|
மறைஞான சம்பந்த சிவாசாரியார் வேதங்களை எல்லாம் கற்றுணர்ந்த ஞானி. ஒருநாள் அவரைச் சந்தித்த ஒருவர். சுவாமி! அடியேனுடைய நாமம் உமாபதி சிவம். என்னைத் தங்களுடைய சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்! என்று கூறினார். சிவாசாரியார் சற்று சிந்தித்தார். பின்னர், சரி என்று தலையாட்டினார். தன்னிடம் சேர்ந்துள்ள சீடர் பக்குவமடைந்தவரா, இல்லையா என்பதை அறிந்துகொள்ள விரும்பிய மறைஞான சம்பந்தர், தம்முடைய சீடரை அழைத்துக்கொண்டு ஒரு தெருவின் வழியே போய்க் கொண்டிருந்தார். அது நண்பகல் வேளை, அவர்கள் நடந்துகொண்டிருந்த வீதி நெசவாளர் வாழ்ந்து வரும் பகுதி.
சிவாசாரியார் கூறினார். சீடனே எனக்குப் பசிக்கிறது வா, எங்கேயாவது பிட்சை எடுக்கலாம்! சரி! என்றார் உமாபதி சிவம். ஒரு நெசவாளரிடம் சென்று, நெசவுக்குத் தயார் செய்து வைத்திருந்த கூழினைச் சிறிதளவு தமக்கு வார்க்குமாறு கேட்டுக்கொண்டார். சிவாசாரியார். அவர் கேட்டுக்கொண்டபடியே அந்தக் கூழினை வார்த்தார், நெசவாளர். மறைஞான சம்பந்த சிவாசாரியார் அந்தக் கூழைத் தம்முடைய இரண்டு கைகளினாலும் ஏற்றுக் கொண்டு, ஆஹா! சிவப்பிரசாதம், சிவப்பிரசாதம்! என்று கூறி, அப்படியே உறிஞ்சிக் குடித்தார். அப்போது அவருடைய கையில் இருந்து அந்தக் கூழ் ஒழுகியது. அந்த எச்சில் கூழினை உமாபதி சிவம் தம் கைகளினால் ஏந்தி, ஆஹா குருபிரசாதம், குருபிரசாதம்! என்று கூறியவாறு அதைப் பருகினார். இதைக் கண்ட குரு, தம்முடைய சீடர் உரிய பக்குவம் அடைந்த ஞானவான் என்பதை உணர்ந்துகொண்டார். |
|
|
|