|
முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை ஆண்டு வந்த அரசனுக்கு அவலட்சணமான ஒரு மகள் இருந்தாள். அவள் குள்ளமாகவும், கூனல் முதுகுடனும் இருந்தாள்; வாய் கோணலாய் இருக்கும்; பற்கள் வெளியே துருத்திக் கொண்டு தெரியும்; இளவரசிக்கு திருமண வயது வந்தது. தன் மகளுக்கு திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்ட அரசர், என் மகள் இளவரசியைத் திருமணம் செய்து கொள்ளப் பிரியமுள்ளவர்கள் பெண்ணை வந்து பார்க்கலாம் என்று முரசு கொட்டி அறிவித்தான். அரசனுக்கு ஒரே புதல்வியாதலால், அரசனுக்குப் பின் தங்களுக்கு ராஜ்யம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் பல இளவரசர்கள் வந்து பெண்ணைப் பார்த்தனர். பார்த்ததுமே பேச முடியாமல், தங்கள் ஊர் நோக்கி ஓட்டம் பிடித்தனர். மற்றவர்களை போலவே, தனக்கும் ஒரு அழகிய வாலிபன் கிடைக்க வேண்டும் என்று பெரிதும் ஆசைப்பட்டாள் இளவரசி. ஆனால், எந்த ஒரு வாலிபனும் தன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்பாததை அறிந்து, அவள் மனமுடைந்து போனாள். ஒருநாள் அவள் தன் தந்தையிடம் சென்று, எந்த ஒரு வாலிபனும் என்னைத் திருமணம் செய்து கொள்ள முன் வரவில்லை. ஆகவே, நான் உயிர் வாழ விரும்பவில்லை, என்று சொல்லி, தன் தந்தை எதிரிலேயே கீழே விழுந்து உயிரை விட்டாள்.
தன் புதல்வியை நன்கு அலங்கரித்து, புதைக்க ஏற்பாடு செய்தான் அரசன். ஆனால், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எரிப்பது தான் நல்லதென்று சொன்னார்கள். அதன்படி அரசன் ஈம விறகு அடுக்கி, அவளை எரித்து விட்டான்; அவலட்சணமான அந்தப் பெண்ணின் உடம்பு எரிந்து சாம்பலாகிவிட்டது. அந்தப் பெண்ணினுடைய ஆவி, நேரே இறைவனிடம் போயிற்று; இறைவன் அந்தப் பெண்ணின் ஆவியைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து, பெண்ணே! உனக்கு விருப்பமான வரத்தைக் கேள், என்றார். இறைவா! மகிழ்ச்சி என்றால் எப்படி இருக்கும் என்பதை அறியாது நான் வாழ்க்கை முழுவதும் வாழ்ந்தேன்; யாருமே என்னை நேசிக்க வில்லை, இனி எனக்கு ஏற்படுகிற பிறவியிலாவது உலக மக்கள் அனைவருமே என்னை விரும்புமாறு என்னைப் படைக்க வேண்டும், என்று இறைவனிடம் அந்த ஆவி வேண்டிற்று. இறைவன் அந்தப் பெண்ணின் ஆவியை, அவளைத் தகனம் செய்த ஈமச் சிதைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவளுடைய விலா எலும்புத் துண்டு ஒன்று கிடந்ததால், அதனுள் அந்தப் பெண்ணின் ஆவி புகுந்து, ஒரு புகையிலைச் செடியாயிற்று. நாட்கள் சென்றன-
ஆட்டு இடையன் ஒருவன் அந்த வழியாகப் போனபோது அந்த புகையிலைச் செடியைக் கண்டான், அந்தச் செடி புதிதாகவும், அழகாவும் இருக்கிறதே என்று நினைத்தான். பிறகு அந்தச் செடியிலிருந்து ஒரு இலையைக் கிள்ளி எடுத்துக் கசக்கி முகர்ந்து பார்த்தான். வாசமாய் இருந்தது. எனவே, அந்தச் செடியிலிருந்து சில விதைகளை எடுத்துப் போய், தனது தோட்டத்தில் பயிர் செய்தான். அவை வளர்ந்து அழகாய் இருந்தன. நாள் தோறும் ஒரு இலையைக் கிள்ளி அதை முகர்ந்து பார்ப்பது வழக்கம். ஒருநாள்- அவன் அந்த இலையை வாயில் போட்டு மென்று பார்த்தான்; சிறிது காரமாயும், சுவையாயும் இருந்தது; மனதுக்கு ஆனந்தமாகவும் இருந்தது. ஆகவே, நாள்தோறும் வாயில் போட்டு மெல்லுவதை அவன் வழக்கமாக்கி கொண்டான். அதன் பிறகு ஒரு குழாயில் அடைத்தோ, இலையாகச் சுருட்டியோ, புகைத்தால் மனதுக்கு இதமாய் இருப்பதை அவன் கண்டான். இந்த இன்பத்தைப் பலருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையுடன், தனது நண்பர்களுக்கும் அவன் விவரத்தைச் சொன்னான். அவர்களும், புகையிலையைச் சுவைத்து மகிழ்ந்தனர். எல்லாரும் புகையிலையின் விதை வேண்டும் என்று அவனிடம் வேண்டினர். இடையன் உவகையோடு அந்த விதைகளை வழங்கினான். அதனால் புகையிலைச் செடி உலகம் முழுவதும் பரவி, மக்கள் விருப்பமுடன் அதை பயிர் செய்து வியாபாரம் செய்யலாயினர். இதுதான் புகையிலை செடி உருவான கதை! |
|
|
|