|
கண்ணனைக் காதலித்த பெண்களில் ராதையை உயர்ந்தவளாகப் போற்றுகிறோம். ஆனால், ராதையையும் மிஞ்சும் விதத்தில் கண்ணன் மீது அன்பு செலுத்தியவள் துளசி. கோகுலத்தில் கண்ணன் வசித்தபோது துளசி அவனை அடைந்தே தீருவேன் என்று பிடிவாதம் செய்தாள். பெற்றவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கண்மணியே! கண்ணனை அடைவது என்பது எளிதான செயலா? அவன் இப்போது தானே ராதையை மணம் முடித்துள்ளான். அவள் நமக்கு உறவுக்காரி அல்லவா? நீயும் அவனையே மணக்க எண்ணினால் நம் உறவுகளின் பகையைச் சம்பாதிக்க நேருமே! ராதையின் சாபத்திற்கு ஆளாவாயே! நாங்கள் என்ன செய்வோம் என்று வருந்தினர். பெற்றோரின் அறிவுரை கண்ணன் மீது வைத்த கண் மூடித்தனமான காதல் முன் எடுபடவில்லை. தந்தையே! ராதையின் அன்பை விட நான் கொண்டிருக்கும் அன்பு ஆயிரம் மடங்கு உயர்வானது. அவள் முந்திக் கொண்டு விட்டாள் என்பதற்காக என் காதலை விட்டுத் தர மாட்டேன். நானே ராதையிடம் சென்று பேசுகிறேன், என்றாள். பெற்றோர் தடுத்தும் கேளாமல் ராதையின் இல்லத்திற்குச் சென்றாள். கண்ணன் வெளியே போயிருந்தான். ராதை அவனது அறையை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்தாள்.
கண்ணனின் சேவையைத் தவிர வேறெதுவும் செய்ய அவளுக்கு நேரம் இருந்ததில்லை. வெறும் உடல் சம்பந்தப்பட்டதல்ல ராதையின் காதல். அது தெய்வீகமானது. பக்தியுடன் கண்ணன் உடுத்தும் ஒவ்வொரு உடையையும் கண்ணில் ஒத்தி எடுத்து வணங்கி அவற்றை அடுக்கிக் கொண்டிருந்தாள். துளசியும் கண்ணனின் பக்தை என்பதை ராதை அறிவாள். இருவரும் உறவு மட்டுமின்றி நல்ல தோழிகளாகவும் இருந்தனர். ஆனால் இப்போது தன் வாழ்க்கையைப் பங்கு போட அவள் வந்திருக்கிறாள் என்பதை ராதை உணர்ந்திருக்கவில்லை. துளசியை ராதை மகிழ்ச்சியுடன் வரவேற்றாள். கண்ணனுடன் தான் நடத்தும் வாழ்க்கை பற்றி பெருமையாகப் பேசினாள். வார்த்தைக்கு வார்த்தை கண்ணனின் நாமமே வெளிப்பட்டது. துளசி அத்தனையையும் கருத்தோடு கேட்டாள். அதன் பிறகு தான் வந்த காரணத்தை ராதையிடம் சொன்னாள். ராதா! நீ கண்ணன் மீது எவ்வளவு உயர்வான அன்பு வைத்துள்ளாய் என்பது எனக்கு தெரியும். அது அவன் துயில் கொள்ளும் பாற்கடலை விட பெரியது. ஆகாயத்தை விடப் பரந்தது. நீ அவன் மீது கொண்டுள்ள அன்பைப் போல நானும் அவர் மீது அன்பு கொண்டுள்ளேன். கண்ணன் மீது சிறுவயது முதல் காதல் கொண்டேன். ஆனாலும் வெட்கத்தால் என் காதலை வெளிப்படுத்த தயங்கினேன். நீயும் அவரை உயிருக்குயிராய் காதலிக்கும் விஷயம் எனக்கு முன்பே தெரியும். ஆனால் அதை தடுக்க மனம் விரும்பவில்லை.
