|
ஜனார்த்தன பந்த் என்பவரை குருவாக ஏற்ற ஏகநாதர், அவரிடம் எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். ஒரு சமயம், இறை சேவையில் சற்றே அலுப்பு தோன்றியது அவருக்கு. அதை குருவும் கவனித்தார். ஒருமுறை அங்குள்ள வரவு -செலவு கணக்கில் ஒரு காசு குறைந்தது. தவறைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏகநாதரிடம் ஒப்படைத்தார் குரு.
ஏகநாதர் பலமுறை பலவாறு கணக்குகளை சோதித்து, குழம்பி ஆராய்ந்து தூக்கத்தையும் மறந்து கணக்கினை சரிபார்த்து, மறுநாள் அதிகாலைப் பொழுதில் கணக்கில் உள்ள தவறைக் கண்டுபிடித்தார். உடனே அவரது மனம் மகிழ்ச்சியில் மிதந்தது. குருவிடம் சென்று தெரிவித்தார். அனைத்தையும் கேட்ட குரு, சொன்னார். மனதை ஒருமுகப்படுத்தி, பசி, தூக்கம் மறந்து இவ்வளவு நேரம் கணக்குப் பார்க்க வேண்டியிருந்த போதும், கணக்கில் இருந்த பிழையைக் கண்டுபிடித்ததும், கஷ்டத்தை மறந்து எவ்வளவு சந்தோஷப்படுகிறாய்? அப்படியானால் இறைவனைக் கண்டு கொண்ட பின்னர் அடையும் மகிழ்ச்சி எப்படி இருக்கும் என்பதை நினைத்துப்பார், கடவுளை அறிவதற்காக நீ படும் சங்கடங்கள் பெரிதாகத் தோன்றாது. குரு சொன்னதைக் கேட்ட ஏகநாதர், உண்மை உணர்ந்தார். இறைவன் மீது உள்ளத்தை ஒன்றச் செய்து உன்னதம் பெற்றார். |
|
|
|