|
வணிகன் ஒருவன் ஆட்டு மந்தையை சந்தைக்கு ஓட்டிச் சென்றான். ஏமாற்றுக்காரன் ஒருவன் அவனை வழியில் சந்தித்தான். இவனைப் பார்த்தால் ஏமாளியாகத் தெரிகிறது. ஆடுகளை விற்பதற்காக சந்தைக்குச் செல்கிறான். இவனை ஏமாற்றி குறைந்த விலைக்கு ஓர் ஆட்டை வாங்க வேண்டும் என்று நினைத்தான். ஐயா! உங்களிடம் உள்ள மோசமான ஆட்டுக் குட்டியை இரண்டு பணத்திற்குத் தர முடியுமா? என்று கேட்டான் ஏமாற்றுக்காரன். தருகிறேன்! என்ற வணிகன் எலும்பும் தோலுமாக இருந்த ஆட்டுக் குட்டி ஒன்றை அவனிடம் தந்தான். ஆட்டுக் குட்டியை வாங்கிய ஏமாற்றுக்காரன் அதை நன்றாகப் பார்த்தான். இந்த ஆட்டுக் குட்டியுடன் சேர்த்து இரண்டு பணம் தருகிறேன். நல்ல ஆட்டுக் குட்டி ஒன்றை தர முடியுமா? என்று கேட்டான். அந்த ஆட்டுக் குட்டியை மந்தையில் விட்ட வணிகன். இன்னொரு ஆட்டுக் குட்டி ஒன்றை எடுத்து அவனிடம் தந்தான். அந்த ஆட்டுக் குட்டியைத் தூக்கி மேலும், கீழும் பார்தது விட்டு, இது நன்றாகத்தான் உள்ளது. இதனுடன் சேர்த்து இரண்டு பணம் தருகிறேன். கொழுத்த ஆட்டுக் குட்டி ஒன்று தர முடியுமா? என்று கேட்டான் அவன். இன்று நமக்கு நல்ல நாள். ஒவ்வொரு முறையும் கூடுதலாக இரண்டு பணம் கிடைக்கிறதே என்று மகிழ்ந்தான் வணிகன்.
கொழுத்த ஆட்டுக் குட்டி ஒன்றை எடுத்து அவனிடம் தந்தான். அதைப் பார்ததுவிட்டு, ஐயா! இதனுடன் சேர்த்து இரண்டு பணம் தருகிறேன். மெலிந்த ஆடு ஒன்றைத் தர முடியுமா? என்று கேட்டான். நோஞ்சானாக இருந்த ஆடு ஒன்றை அவனிடம் தந்தான் வணிகன். இந்த ஆட்டுடன் இரண்டு பணம் தருகிறேன். இந்த விட நல்ல ஆடு தர முடியுமா? அதை விட எடை அதிகமான ஆடு ஒன்றைத் தந்தான் வணிகன். ஐயா! இதனுடன் இரண்டு பணம் தருகிறேன். கொழுத்த ஆடு ஒன்று தர முடியுமா? மந்தையில் நன்றாகக் கொழுத்திருந்த ஆட்டை அவனிடம் தந்தான் வணிகன். இரண்டு பணம் தந்த ஏமாற்றுக்காரன் கொழுத்த ஆட்டுடன் புறப்பட்டான். இருபது பணம் மதிப்புள்ள ஆட்டை, இரண்டு பணத்திற்கு ஏமாந்தது அந்த முட்டாள் வணிகனுக்கு புரியவில்லை. ஏமாளிகள் இருக்கும் வரை... ஏமாற்று பேர்வழிகள் இருக்கத்தான் செய்கின்றனர். |
|
|
|