|
கங்கைக் கரையில் வாழ்ந்த பிருகு என்னும் அந்தணர் வீட்டுக்கு சவ்னக முனிவர் விருந்தாளியாக வந்திருந்தார். முனிவரை உபசரித்த பிருகு, முனிவரே! மனிதன் கடைபிடிக்க வேண்டிய சிறந்த குணம் எது? என்று கேட்டார். சத்தியம், ஒழுக்கம், தர்ம சிந்தனை, நேர்மை, பணிவு, சுயநலமின்மை என்று எத்தனையோ இருந்தாலும் இதில் எது சிறந்தது என திட்டமாக எனக்கு தெரியவில்லை. நைமிசாரண்யத்தில் இருக்கும் பத்மன் என்னும் நீதிமானிடம் சென்றால் உனக்கு தெளிவு கிடைக்கும் என்றார். பிருகுவும் அங்கு சென்றார். அப்போது வீட்டில் பத்மனின் மனைவி மட்டுமே இருந்தாள். அவள் பிருகுவிடம், சுவாமி! என் கணவர் இப்போது சூரிய மண்டலத்திற்கு போயிருக்கிறார். வர எட்டு நாளாகும் என்றாள். பிருகுவும் காத்திருந்தார். எட்டாம் நாள் வீட்டுக்கு வந்த பத்மன், அந்தணரே! தாங்கள் என்னை காண வந்த நோக்கம் என்ன? என்றார். சவ்னக முனிவர் அனுப்பிய விஷயத்தை தெரிவிக்க, ஐயா.... சூரியலோகத்தில் நான் பார்த்ததைச் தெரிவித்தால் நீங்கள் தெளிவு பெறுவீர்கள். அங்கு புண்ணியம் செய்த உயிர் ஒன்று ஒளி வடிவில் சூரிய தேவனோடு இரண்டற கலப்பதை கண்டேன். அந்த உயிர் செய்த புண்ணியம் பற்றி சூரியனிடம் கேட்ட போது, சுயநலம் இல்லாமல் பிறருக்கு உதவி செய்து வாழ்பவர் அனைவருமே இந்த உயிர் போல நற்கதியை அடைவர் என்றார். எனவே, சுயநலம் இல்லாமல் வாழ்வதே சிறந்த குணம் என்றார். தெளிவு பெற்ற பிருகு நன்றியுடன் விடை பெற்றார். |
|
|
|