|
ஆந்திர மாநிலத்தில் 18 ஆம் நூற்றாண்டின் முற் பகுதியில் வாழ்ந்தவர் போதனா. இவர் கல்வியில் சிறந்த நாராயண பக்தர். தினமும் விஷ்ணுவின் புகழை மக்களிடம் எடுத்துரைப்பது இவரது வழக்கம். ஒரு நாள் போதனாவின் சொற்பொழிவைக் கேட்க பண்டிதர் ஒருவர் வந்தார். அன்றைய தினம், கஜேந்திர மோட்சத்தை போதனா விளக்கிக் கொண்டிருந்தார். கஜேந்திரன் என்ற யானை முதலை வாயில் அகப்பட்டுக் கொண்டது. அதிலிருந்து தப்பிக்க, பகவானை நினைத்து, ஹே நாராயணா என்று அலறியது. யானையின் கூக்குரல் கேட்ட சமயம் பகவான், மகாலட்சுமியுடன் தாயம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திருமகளின் கவனத்தை விளையாட்டில் திருப்ப, அவரது முந்தானையை இழுத்தார். அந்த நேரம்தான் கஜேந்திரனின் அபயக் குரல் கேட்டது. பகவான் விஷ்ணு அனைத்தையும் மறந்து, கஜேந்திரனைக் காப்பாற்ற ஓடினார். லட்சுமியின் முந்தானை பகவானின் கையில் இருந்ததால் தேவியும் அவர் பின்னாலேயே ஓடினாள் என்று சொற்பொழிவை தொடர்ந்து நிகழ்த்தி முடித்தார்.
சொற்பொழிவு முடிந்ததும் பண்டிதர், தாங்கள் நன்றாகத்தான் கதை சொல்கிறீர்கள். ஆனாலும், பகவான் ஓட, தேவியும் அவர் பின்னால் ஓடினாள் என்றெல்லாம் சொல்லக்கூடாது. பகவான் கையில் சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றை ஏந்தியபடி கருடனின் பறந்து வந்தார் என்றுதான் சொல்ல வேண்டும் என்று போதனாவிடம் தெரிவித்தார். மறுநாள் போதனா அந்தப் பண்டிதர் வீட்டுக்குச் சென்றார். வீட்டுக்கு வெளியே பண்டிதரின் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தைக்குத் தின்பண்டங்கள் கொடுத்து வீட்டுக்கு சற்று தொலைவில் அதை விளையாடச் செய்தார் போதனா. பிறகு, பண்டிதரின் வீட்டுக் கிணற்றில் ஒரு பெரிய கல்லைத் தூக்கிப் போட்டு, வேகமாகப் பண்டிதரிடம் ஓடி, ஐயா! உங்கள் குழந்தை கிணற்றில் விழுந்து விட்டது! என்று கூறினார்.
சாப்பிட்டுக் கொண்டிருந்த பண்டிதர். போதனா சொன்னதைக் கேட்டு, அலறியடித்துக் கொண்டு கையைக் கழுவாமல் கிணற்றுப் பக்கம் ஓடினார். அவர் பின்னாலேயே போதனாவும் விரைந்தார். அப்போது அவர் பண்டிதரிடம், என்ன இப்படி ஓடுகிறீர்கள்! கை கழுவ வேண்டாமா? கிணற்றிலிருந்து குழந்தையைக் காப்பாற்ற ஏணி, கயிறு வேண்டாமா? துணைக்கு ஆட்கள் வேண்டாமா? என்று கேட்டார். எதையும் காதில் வாங்காத பண்டிதர் கிணற்றின் அருகில் சென்று உள்ளே எட்டிப் பார்த்தார். அப்போது அங்கே வந்த அவரது குழந்தை. அப்பா என்று அவரது கால்களைக் கட்டிக் கொண்டது. பண்டிதர் திகைப்புடன் போதனாவை நோக்கினார். போதனா, ஐயா! தங்கள் குழந்தை அபாயத்தில் இருக்கிற தென்று கேட்டதும் அதைக் காப்பாற்றுவதற்குத் தாங்கள் எவ்வளவு வேகமாக ஓடினீர்கள். வேறு எதைப் பற்றியுமே அப்போது யோசிக்கவில்லை. சாதாரண உலக அன்பே இப்படி இருக்குமானால், தெய்வத்தின் பிரேமையும், கருணையும் எவ்வளவு மகத்தானவையாக இருக்கும்? அதலால்தான் பகவான் பக்தர்களின் அபயக்குரல் கேட்டதும் எதைப்பற்றியும் சிந்திக்காமல் பக்தர்களைக் காக்க ஓடோடி வருகிறார் என்றார். பண்டிதர் தமது தவறை உணர்ந்தார். அவர் போதனா கூறிய விளக்கத்தை ஒப்புக்கொண்டார். |
|
|
|