|
கஸ்யப முனிவரின் மனைவி அதிதி, தன் கணவருக்கு பணிவிடை செய்வதையே லட்சிய மாகக் கொண்டு வாழ்ந்தாள். கருவுற்றிருந்த காலத்திலும் கூட ஓய்வு பற்றி கவலைப்படாமல் தன் கணவருக்குரிய வேலை அனைத்தையும் தவறாமல் செய்தாள். இதைக் கேள்விப்பட்ட தர்மதேவதை, அவளை பரிசோதிக்க ஒரு அந்தணர் வடிவில் வந்தாள். அதிதி ஒருநாள் முனிவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். அப்போது வாசலில், எனக்கு பிச்சையிடுங்கள் என்று குரல் வந்தது. கணவர் உண்ணும் வரை அவரருகில் இருந்த அதிதி, அதன் பின்பே உணவு எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தாள். அவள் மெல்ல வருவதைக் கண்ட அந்தணர் பொறுமை இழந்தார். அலட்சியத்தால் என்னை வெகுநேரம் காக்க வைத்து விட்டாய். என்னை பொருட்படுத்தாமல் இருந்ததால், உன் வயிற்றிலுள்ள கரு அழிந்து போகட்டும் என்று சாபம் இட்டார். அதைக் கேட்ட அதிதி மயக்கமடைந்து கீழே சாய்ந்தாள். கஸ்யப முனிவர் ஓடோடி வந்தார். அதிதி கணவரிடம் நடந்ததைச் சொல்லி அழுதாள். அதற்கு கஸ்யபர்அதுபற்றி கவலைப்படாதே. வான மண்டலத்தில் உள்ள மிருதம் என்னும் அண்டத்தில் இருந்து தேஜஸ், அழகு நிறைந்த புத்திரன் ஒருவன் உனக்கு வயிற்றில் வாய்ப்பான், என்று வரம் அளித்தார். அதன்படியே அதிதிக்கு ஆண்குழந்தை பிறந்தது. மிருத அண்டத்தில் இருந்து பிறந்தவன் என்பதால் குழந்தைக்கு மார்த்தாண்டன் என்று கஸ்யப முனிவர் பெயரிட்டார். அவனே வான மண்டலத்தில் சூரியனாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறான். |
|
|
|