|
சிவனின் அருளைப் பெற விரும்பிய நாரதர் முனிவர்களை ஒன்று கூட்டி யாகம் நடத்தினார். யாகத்தில் பலியிட ஆடுகள் கட்டப்பட்டிருந்தன.ஒரு முனிவர் மந்திரங்களை தவறாக உச்சரித்தபடி, தீயில் ஆகுதிப் பொருட்களை சேர்த்துக் கொண்டிருந்தார். அதன் காரணமாக யாகத்தீயில் இருந்து சிவப்பு நிறம் கொண்ட ஆடுக்கிடா ஒன்று தோன்றி, உங்களை கொல்லப் போகிறேன் என்று பாய்ந்தது. முனிவர்கள் சிவனிடம் தஞ்சம் அடைய ஓடினர். அப்போது தன் தம்பிகளான நவ வீரர்களுடன் சிறுவன் முருகன் விளையாடிக் கொண்டிருந்தார். நாரதர் அவரிடம் நடந்ததைச் சொல்லிக் காப்பாற்றும்படி வேண்டினார். முருகனும் தன் சேனைத்தலைவர் வீரபாகுவை அழைத்து, ஆட்டுக்கிடாவை இழுத்து வர ஆணையிட்டார். அதை அடக்கிய வீரபாகு, முருகனிடம் கொண்டு வந்து சேர்த்தார். நாரதர், முருகா! எங்களுக்கு அடைக்கலம் அளித்த நீ இந்த ஆட்டு வாகனத்தில் எழுந்தருளி அருள்புரியவேண்டும் என்று வேண்டினார். அதன்படி முருகனும் அதன் மீதேறி அமர்ந்தார். அது முதல் முருகனுக்கு தகர் வாகனன் என்னும் பெயர் உண்டானது. தகர்என்றால் ஆடு. அதன்பின், நாரதர் முனிவர்களுடன் சேர்ந்து வேள்வியை நடத்தி முடித்தார். |
|
|
|