்கிறது மூதுரை. இதன் பொருள் தெரியுமா? நல்ல குணங்கள் இருப்பவரைப் பார்ப்பதும், அவர் கூறுவதைக் கேட்பதும், அவருடைய பண்புகளைப் பற்றிப் பேசுவதும், அத்தகையவருடன் இணைந்திருப்பதும் இவை எல்லாமே நன்மை தரும். தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார் குணங்களை உரைப்பதுவும் தீதே; அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது என்றும் மூதுரை சொல்கிறது. இதற்கு, கெட்ட குணம் உள்ள ஒருவரைப் பார்ப்பதும், அவர் கூறும் தீயவற்றைக் கேட்பதும், அவருடைய தீய குணங்களைப் பற்றிப் பேசுவதும், அத்தகையவரோடு சேர்ந்திருப்பதும் தீமையை உண்டாக்கும் என்பது பொருள்.
|
|
|
|