|
நிமி என்னும் மன்னன் விதேக நாட்டை ஆண்டு வந்தான். சுக போகத்தில் நாட்டம் கொண்ட அவனுக்கு விஷ ஜுரம் உண்டானது. அரண்மனை வைத்தியர் பச்சிலை மருந்து கொடுத்தார். குளிர்ச்சியான சந்தனத்தை மன்னரின் உடம்பு முழுவதும் பூசும்படி கூறினார். ராணி தன் கைப்படவே சந்தனம் அரைத்துக் கொடுக்க தயாரானாள். சந்தனக்கல்லில் கட்டையைத் தேய்த்தாள். அப்போது கைகளில் உள்ள வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசும் சத்தம் கேட்டது. இதை தொந்தரவாக உணர்ந்ததை மன்னனின் முகம் காட்டியது. ஆனாலும் ராணியிடம் வெளிப்படுத்தவில்லை. மன்னரின் மனநிலையை உணர்ந்த ராணி மறுநாள் கைகளில் இருந்த வளையல்களை கழற்றி விட்டாள். சம்பிரதாயத்திற்காக ஒரு வளையல் மட்டும் அணிந்து கொண்டாள். சந்தனம் அரைக்கும் போது வளையல் சத்தம் கேட்கவில்லை. இதை அறியாத மன்னன், ஏன் இன்று சந்தனம் அரைக்கவில்லையோ? என்று கேட்டான். அப்போது சந்தனம் தேய்த்துக் கொண்டிருந்த ராணி, வளையல்களின் ஓசை தங்களுக்கு வேதனை அளிப்பதால் கைக்கு ஒரு வளையல் மட்டும் அணிந்திருக்கிறேன், என்றாள். அப்போது மனதில் பளிச்சென ஒரு எண்ணம் தோன்றியது. வளையல்கள் கையில் ஒன்றொடொன்று உரசிக் கொள்வது போல, மனதில் உலக ஆசைகள் ஒன்றோடு ஒன்று மோதுகின்றன. ஒரு வளையல் மட்டும் இருக்கும் போது சலசலப்புக்கு வழியே இல்லை. கடவுள் சிந்தனை என்ற ஒன்று மட்டும் இருந்தால் எப்போதும் அமைதியாக வாழலாம் என்று ஞானம் உண்டானது. சுகபோகத்தை கைவிட்ட மன்னர் துறவியாக மாறினார். |
|
|
|