|
முன்னொரு காலத்தில் பள்ளிபாளையம் என்னும் நாட்டை அரசன் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் சரியான சாப்பாட்டு ராமன். ஒவ்வொரு வேளையும் பலவிதமான பலகாரங்களும், அறுசுவை உணவுகளை உட்கொள்வார். இதைத் தவிர அவரிடம் இன்னொரு கெட்ட பழக்கம் இருந்தது. அனைவருடைய எதிரிலும் உட்கார்ந்து சாப்பிடுவதில் அவருக்கு ஓர் அலாதி இன்பம். அவர் சாப்பிடும் போது யாராவது ஒருவர் ஏக்கப் பார்வை பார்க்கணும். அப்போதுதான் அவருக்கு இன்பமாக சாப்பாடு இறங்கும். இதன் காரணமாக அரசர் சாப்பிடுவதற்கு முன் நிறையப் பேரைக் கொண்டுவந்து உணவுக் கூடத்திற்குள் நிறுத்தி விடுவர். அவர்கள் எதிரில் அமர்ந்து ஆனந்தமாகச் சாப்பிடுவார். அரசர் சாப்பிடும் அறுசுவை உணவைக் கண்டதும் பார்ப்பவர்களின் நாக்கில் நீர் ஊறும். ஆயினும் என்ன செய்ய முடியும்? பார்ப்பதோடு சரி. இவ்வாறு பல காலம், பல பேர் முன்னிலையில் சாப்பிட்டு வந்தார் அரசர்.
ஒருநாள் அரசர் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த ஒருவனுக்கு நாக்கில் தண்ணீர் ஊறியது. அவனால் ஆவலை அடக்க முடியவில்லை. கபகப வென்று கூட்டத்தை விலக்கிக் கொண்டு அரசரின் முன்னால் போய்விட்டான். சாப்பிட்டுக் கொண்டிருந்த அரசர் தன் எதிரே வந்து நிற்பவனைப் பார்த்து, யார் நீ? என்று கேட்டார். நான் ஒரு தூதன், என்றான் வந்தவன். அப்படியா? சரி, உட்கார், என்றார் அரசர். வந்தவனும் உட்கார்ந்தான். அவனுக்கும் உணவு பரிமாறப்பட்டது. வயிறு புடைக்கச் சாப்பிட்டான். தான் சாப்பிடுவதை மற்றவர்கள் பார்க்க வேண்டுமென்று நினைத்த, அரசர் இன்று மற்றவர் சாப்பிடுவதையும் பார்க்கலானார். புதியவன் ஆவல் ஆவலாக சாப்பிடுவதைப் பார்த்து பாவம், நீண்ட தூரத்தில் இருந்து வந்திருக்கிறான் போலிருக்கிறது நன்றாகச் சாப்பிடட்டும் என்று நினைத்துக் கொண்டார். புதியவன் சாப்பிட்டு முடித்தான். நீண்டதொரு ஏப்பம் விட்டான். அரசர் அவனைப் பார்த்து, நீ எந்த நாட்டின் தூதுவன்? வந்த செய்தியைச் சொல், என்றார்.
நான் எந்த நாட்டின் தூதுவனுமல்ல; வயிற்றின் தூதுவன்தான், என்றான். இதைக் கேட்டதும் அரசருக்கு கோபம் பொங்கியது. என்ன சொல்கிறாய்? வயிற்றின் தூதுவனா? என்று கோபத்துடன் கர்ஜித்தார் அரசர். ஆம் அரசே! நான் இந்த வயிறாகிய அரசரின் தூதன். இவருடைய வம்சத்தில்தான் இந்த உலகம் முழுவதும் அடங்கிக் கிடக்கிறது. இந்த அரசரின் ஆணைக்குக் கீழ்ப்படியாதவர்களே கிடையாது. வயிற்றுப் பசிக்காக ஊரைவிட்டு, நாட்டை விட்டு எவ்வளவோ பேர் கடுமையாக உழைக்கின்றனர். இரவு, பகல் இடுப்பொடியப் பாடுபடுகின்றனர். அனைத்துக்கும் காரணம் இந்த வயிற்று அரசின் கட்டளைதான். தாங்கள் கூட அவருடைய கட்டளையை மீற முடியாது. அப்படிப்பட்ட அசாதாரணமான மகிமை பொருந்திய வயிற்று அரசரின் தூதன் தான் நான். அவருடைய ஆணையை நிறைவேற்றவே வந்தேன், என்றான் புதியவன். அவனுடைய பேச்சு அரசரைச் சிந்திக்க வைத்தது. அன்றுதான் பசிக் கொடுமையின் தன்மையை அவர் புரிந்து கொண்டார். அன்று முதல் நாள்தோறும் அரண்மனை உணவுக் கூடத்தில் ஏழை, எளியவர் அனைவருக்கும் உணவு அளிக்குமாறு உத்தரவிட்டார். அவர்கள் சாப்பிடும்போது நேரில் இருந்து கவனித்தார். முன்பு பார்வையாளர்களாக ஏழை மக்கள் இருந்தனர். அவர்கள் திரும்பிச் செல்லும்போது வயிற்றெரிச்சலுடன் திரும்பிச் சென்றனர். இப்போது பார்வையாளராக அரசர் இருந்தார். இப்போது உணவு சாப்பிட்டுவிட்டு செல்லும் ஏழைகள் அரசரை மனமார வாழ்த்திச் சென்றனர். |
|
|
|