|
சூரபத்மனின் அட்டகாசத்தை தாங்க முடியாத இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் மேரு மலையில் ஒளிந்திருந்தனர். அங்கு வந்த சிறுவன் ஒருவன், அஷ்ட நாகங்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கட்டி கயிறாக்கி மேருமலையை தேர் போல் இழுத்தான். தேவர்களோ, இதுவும் அசுரர்களின் வேலையோ என்று பயந்தனர். அப்போது மலையை இழுத்த சிறுவன் மறைந்து விட்டான். அங்கிருந்து தப்பிய தேவர்கள் பிரம்ம லோகம் சென்றனர். வழியில் அந்தச் சிறுவன் ஏதுமறியாதது போல நின்றான். அப்போது தேவர்கள் இந்திரனிடம், இந்த சிறுவனே நம்மை வம்புக்கு இழுத்தவன் என்றனர். கோபமடைந்த இந்திரன், சிறுவனே! உன்னை என்ன செய்கிறேன் பார் என்று சொல்லி தன் வஜ்ராயுதத்தை ஏவினான். அது முருகனின் மார்பில் பட்டு மலர்களாக கீழே விழுந்தது. உடனே முருகன் இந்திரன் மீது அம்பு தொடுக்க, அவனது நெற்றியைப் பிளந்தது. இந்திரன் கீழே விழுந்தான். ஒரு சிறுவனிடம் இந்திரன் போரிட்டு விழுந்ததைக்கண்ட நாரதர், தேவ குருவான வியாழ பகவானிடம் விஷயத்தை தெரிவித்தார். நேரில் வந்த வியாழன் சிறுவனைக் கண்டதும், அந்தச் சிறுவன் சிவனின் பிள்ளை முருகன் என்ற உண்மையை உணர்ந்தார். முருகனும் தன் விஸ்வரூப தரிசனத்தை தேவர்களுக்கு காட்டி இந்திரனை எழச்செய்தார். அசுரர்களை அழிப்பதாக வாக்களித்தார். தேவர்கள் முருகனின் திருவடியை வணங்கினர். |
|
|
|