|
ஒரு கிராமத்தில் கிருஷ்ணதாஸ் என்ற ஏழை தன் மனைவியுடன் வசித்தான். அவன் பக்தியும், நல்லொழுக்கமும் கொண்டவன். போதும் என்ற மனம் உடையவன். சிறிய வருமானம் என்றாலும் ஆன்மிகத்திற்கும், திக்கற்றவர்களுக்கும் பொருளுதவி செய்தான். சாதுக்களுக்கு தொண்டு செய்தான். இதனால் கையில் பணம் மிச்சமில்லை. கிருஷ்ணதாஸின் மனைவியோ, கணவனின் குணங்களுக்கு நேர்மாறானவள். அவளுக்கு பணம் மட்டுமே குறி. ஆடம்பர வாழ்வை விரும்பினாள். தன் கணவனிடம், அதிகமாக சம்பாதிக்கச் சொல்லி தொந்தரவு செய்தாள். அவளிடம் கிருஷ்ணதாஸ், “நாம் எளிய வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான செல்வத்தை, இறைவன் நமக்குக்கொடுத்திருக்கிறான். இதற்கு மேலும் நீ ஆசைப்படக் கூடாது,” என்பான். ஆனால், அவள் தன் கருத்தில் உறுதியாக இருந்தாள். இவ்விதம் அவள் தொந்தரவு செய்தது கிருஷ்ணதாசுக்கு பிடிக்கவில்லை. ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு மகான் வந்தார். அவர் சித்துவேலை செய்பவர்.
இது கிருஷ்ணதாஸ் மனைவி காதுக்கும் எட்டியது. தன் கணவனிடம், “நம் ஊருக்கு வந்துள்ள மகானிடம் பல யோகசித்திகள் இருக்கின்றனவாம்.நீங்கள் சென்று அவரிடம், நமக்கு அதிகவருமானம் வருவதற்கு ஏதாவது வழி செய்யும்படி கேளுங்கள்” என்றாள். அவன் அவளிடம், “ஒரு மகானிடம் போய் விவேகம், வைராக்கியம், பக்தி, ஞானம், சத்தியம், தர்மம் ஆகிய தெய்வீகப் பண்புகளை பெறுவதற்கு ஆசீர்வதியுங்கள்’ என்றுதான் கேட்க முடியும். அதுதான் நியாயம். அதை விட்டு பணம் பற்றி கேட்பது சரியில்லை” என்று தயங்கியபடியே சொன்னான்.பணத்தாசை பிடித்த அவளோ, “அவரிடம் சென்று, ‘இரும்பைத் தொட்டால் தங்கமாக மாற்றும் மாயக்கல் வேண்டும் என்று கேளுங்கள். நான் சொல்வதை அவரிடம் அப்படியே சொல்லுங்கள்!” என்று கணவனை வற்புறுத்தினாள். கிருஷ்ணதா”க்குவேறு வழி தெரியவில்லை. எனவே அவன் விருப்பம் இல்லாமலே மகானிடம் சென்றான். அப்போது மகான் பக்தர்களிடம், “கிருஷ்ணனின் அனுக்கிரக சக்திதான் ராதை. சுயநலம் என்பதே இல்லாத துõய பக்திக்கு எடுத்துக்காட்டாக இருப்பவள்” என்று கூறிக்கொண்டிருந்தார். கிருஷ்ணதாஸ் மகானின் எதிரில் சென்று உட்கார்ந்தான். மனைவி கூறியதை மகானிடம் தெரிவிப்பதற்கு அவன் மனம் கூசியது. மக்கள் சென்று விட்டனர்.
