|
ராம- ராவண யுத்தம் முடிந்தது. ராமர் அயோத்தியின் அரசனானார். ஒரு சமயம் அவர் அஸ்வமேத யாகம் செய்தார். யாகத்தின் முடிவில் குலகுரு வசிஷ்டர், சியவனர் முதலான எல்லா ரிஷி முனிவர்களையும் பூஜித்தார். நாட்டின் பல பாகங்களிலிருந்து 64 அரசர்கள் தங்கள் ராணிகளுடன் யாகத்திற்கு வந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் அஸ்வமேத யாகக் குதிரைக்கு அபிஷேகம் செய்தார்கள். அதைத் தொடர்ந்து லட்சுமணன்- ஊர்மிளா, பரதன்- மாண்டவி, சத்ருக்னன்- சுருதகீர்த்தி போன்றவர்களும் அந்த யாகக் குதிரைக்கு அபிஷேகம் செய்தார்கள். கடைசியாக ராமர் குதிரைக்கு அபிஷேகம் செய்ய ஆரம்பித்தார். அப்போது அவரது கைகள் குதிரைமீது பட்டன. மறுவிநாடியே குதிரை, தனது வடிவம் நீங்கி ஒரு தேவபுருஷனாக மாறியது. அந்த தேவபுருஷன் ராமரைப் பக்தியுடன் கைகூப்பி வணங்கினான். குதிரை தேவபுருஷனாக மாறியதைப் பார்த்து, அங்கிருந்தவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். தன்னை வணங்கிய தேவபுருஷனிடம் ராமபிரான், நீங்கள் யார்? என்று வினவினார். தேவபுருஷன் பக்தியுடன் கைகூப்பி வணங்கிய நிலையில், ஸ்ரீ ராமா! நான் என்னுடைய முற்பிறவியில் ஒரு பிராமணன்.
கங்கையில் நீராடி நான் என் பாவங்களை நீக்கிக்கொண்டேன். மேலும் ஸ்ரீராமராகிய உங்களைப் பூஜித்தும், தியானம் செய்தும் புண்ணியங்களை வளர்த்துக்கொண்டேன். மனிதர்கள் பின்பற்ற வேண்டிய தர்மங்களைப் பற்றி அறிந்துகொண்டேன். பலவகையான தானங்கள் செய்வதன் சிறப்பை உணர்ந்துகொண்டேன். அதனால் நிறைய தானதர்மங்கள் செய்தேன். அதன் காரணமாக மக்கள் என்னை பெரிய வள்ளல், தர்மாத்மா, தர்மவான் என்றெல்லாம் புகழ்ந்து பேசினார்கள். அதனால் புகழ்போதை என் தலைக்கேறியது. அது என் கண்ணை மறைத்ததால், புனிதத்தையும் சத்தியத்தையும் மறந்துவிட்டேன். மது குடித்தவனுக்கு கூட சிறிது நேரத்தில் போதை தெளிந்துவிடும். ஆனால் புகழ்போதையில் மயங்குபவனுக்கு, புத்தி தெளிவு பெறவே செய்யாது. எனவே நான் புண்ணியம் சம்பாதிக்க வேண்டும். உலக நன்மைக்காக அறச்செயல்கள் செய்ய வேண்டும் என்பதை மறந்து, மக்கள் என்னைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவே தானதர்மங்கள் செய்ய ஆரம்பித்தேன். அது வரையில் எளிமையாக வாழ்ந்த நான் ஆடம்பரமாகவும் வாழ ஆரம்பித்தேன். அத்துடன் உலகமே புகழும் வகையில் பெரிய ஒரு யாகம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நான் நினைத்தபடியே பெரிய அளவில் முயற்சிகள் செய்து யாகம் செய்யஆரம்பித்தேன். எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று யாரும் சொல்ல முடியாது. கர்மவினையிலிருந்து யாரும் தப்ப முடியாது. விதி வழி மதி செல்கிறது. விதியை வெல்ல முடியாது. உலக நன்மைக்காகச் செய்ய வேண்டிய யாகத்தை, மற்றவர்கள் என்னைப் பாராட்ட வேண்டும் என்று செய்துகொண்டிருந்தேன்.
