|
வாழ்க்கை படிப்பினையும், வாழ்வியல் நெறிமுறைகளையும் கற்றுத் தருவது நாட்டுப் புறக் கதைகள். கற்றறிவு இல்லாவிட்டாலும், முற்றறிவு படைத்த நம் முன்னோர்களால் சொல்லப்பட்டு, இன்று வரை, மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் கதைகளில் ஒன்று இது: ஒரு பெண்மணிக்கு, சூரியன், வருணன், வாயு மற்றும் சந்திரன் என, நான்கு பிள்ளைகள். அவர்களை மிகுந்த அன்போடு வளர்த்து வந்தாள் அந்த தாய். ஒருநாள், உறவினர் வீட்டு விருந்துக்கு பிள்ளைகள் நால்வரும் புறப்பட்ட போது, பிள்ளைகளே... விருந்தில் சுவையான பட்சணங்கள் போடுவர்; அவற்றில் சிலவற்றையாவது எனக்காக எடுத்து வாருங்கள்... என்றாள். பிள்ளைகளும், ஆகட்டும் அம்மா... என்று கூறி, சென்றனர். விருந்தில், பலவகை பட்சணங்கள் பரிமாறப்பட்டன. அதைப் பார்த்ததும், சூரியனுக்கு நாக்கில் நீர் சுரந்தது. தன் சகோதரர்களை ஒரு முறை திரும்பி பார்த்தவன், இவர்கள் அம்மாவுக்காக எடுத்துப் போவர்; அதனால், நாம் எடுத்து செல்ல வேண்டியதில்லை... என நினைத்து, பட்சணங்கள் அனைத்தையும் தின்று விட்டான்.
வருணனோ, தன் இலையில் போடப்பட்ட பட்சணங்களில் பாதியை தாயாருக்கென்று எடுத்து வைத்து, மீதியை உண்டான். ஆனால், அவனுக்கு திருப்தி ஏற்படவில்லை. அதனால், நம் சகோதரர்கள் கொடுப்பர்; அதுபோதும் அம்மாவிற்கு... என்று நினைத்து, தாய்க்கென்று எடுத்து வைத்த பட்சணத்தையும் தின்று விட்டான். அடுத்தவன் வாயுவும், வருணனைப் போலவே, முதலில் தாய்க்கென்று எடுத்து வைத்து, பின், ஆவலை அடக்க முடியாமல் தானே உண்டு விட்டான். ஆனால், சந்திரன் மட்டும் தனக்கு போடப்பட்ட பட்சணங்கள் அனைத்தையும், தாய்க்காக எடுத்து வந்தான். நால்வரும் வீட்டிற்கு வந்ததும், பட்சணம் எங்கே? எனக் கேட்டாள் தாய். சந்திரனைத் தவிர, மூவரும் தலை குனிந்தனர். சந்திரன் தன் கையிலிருந்த பட்சணங்களை தாயிடம் தந்தான். அதில் பாதியை சந்திரனிடம் கொடுத்த தாய், மற்ற மூவரையும் பார்த்து, நால்வருமே என் பிள்ளைகளாக இருந்தாலும், சந்திரனைத் தவிர நீங்க மூவருமே, வயிறையே பிரதானமாக கருதி விட்டீர்... அதனால், சூரியனே... இன்று முதல், உன் வெயிலில் காய்பவர்கள், பாழாப்போன சூரியன், இந்தக் கொளுத்து கொளுத்தறானே... என்று உன்னை ஏசட்டும்.
வருணா... நீ அடை மழையாக பெய்யும் போது, என்ன இது... பிரளய காலத்து மழை மாதிரி இப்படி கொட்டுகிறதே... நாசமாப் போன மழை... என்று உன்னை திட்டட்டும்... என கூறி, வாயுதேவன் பக்கம் திரும்பினார். வாயுதேவா... இன்று முதல், நீ பலத்த காற்றாக வீசும் போது, பேய்க் காத்து இப்படி வீசி அடிக்கறதே... இது நின்னு தொலையாதா... என்று உன்னை நிந்திக்கட்டும்... என்றவள், சந்திரனைப் பார்த்து, சந்திரா... தாயை மறக்காத உன்னை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாராட்டுவர். உன்னை கண்டு களிப்பதோடு, உன் ஒளியில் நிலாச்சோறு உண்டு, உன்னை வாழ்த்துவர். மற்ற மூவருக்கும் திட்டு கிடைத்தாலும், உனக்கு வாழ்த்தும், பாராட்டும் கிடைக்கும்... என, ஆசி கூறினாள். அதன்படியே இன்றும் நடந்து வருவது நமக்கே தெரியும். தாயாரை மதித்து, அவர் சொற்கேட்டு நடப்பதன் பெருமை இது. இப்படிப்பட்ட கதைகள் மாணவரிடையே பரவினால், முதியோர் இல்லங்கள் மூடுவிழா காணாதா! |
|
|
|