காதலின் ஆழம் எனக்குத் தெரியும். சகோதரி! உன்னை நான் தடுக்காதது போல கண்ணனை நானும் அடைய என்னைத் தடுக்கக் கூடாது. என்னை அவரோடு சேர்த்து வை, என்றாள் கண்ணீருடன். ராதைக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. யாரிடம் என்ன கேட்கிறாய்? இந்த விநாடியே நீ என் தோழியாக இருக்கும் தகுதியை இழந்து விட்டாய். கண்ணன் எனக்கு மட்டுமே சொந்தமானவர் என்பதை உலகமே அறியும். ஊரிலுள்ள பெண்கள் எல்லாம் கண்ணனை விரும்பினாலும், என்னையே அவர் மணந்தார். இதிலிருந்து அவர் என் மீது கொண்ட அன்பைப் புரிந்து கொள். உடனே போய் விடு. அவரை அடையும் தகுதி யாருக்கும் இல்லை, என்று விரட்டினாள். துளசி கண்ணீருடன் வெளியேறிய போது கண்ணன் எதிரே வந்தான். அவனைக் கண்டதும் கதறி அழுதாள் துளசி. கண்ணனும் அவளைத் தேற்றினான். அவன் எல்லாம் அறிந்தவன் என்றாலும் ஏதுமறியாதது போல, என்ன பிரச்னை உனக்கு? என்று கேட்டான். துளசியும் தயக்கத்துடன் கண்ணன் மீது தனக்கிருந்த காதலை வெளிப்படுத்தினாள். கண்ணன் அவளிடம்,நீ என் மீது கொண்ட காதலை ஏற்கனவே நான் அறிவேன். ஆனால் ராதை முந்தி விட்டாளே! விதி யாரை விட்டது? உன்னை இந்தப்பிறவியில் அடையும் பாக்கியம் எனக்கு இல்லை. அடுத்த பிறவி வரும் வரை காத்திருப்பதை தவிர உனக்கு வேறு வழியில்லை, என்றான். ராதை இதைக் கேட்டு ஆவேசப்பட்டாள். கண்ணீர் அவள் கண்களை மறைத்தது. கண்ணா! என்ன சொல்கிறீர்கள்? இந்த பிறவியிலும் இனி வரும் எந்த பிறவியிலும் நானே உங்கள் மனைவி.
இவளை அடுத்த பிறவியில் ஏற்றுக் கொள்வதாகச் சொல்கிறீர்களே. இவள் இங்கிருந்தால் தானே இந்த நினைப்பெல்லாம் உங்களுக்கு வரும். இவள் ஒரு ராட்சஷனைக் கணவனாக அடைய சபிக்கிறேன். இனி இவளைத் எப்படித் திருமணம் செய்கிறீர்கள் என்று பார்க்கிறேன்! என்றாள் ஆவேசமாக. துளசி இதைக் கேட்டு கலங்கிப் போனாள். கண்ணன் ராதையைச் சமாதானம் செய்தார். துளசியிடம், நீ ராதை சொன்னபடி பூலோகத்தில் பிறப்பாய். ராதை சொன்னபடியே நடக்கட்டும். ஒரு ராட்சஷனைக் கணவனாக அடைவாய். தெரிந்தோ, தெரியாமலோ ராதை உன்னை சபித்தது வசதியாகப் போய் விட்டது. நான் பூவுலகில் சங்கசூடன் என்னும் ராட்சஷனாகப் பிறப்பேன். சென்ற பிறவியில் நீ என் மனைவியாகப் பிறந்திருந்தாய். அப்போது என் பெயர் சுதர்மன். ஒரு சாபத்தால் அடுத்த பிறவியில் அரக்கனாக மாறும்படி சபிக்கப்பட்டுள்ளேன். நான் ராட்சத வடிவம் தாங்கி வந்து உன்னை மணந்து கொள்கிறேன், என்றார். தன் சாபமே துளசிக்கு நல்வாழ்க்கைக்கு அடிகோலி விட்டது என்பதை உணர்ந்த ராதை மிகவும் வருந்தினாள். இருந்தாலும் கண்ணனின் லீலைகளில் இதுவும் ஒன்று என்பதை அறிந்த அவள் அமைதியானாள். துளசியை மார்போடு தழுவிக் கொண்டு மன்னிப்பு கேட்டாள்.
பிறகு துளசி பூலோகத்தில் வசித்த தர்மத்வஜன்- மாதவி தம்பதியரின் மகளாகப் பிறந்தாள். கண்ணன் அரக்கனாகப் பிறந்து அவளை மணந்தார். அவரது அட்டகாசங்கள் அரக்க குணத்திற்கேற்ப அமைந்தன. கண்ணனின் அரக்க வடிவமான சங்கசூடனைச் சம்ஹாரம் செய்யவும் அந்தக் கண்ணனால் தான் முடியும் என்பது விதி. துளசியின் கற்பு எப்போது கெடுகிறதோ, அப்போது தான் அந்த அரக்கன் அழிவான் என்பதால் தேவர்கள் திருமாலை நோக்கி பிரார்த்தித்தனர். திருமால் அவர்களுக்கு அருள்பாலித்து, நான் சங்கசூடனைப் போலவே மற்றொரு உருவம் எடுத்து துளசியை அடைவேன், என்று கூறி துளசியுடன் சேர்ந்தார். அவளது கற்பு குலைந்தது. சங்கசூடன் கொல்லப்பட்டான். தனது முற்பிறவியில் கண்ணனை அடைய தான் கேட்ட வரம் துளசிக்கு ஞாபகம் வந்தது. அவள் கண்ணனின் மார்பில் நிரந்தரமாக குடியிருக்க அனுமதி கேட்டாள். அதன்படி இலையாக மாறி கண்ணனின் திருமார்பை அலங்கரித்தாள். இதனால் தான் கண்ணனுக்கு நாம் துளசி மாலை அணிவித்து வணங்குகிறோம். |
|
|
|