|
பாண்டவர்கள் அஞ்ஞான வாசம் (யார் கண்ணிலும் படாமல் வாழ்தல்) சென்ற போது, விராட மகாராஜன் அவையில் யாரும் அறியாமல் மாறுவேடத்தில் பணி செய்தனர். அரண்மனையில் ராணி சுதேஷ்ணைக்கு பணிப்பெண்ணாக திரவுபதியும் மாறுவேடத்தில் இருந்தாள். ராணியின் தம்பி கீசகன் பெண்கள் விஷயத்தில் பலவீனமானவன். ஒரு சமயம் சகோதரியைப் பார்க்க அரண்மனைக்கு வந்தவன், திரவுபதியைப் பார்த்து விட்டான். அவளது அழகில் லயித்து நெருங்கிப் பேசினான். அவனது எண்ணத்தை அறிந்த திரவுபதி புத்திமதி சொல்லியும் அவன் கேட்கவில்லை. சுதேஷ்ணையிடம், கீசகனின் நடத்தை பற்றி கூறினாள். அவள் தம்பியைத் திட்டி அனுப்பி விட்டாள். ஆனாலும், அவனுக்கு திரவுபதியின் நினைப்பாகவே இருந்தது. அவளது நினைப்பில் படுத்த படுக்கையாகி விட்டான். தம்பியின் நிலைகண்டு வருந்திய சுதேஷ்ணை, திரவுபதியை தன் தம்பியை ஒருமுறை பார்த்து விட்டு வரும்படி சொல்லி அனுப்பினாள்.
திரவுபதியும் ராணிக்காக அங்கு செல்லவே, கீசகன் அவளை தீயஎண்ணத்துடன் நெருங்கினான். அவள் அவனிடமிருந்து தப்பி விராடபுரம் அரண்மனையில் பலரும் கூடியிருந்த அவைக்குள் நுழைந்தாள். கீசகனும் அவளைத் துரத்தி வந்து, பொது இடம் என்றும் பாராமல் திரவுபதியை நெருங்கினான். ஏற்கனவே துரியோதனன் அவையில், கற்புக்கு பங்கம் வந்தபோது, கிருஷ்ணரால் காப்பாற்றப்பட்ட திரவு பதிக்கு இது இரண்டாவது சோதனையாக அமைந்தது. எல்லோரும் அந்த அருவருக்கத்தக்க காட்சியைப் பார்த்தனரே தவிர, ராணியின் தம்பி என்பதால் தடுக்க முடியாமல் தவித்தனர். உதவியற்ற நிலையில் திரவுபதி சூரிய பகவானை வேண்டிக்கொண்டாள். அவர் ஒரு கிங்கரனை அங்கு அனுப்பினார். அவன் சுழற்காற்றாக மாறி, கீசகனை துõக்கி எறிந்தான். பின்னர் திரவுபதி பீமனிடம் நடந்ததைச் சொல்ல, அவன் கீசகனை சமயோசிதமாகக் கொல்ல முடிவெடுத்தான். இரண்டு நாட்கள் கடந்தன.
காற்றால் துõக்கி எறியப்பட்ட கீசகன் உடல்வலி தாளாமல் அரண்மனையிலேயே முடங்கிக் கிடந்தான். வலி தீர்ந்ததும் மீண்டும் திரவுபதியின் நினைவு எழ, அவள்இருக்கும் இடத்திற்கு விரைந்தான்.அவளிடம் ஆசை வார்த்தைபேசினான். அன்றிரவில் அரண்மனைத் தோட்டத்திற்கு வரும்படிகீசகனை அழைத்தாள்.கீசகன் மகிழ்ச்சியுடன் அங்குசென்றான். அழகே வடிவாய் ஒருகம்பத்தின் அருகில் முகத்தைத் திருப்பி நின்று கொண்டிருந்த திரவுபதியைவர்ணித்தான். அவள் காலில் விழுந்து, “இனி நீயே எனக்கு கதி,” எனபுலம்பினான். அவ்வளவு தான்... அவனை அந்தப் பெண், அலாக்காகத் துõக்கினாள். கரகரவென சுற்றி மேலே எறிந்தாள். கீசகன் சுதாரித்து விட்டான். வந்திருப்பது பெண் வேடத்தில் வந்த யாரோ ஒரு ஆண் என்பதை! ஆம்... பீமன் அங்கே ஆஜானுபாகுவாக நின்றான். கீசகன் அவனுடன் கடுமையாகப் போரிட்டான். இருவரும் சம பலமுடைய வீரர்கள் என்றாலும், கீசகன் செய்த தீவினை அவனுக்குஎதிராக மாறி அவனைக் கொன்றது. பெண்களை இம்சைப்படுத்தும் நாடும், வீடும் நன்றாக இருக்காது என்பதற்கு இந்தக்கதை ஒரு உதாரணம். |
|
|
|