|
குருநாதர் ஒருவர் தான் தங்கியிருந்த ஊரில் சிவன்கோயில் ஒன்றை அமைப்பதற்காக பலரிடம் நன்கொடை பெற்று திருப்பணியை ஆரம்பித்திருந்தார். ஏழைப் பெண் ஒருத்தி வெகுநாள் சிரமப்பட்டுச் சேர்த்த இரண்டு வெள்ளிக்காசுகளுடன் குருவைத் தேடி ஆசிரமம் வர, உள்ளேயிருந்து குருவே அவளைத் தேடி வந்து பொற்காசுகளைப் பெற்றுக்கொண்டதோடு, அவள் சேமநலம் விசாரித்து ஆசிர்வாதம் கொடுத்து அனுப்பி வைத்தார். இதைக் கேள்விப்பட்ட அந்த ஏழைப் பெண்ணின் முதலாளியம்மா ஆயிரம் பொற்காசுகளுடன் ஆசிரமம் வந்தாள். அவளிடம் நன்கொடை பெற புதிதாய் சேர்ந்த சீடன் ஒருவனை அனுப்பி வைத்தார் குரு. அவளோ குருநாதரைப் பார்க்க வேண்டும் எனப் பிடிவாதம் பிடிக்க, வெகுநேரம் கழித்து குரு வந்தார். குருவிடம் அவள், என் வேலைக்காரி இரண்டே, இரண்டு காசுகளுடன் வந்தபோது நீங்களே வந்து பெற்றுக்கொண்டீர்கள், இப்போது நான் ஆயிரம் பொற்காசுகளுடன் வந்துள்ளேன். இதை வாங்க யாரையோ அனுப்புகிறீர்களே.... இதென்ன நியாயம்? என்று கேட்டாள். புன்னைகத்த குருநாதர், அவள் கொண்டு வந்தது சொற்பத் தொகை என்றாலும் அதில் உண்மையான ஈடுபாடு இருந்தது. நீ பெரும் தொகையுடன் வந்திருந்தாலும் உன்னிடம் அர்ப்பணிப்பு உணர்வு இல்லை. அதனால்தான் நான் வரவில்லை என்று கூற, அகந்தை மறைந்த உணர்வுடன் குருவின் பாதம் பணிந்தாள் சீமாட்டி. |
|
|
|