|
குரு ஒருவரைக் காணவந்த மன்னன், ஆசிரம வயலில் கோதுமைப் பயிர் தரமாய், அமோகமாய் விளைச்சல் கொண்டிருந்ததைப் பார்த்து, குருவே! இதுபோன்ற விளைச்சலை நான் கண்டதில்லை. உங்களுக்கு இது எப்படிச் சாத்தியமாயிற்று? என்று கேட்டான். நான் விதைக்கின்ற நல்ல கோதுமை விதைகளை இப்பகுதியில் உள்ள எல்லா வயல்காரர்களுக்கும் கொடுக்கிறேன். அதனால்தான்! என்றார், குரு. நீங்கள் சொல்வது விசித்திரமாய் உள்ளதே! உங்களது தரமான விதைகளை மற்றவர்களுக்குக் கொடுத்தால், நீங்கள் எப்படி நல்ல கோதுமையை அறுவடை செய்ய முடியும்? புரியாது கேட்கிறீர்கள்.
மன்னா! விதை முளைத்துப் பயிர் பூக்கும்போது சுற்றியுள்ள வயல்களில் ஒன்றிலிருந்து பூக்களின் மகரந்தத் தூள் பறந்து போய் அடுத்த வயலின் பூக்களில் விழுந்து, மகரந்தச் சேர்க்கை ஏற்படுமல்லவா? அடுத்த நிலத்தில் மோசமான விதைளிலிருந்து வளர்ந்த பயிர்களின் மகரந்தம் எனது ஆசிரமப்பயிரில் சேர்க்கை ஏற்பட்டால் எப்படித் தரமாய் பயிர் விளையும்? நாம் நல்ல தரமான கோதுமையை விளைவிக்க வேண்டுமானால் அடுத்தவர் பயிர் தரமாய் இருக்க வேண்டும். அல்லவா? என்றார் குரு. குரு சொன்னது கோதுமைப் பயிருக்கு மட்டுமல்ல; தனது அரசாட்சிக்கும் சேர்த்துத்தான் என்பதை உணர்ந்தார் மன்னர். |
|
|
|