|
பகவான் கிருஷ்ணர், யோகியானவர் தனியிடத்தில், தனிமையில் இருப்பவராய், உடலையும் மனதையும் கட்டுப்படுத்தியவராய், ஆசைகளைஅறுத்தவராய், உடைமைப் பொருட்கள் அற்றவராய், யாண்டும் தனது மனதை தியானத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று கூறியிருளினார்.
சுசௌ தேசே ப்ரதிஷ்டாப்ய ஸ்திரமாஸனமாத்மந: நாத்யுச் ச்ரிதம் நாதிநீசம் சைலாஜிநகுசோத்தரம் (ஸ்ரீமத் பகவத்கீதை 6-11)
தத்ரைகாக்ரம் மந: க்ருத்வா யதசித்தேந்த்ரியக்ரிய: உபவிச்யாஸநே யுஞ்ஜ்யாத் யோகமாத்மவிசுத்தயே (ஸ்ரீமத் பகவத்கீதை 6-12)
தூய்மையான இடத்தில் தன்னுடைய ஆஸனத்தை உறுதியாக அமைத்துக்கொண்டு, அதிக உயரமில்லாமலும், அதிக தாழ்ந்ததாக இல்லாமலும் தர்ப்பை, அதன்மேல் தோல், அதன்மேல் துணி விரித்ததாக இருக்கை ஏற்படுத்திக்கொண்டு, அதில் அமர்ந்து, மனதை ஒருமுகப்படுத்தி, மனம் இந்திரியங்கள் இவற்றின் செயல்களை அடக்கியவனாக, மனத்தூய்மைக்காக தியானத்தைப் பயில வேண்டும். பகவான் கிருஷ்ணர், தியானத்துக்குரிய புற ஸாதனங்களைக் கூறுகிறார். தூய்மையான இடத்தில் தியானம் செய்ய அமரவேண்டும். அந்த இடம் இயற்கையிலேயே தூய்மையான, ஆன்மிகத்துக்கு உகந்த இடமாக இருக்க வேண்டும். அத்தகைய சூழல் இல்லையெனில், தெய்வத் திருவுருங்களின் படங்களை வைத்து, தெய்விகத்தன்மை நிரம்பியதாக அவ்விடத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.
எங்கு அமர்ந்தால் இயல்பாகவே மனம் தியானத்தில் ஒன்றுமோ, அத்தகைய ஆன்மிகச் சூழல் நிரம்பிய இடத்தை தியானம் செய்வதற்காகத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். தியானம் செய்கின்ற ஆஸனம் ஸமமானதாக இருக்க வேண்டும். உயரமான இடத்திலோ பள்ளமான இடத்திலோ அமரக்கூடாது. ஆஸனத்தின் உறுதியான தன்மை மிக முக்கியம். ஆஸனம் என்ற சொல்லுக்கு இரண்டு பொருட்கள் இருக்கின்றன. உட்காருகின்ற முறை ஆஸனம் எனப்படும். யோகாஸனங்களில், எந்த ஆஸனத்தில் நம்மால் நீண்ட நேரம் கஷ்டப்படாமல் அமர முடியுமோ, அத்தகைய ஸுகாஸனத்தில் அமர வேண்டும். ஆஸன ஸித்தி பெற, சில மாதங்கள்கூட ஆகலாம். ஆஸனம் என்ற சொல்லானது, நாம் எதன்மீது அமருகிறோமோ அதனையும் குறிக்கும். பகவான் அழகிய ஆஸன முறை ஒன்றைக் கூறுகிறார். முதலில் தர்ப்பைப் புல்லைப் பரப்பி, அதன் மீது மான் தோலை போட்டு, அதன் மீது மெல்லிய துணியை விரித்து அமர வேண்டும் என்று கூறுகிறார்.
தர்ப்பைப் புல்லின் நுனியானது மிகக் கூர்மையானது. ஆன்மிக வாழ்வில் தியான பயிற்சியில் முனைந்து ஈடுபடவேண்டும் என்ற ஆர்வத்தை, ஒருமுகப்பாட்டைத் தூண்டுவது தர்ப்பைப் புல். மிருகங்களில் மான் மிகுந்த சிறப்புடையது. பிறர் உண்ட எச்சில் பொருட்களை மான் உண்ணாது. மான் தோல் உடுத்திக்கொள்வது என்ற சடங்கானது, உபநயன ஸம்ஸ்காரத்தில்கூட இடம் பெற்றுள்ளது. மெல்லிய துணி ஒன்றை அதன்மீது விரித்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். பகவான் கூறிய ஆஸனத்தை அப்படியே பின்பற்றுவது இன்றைய காலக்கட்டத்தில் இயலாது என்றாலும், உறுதியான ஓர் ஆஸனத்தின் மீது, மெல்லிய துணியை விரித்து, உறுத்தாத அந்த ஆஸனத்தில் தியானத்துக்கு அமர வேண்டும். பூதக்கண்ணாடி வழியே சூரிய ஒளியைக் குவித்து நெருப்பு உண்டாக்குவதுபோல், மனதைக் குவிக்கும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். மெய்யறிவைப் பெறுவதற்குமுன் செய்யப்படும் தியானத்துக்கு உபாஸனை என்று பெயர். மெய்யறிவைப் பெற்ற பிறகு, அதனை ஆழ்மனதுக்கு எடுத்துச் செல்வதற்காகச் செய்யப்படும் தியானத்துக்கு நிதித்யாஸனம் என்று பெயர்.
இங்கு, மெய்யறிவைப் பெறுவதற்குமுன் செய்யப்படும் தியானம் கூறப்பட்டுள்ளது. மெய்யறிவைப் பெறுவதற்கு மனதைத் தகுதியுடையதாகச் செய்ய வேண்டும். மனதில் உள்ள அழுக்குகள் நீங்குவதற்காக மனதில் அலைபாயும் தன்மை குறைவதற்காக தியானம் செய்ய வேண்டும். அதற்கு அறிவுக்கருவிகளையும் செயற்கருவிகளையும் நெறிப்படுத்தி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தியானத்தில் அமரும் நேரத்தில், வேறு எவ்வித புலனின்ப பொருளைப் பற்றிய எண்ணத்துக்கும் நேரம் கொடுக்கக் கூடாது. அந்த நேரம் நமக்கே நமக்கான நேரமாக இருக்க வேண்டும். மனதில் உள்ள பேராசை, பெருங்கோபம், பொருட்பற்று, பகுத்தறிவின்மை, கர்வம், பொறாமை முதலிய அழுக்குகள் நீங்கி, மனத்துக்கண் மாசிலன் ஆக வேண்டும். அப்பொழுதுதான் மெய்யறிவைப் பெற்றுப் பேரானந்தத்தில் நிலைத்திருக்க முடியும். |
|
|
|