|
ஓர் அப்பா தன் குழந்தைகிட்டே, நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும். படிப்போடுகூட, புத்திசாலித்தனத்தையும் வளர்த்துக்கணும் என்று அறிவுரை கூறினார். நல்லா படிச்சா புத்திசாலியா ஆகலாம்தானே அப்பா? என்று கேட்டது குழந்தை. இல்லேம்மா! நல்லா படிச்சா படிப்பாளியா வேணா ஆகலாம்; புத்திசாலித்தனத்தை நாமதான் அனுபவத்தின் மூலமா வளர்த்துக்கணும். அதை எந்தப் படிப்பாலயும் தரமுடியாது! என்றார் அப்பா. குழந்தைக்குப் புரியலை. உடனே படிப்பாளிக்கும் புத்திசாலிக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்க ஒரு கதை சொன்னார் அப்பா. ஒரு ராஜாவுக்கு இரண்டு பிள்ளைகள். இளையவன் படிப்பில் கெட்டி; அதோடு நல்ல புத்திசாலியும்கூட. மூத்த பிள்ளை மக்கு. ஆனாலும், அவனுக்குத்தான் அடுத்து இளவரசு பட்டம் கட்டியாகணும். யோசிச்சார் ராஜா.
என் மூத்த மகனை பக்கத்து ராஜ்ஜியத்தில் இருக்கிற பெரிய ஞானிகிட்டே ஒரு வருஷ காலத்துக்கு குருகுல வாசம் அனுப்பி, கல்வி கேள்விகளில் அவனை மிகச் சிறந்தவனாக்க முயற்சி பன்றேன். அதுக்கப்புறமும் அவன் தேறலைன்னா, இளைய மகனுக்கே இளவரசுப் பட்டம் கட்டிடலாம் என்று முடிவெடுத்தார். அதன்படியே, அவரின் மூத்த மகன் சென்று ஒரு வருஷ காலம் குருகுல வாசம் இருந்து, சகல வித்தைகளையும், சாஸ்திரங்களையும் கற்று வந்தான். விதவிதமான கேள்விகள் கேட்டு அவனது அறிவைச் சோதிச்சார் அமைச்சர். எல்லாத்துக்கும் டாண் டாண்ணு பதில் சொன்னான் அவன். அரசருக்கும் பூரண திருப்தி. கடைசியா ஒரு சோதனை...ன்னு சொன்ன அமைச்சர், தன் வலது கையை மூடிக்கிட்டு, இதுக்குள்ளே என்ன இருக்குன்னு சொல்லு பார்ப்போம்? என்றார். மூத்த மகன், தான் கற்ற வித்தைகளை, ஞானத்தையெல்லாம் ஒண்ணு திரட்டி, அமைச்சரின் கையைக் கூர்ந்து நோக்கினான்.
உங்க கைக்குள்ளே இருக்கிறது ஒரு வட்டமான பொருள். அந்த வட்டமும் முழுத் தகடா இல்லாம, வளையம் போல இருக்கு. உறுதியான உலோகத்தால் ஆன பொருள் அது... ன்னு சொல்லிக்கிட்டே போனான் அரசனின் மகன். அடையாளமெல்லாம் சரிப்பா! ஆனா, அந்தப் பொருள் என்னன்னு சரியா சொல்லு? ன்னார் அமைச்சர். ரொம்ப நேரம் தலையைப் பிடிச்சுக்கிட்டு யோசிச்சவன், ஆங்! கண்டுபிடிச்சுட்டேன். உங்க கைக்குள்ளே இருக்கிறது. வண்டிச்சக்கரத்துக்கு மாட்டுற இரும்புப் பூண் அப்படீன்னான். தலையில அடிச்சுக்கிட்டாங்க அரசரும் அமைச்சரும். அடையாளம் எல்லாம் சரியா சொன்னவனுக்கு, ஒருவரின் உள்ளங்கைக்குள் வண்டிச்சக்கரம் அடங்காதுங்கிற சின்ன விஷயம் உறைக்கலை. இந்த இடத்துலதான் புத்திசாலித்தனம் தேவைப்படும். அமைச்சர் தன் கைக்குள்ளே வெச்சிருக்கிறது அவரின் மோதிரமா இருக்கலாம்னு சொன்னான் இளைய மகன். கையைத் திறந்து காண்பிச்சார் அமைச்சர் அதேதான். அப்புறமென்ன, புத்திசாலி மகனுக்கு இளவரசுப் பட்டம் கட்டினார் அரசர். வெறுமே புராணங்கள் இதிகாசங்களைப் படிக்கிறதால் இறைவனைப் பற்றிய அறிவு வேணும்னா நமக்குக் கிடைக்கும். ஆனா, எப்படி புத்திசாலித்தனம் அனுபவத்தால் வருதோ, அதேபோல கடவுளைப் பற்றிய புரிதலும் அனுபவத்தால்தான் கிடைக்கும். |
|
|
|