|
மவுரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்தனின் குரு சாணக்கியர். இவரது அர்த்த சாஸ்திரம் அரசியல் பொக்கிஷம்! அவர் ஒருநாள் அரசவையில், மன்னா ஏழை மக்கள் கடும் குளிரால் வாடுகிறார்கள். அவர்களுக்கு இலவச கம்பளி கொடுத்து உதவ டேண்டும்! என்று வேண்டுகோள் விடுத்தார். அரசனும் அதை ஏற்று, கம்பளி வழங்கும் பொறுப்பை அவரிடமே ஒப்படைத்தான். அரசாங்கச் செலவில் வாங்கப்பட்ட கம்பளிகள், ஏழைகளுக்கு விநியோகிக்க வசதியாக, சாணக்கியரது வீட்டில் அடுக்கப்பட்டன. இந்த விஷயம், ஊர் எல்லையிலிருந்த கொள்ளையர்களுக்குத் தெரிய வந்தது. அன்று இரவு, சாணக்கியரின் வீட்டுக்குச் சென்று கம்பளிகளைக் கொள்ளையடித்துக் கொண்டு செல்வது என்று அவர்கள் முடிவு செய்தனர். திட்டப்படி அன்று இரவு சாணக்கியரின் வீட்டுக்குள் அவர்கள் நுழைந்தனர். அங்கு, அரதல்பழசான கிழிந்த போர்வை ஒன்றைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார் சாணக்கியர். அருகில், அவரின் தாயாரும் அப்படியே! கொள்ளையர்களுக்கு ஆச்சரியம். திருட வந்ததையும் மறந்து சாணக்கியரை எழுப்பினர்.
கண் விழித்த சாணக்கியர் ஆச்சர்யமுற்றார். எதிரே நின்றிருந்த திருடர்களில் ஒருவன், ஐயா...... நாங்கள் உள்ள வீட்டில் இருக்கும் கம்பளிகளைத் திருடவே வந்தோம். இங்கு புதிய கம்பளிகள் இவ்வளவு இருந்தும், நீங்களும் உங்கள் தாயாரும் கிழிந்த போர்வையைப் போர்த்திக்கொண்டிருக்கிறீர்களே? புதிய கம்பளிகளில் இரண்டை உங்களது தேவைக்காக எடுத்திருக்கலாமே? என்று கேட்டான். அதற்கு சாணக்கியர், அவை, ஏழை-எளியோருக்கு வழங்கப்பட இருக்கும் அரசாங்கப் பொருட்கள். அதை எப்படி நான் உபயோகிக்க முடியும்? மன்னன் என் மீது கொண்டுள்ள நம்பிக்கை என்னாவது? என்றார். அதைக் கேட்டதும் சாணக்கியரின் கால்களில் விழுந்த திருடர்கள், தங்களை மன்னிக்க வேண்டினர். இனி, வாழ்நாளில் நாங்கள் திருடவே மாட்டோம் என்று அவர் முன் சத்தியமும் செய்தனர். சாணக்கியர், இன்றளவும் மக்கள் மனதில் வாழ்கிறார் என்றால், அதற்குக் காரணம்... அவரது அரசியல் தந்திரங்கள் மட்டுமல்ல; தன்னலமற்ற அவரது தூய்மையான வாழ்வும்தான்! |
|
|
|