அந்தச் சமயத்தில் என் அருகில் ஒருவர் வந்து, துர்வாச முனிவர் யாகம் நடைபெறும் இடத்திற்கு வந்துகொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார். அதைக் கேட்டதும் நான் துர்வாச முனிவரை வணங்கி வரவேற்று, உரிய மரியாதைகளுடன் யாகசாலைக்கு அழைத்து வந்திருக்க வேண்டும். ஆனால் அப்போது நான், பெரிய ஒரு யாகம் நடத்துபவன் என்ற அகங்காரத்தில், அவரது வருகையை பொருட்படுத்தவே இல்லை. துர்வாச முனிவர் யாகசாலைக்குள் வந்தார். அங்கு அவரை வரவேற்பதற்கு யாகம் நடத்துபவர் இல்லை என்பதை அறிந்தார். கோபக்காரரான அவர், யாகத்தை நான்தான் நடத்துகிறேன் என்பதை தெரிந்து கொண்டு என் ஆடம்பரத்திற்குச் சரியான அடி கொடுத்தார். என்னை நோக்கி உனக்கு ஆணவம் தலைக்கேறியிருக்கிறது! அதனால்தான் நீ, உன்னைப் போல் இப்படி ஒரு யாகத்தை வேறு யாரால் செய்ய முடியும்? என்று நினைக்கிறாய். அதுதான் குதிரை போன்று மதர்த்து நிற்கிறாய்! ஆதலால் நீ ஒரு குதிரையாக மாறுவாய் என்று சாபம் கொடுத்தார். அதைக் கேட்டு, நான் பயந்துவிட்டேன். என்னுடைய அகந்தை என்ற பெரிய காடு, அவரது சாபம் என்ற காட்டுத்தீயில் எரிந்து சாம்பலாகிவிட்டது.
அவர் திருவடியில் வீழ்ந்து வணங்கி நான் பணிவுடன் செய்ய வேண்டிய யாகத்தை ஆணவத்துடன் செய்தேன். மேலும் அகந்தை காரணமாக, உங்களை உரிய முறையில் வரவேற்கவும் தவறிவிட்டேன். என்னை மன்னித்து அருள் புரியுங்கள் என்று மன்றாடி வேண்டினேன். மனமிரங்கிய முனிவர், நீ ஸ்ரீ ராமரை தியானம் செய்யும் ஒரு ராம பக்தன். அதனால் உன் பிழையை மன்னித்து, உனக்கு நற்கதி கிடைப்பதற்கு ஒரு வழி சொல்கிறேன். நான் கொடுத்த சாபத்தின்படி, நீ ஒரு குதிரையாக மாறுவாய். ஆனால் ஸ்ரீ ராமர் மீது நீ செய்த தியானம் ஒருபோதும் வீணாகாது. அது உன்னை நிச்சயம் காப்பாற்றும். எதிர்காலத்தில் ஸ்ரீ ராமர் ஒரு அஸ்வமேத யாகம் செய்வார். அப்போது நீ யாகக் குதிரையாக இருப்பாய். யாக பூஜையின் முடிவில், ராமரின் திருக்கரங்கள் உன்மீது படும். அப்போது நீ சாபம் நீங்கித் தேவனாக மாறுவாய்! என்று கூறி அனுக்கிரகம் செய்தார். துர்வாச முனிவர் கொடுத்த சாபத்தின்படி, நான் அஸ்வமேத யாகக் குதிரையாக இருந்ததால், இப்போது தங்களின் திருக்கரங்கள் என்மீது படும் ஒரு மகாபாக்கியமும் எனக்குக் கிடைத்தது. அது என்னை தேவனாக்கியிருக்கிறது! நீங்கள் என்னை ஆசீர்வதியுங்கள் என்று தெரிவித்தான். ராமரும் அவனை ஆசீர்வதித்தார். அப்போது ஆகாயத்திலிருந்து ஒரு தேவலோக விமானம், அங்கு வந்து இறங்கியது.தேவ புருஷன் அதில் அமர்ந்து தேவலோகம் சென்றான். அந்தணன் அகங்காரத்தால் தன் வாழ்க்கையைப் பாழாக்கிக்கொண்டான் என்பது உண்மைதான். என்றாலும் அவன் செய்த ராம தியானம், அவனுக்குச் சொர்க்கலோக வாழ்வைப் பெற்றுத் தந்தது. |
|
|
|