கிருஷ்ணதாஸ் மட்டும் அங்கேயே இருப்பதைக் கண்ட மகான் அவனிடம், “நீ ஏதோ சொல்ல விரும்புகிறாய். ஆனால் தயங்குகிறாய்! தயங்காமல் சொல்” என்று கூறினார். அவரிடம் கிருஷ்ணதாஸ் தன் மனைவி சொன்ன விஷயத்தை தயக்கத்துடனும், வெட்கத்துடனும் சொல்லி முடித்தான். கிருஷ்ணதாஸ் சொன்னதைக் கேட்ட மகான், “ஓ! இதுதானா விஷயம்? நீ கேட்கும் ஒரு மாயக்கல்லை, நேற்று தான் ஊர்க்கோடியில் இருக்கும் சாக்கடையில் வீசிஎறிந்தேன். நீ வேண்டுமானால், அந்தச் சாக்கடையில் அதை தேடிப் பார்!” என்று சர்வசாதாரணமாக சொன்னார். கிருஷ்ணதாஸ் சாக்கடை இருந்த இடத்திற்கு விரைந்தான். அதை துழாவியதில் வட்ட வடிவத்தில் பிரகாசமான ஒரு கல் கிடைத்தது. அதைப் பார்த்ததும், அதுதான் மகான் குறிப்பிட்டமாயக்கல்லாக இருக்கும் என்று யூகித்தான். அதை சோதிக்க பக்கத்தில் இருந்த பழைய இரும்பு ஆணியை எடுத்துத் தொட்டுப் பார்த்தான். உடனே அந்த ஆணி தங்கமாக மாறியது. இப்படியே ஒரு இரும்பு தகரம், இரும்பு பூட்டு ஆகியவற்றை தொட்டான். அவையும் தங்கமாக மாறின. பிறகு அவன் மாயக்கல்லுடன் மகான் இருந்தஇடத்திற்கு ஓடினான். அவரிடம் அவன், “சுவாமி! இதுதானே நீங்கள் குறிப்பிட்ட மாயக்கல். இரும்பைத் தொட்டால் தங்கமாக மாற்றும் இந்த மாயக்கல் விலை மதிப்பற்றது.
இதை அற்பமானது என்று நினைத்து, சாக்கடையில் வீசியெறிந்திருக்கிறீர்களே! இதையே நீங்கள் ‘அற்பம்’ என்று கருதி சாக்கடையில் போட்டு விட்டதால், இதை விடவும் மிகவும் உயர்ந்த ஒரு பொருள் உங்களிடம் இருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நினைக்கிறேன்,” என்றான். மகான் அவனிடம், “அன்பனே! நீ நினைப்பது சரிதான். இந்த மாயக்கல்லைக் காட்டிலும், பல ஆயிரம் மடங்கு உயர்ந்த ஒரு பொருள் என்னிடம் இருக்கிறது. அதுதான் இறைவனின் திருநாமம் என்ற ஒப்புயர்வற்ற ஒரு பொருள். அதை நான் மகிழ்ச்சியுடன் உனக்குத் தர தயாராக இருக்கிறேன். ஆனால், அந்த ஈடு இணையற்ற பொருளைப் பெறுவதற்குரிய மனப்பக்குவம் உன் மனைவிக்கு இல்லை. அவளிடம் உலகப்பற்று நிறைந்திருக்கிறது. நீ அவளிடம் சென்று, உன்னிடம் இருக்கும் இந்த மாயக்கல்லைக் கொடு. அதன்பிறகு என்னிடம் வா,” என்றார். கிருஷ்ணதாசும், உலக மக்கள் மதிக்கும் செல்வங்கள் அனைத்தையும் தரக்கூடியது இந்த மாயக்கல். அதைவிடவும் உயர்ந்த பொருள் இறைவன் திருநாமம்தான்! அதை இந்த மகானிடம் எப்படியும் பெற வேண்டும் என்ற முடிவுடன் மனைவியிடம் சென்று மாயக்கல்லைக் கொடுத்தான். அவள் அதைக் கொண்டு வீட்டிலிருந்த கத்தி,அரிவாள்மனை, அடுப்பு ஊதும் குழல், இரும்புப்பூட்டு போன்றவற்றைத் தொட்டுப் பார்த்தாள். அவை தங்கமாக மாறின. அவள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டாள். அதன் பின் கிருஷ்ணதாஸ் மகானிடம் சென்றான். மகான் அவனுக்கு, உலகியல் இன்பங்களையும், செல்வங்களையும்விட இறைவன் திருநாமம் எவ்வளவு மகிமை வாய்ந்தது என்பதை விளக்கினார். பிறகு அவனுக்கு, இறைவனின் திருநாமத்தை மந்திரோபதேசம் செய்து அருள் புரிந்தார். அதன்பிறகு அவன் தன் மனைவியுடன் சென்று வாழவில்லை. மகானிடமிருந்து பெற்ற இறைவன் நாமத்தை, சதா சர்வகாலமும் பூரண பக்திசிரத்தையுடன் ஜபம் செய்ய ஆரம்பித்தான். அதனால் அவனுக்கு உரியசமயத்தில் இறைவன் தரிசனமும் கிடைத்தது. முடிவில் அவன் அச்சங்களுக்கும், அல்லல்களுக்கும், பந்தங்களுக்கும் காரணமான பிறவிச்சூழலிலிருந்து அறவே விடுபட்டான். கடலை அடையும் நதி போல், இறைவனுடன் இரண்டறக் கலந்து முக்தி பெற்றான். |
|
|
|