|
பிறவி என்பது பற்று, அவா என்னும் இரு குற்றங்களால் உண்டாகிறது. பற்று என்பது தன் பொருளில் வைக்கும் விருப்பம். அவா என்பது பிறர் பொருளில் வைக்கும் விருப்பமாகும். இவ்விரண்டையும் திருவாசகம் நூல் படிப்பதாலும், குருவருளாலும் அகன்று பிறவிப்பிணிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. ஒரு சமயம் சிவபெருமான் குபேரனுடன் தென்னாட்டிற்கு வருகை தந்தார். காவிரிப் பூம்பட்டினத்தின் இயற்கை அழகும். செயற்கை வனப்பும் குபேரன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு கவர்ந்தன. அங்கேயே தங்கிவிட குபேரன் எண்ணினான். குபேரனது மன ஓட்டத்தை அறிந்த ஈசன், நீ இங்கேயே இருந்து மகிழ எண்ணிமையால் இத்தலத்திலேயே பிறந்து வாழ்க! எனக் கூறி மறைந்தார். இதனால் குபேரன் காவிரிப் பூம்பட்டினத்தில் சிவநேச குப்தருக்கும் ஞானகலை அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து திருவெண்காடன், என்னும் பெயருடன் வாழ்ந்தார். அத்திருவெண்காடரே பின்னாளில் பரமஞானியாகிப் பட்டினத்தார் ஆனார்.
எண்திசைக் காவலர்களில் ஒருவராகிய குபேரர் எண்ணிய ஒரு எண்ணத்திற்கே ஒரு பிறவி எடுக்க நேர்ந்தது எனில் மனிதர்களாகிய நாம் நினைக்கும் எண்ணங்களுக்கு எத்தனை பிறவி எடுத்திட வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். வட நாட்டில் வாழ்ந்த மகா பிஷக் என்னும் மன்னன் பல புண்ணியச் செயல்கள் செய்ததன் பயனாகப் பிரம்ம தேவரின் அருகில் அமரும் பேறு பெற்றான். ஒருநாள் பிரம்மனை வணங்கும் பொருட்டு தேவர்களும், தேவமாதர்களும், சித்தர்களும், ஞானிகளும் வந்திருந்தனர். இவர்களில் கங்கை மாதாவும் இருந்தார். அப்போது அடித்த காற்றில் கங்கை தேவியின் மேலாடை சிறிது விலகியது. மற்றவர்கள் தலை குனிந்திட, பிஷக் மன்னன் மட்டும் கங்கையை உற்று நோக்கினான். இதனால் பூமியில் பிறந்து கங்கையுடன் வாழ்ந்து வர வேண்டுமென பிஷக் மன்னனை பிரம்மன் சபித்தார். அதனால் பிஷக் மன்னன் சந்திரகுலத்தில் பிரதீபன் என்னும் மன்னனுக்கு மகனாகப் பிறந்து சந்தனு என்னும் பெயருடன் கங்கா தேவியுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்குப் பிறந்தவரே பிதாமகர் பீஷ்மர். ஒரு ஆசை பார்வைக்கு ஒரு பிறவி ஏற்பட்டது. எனவே பற்று, அவா போன்றவற்றை அறுத்து மேலான பேரின்பம் அருளும் இறைவன் புகழ் பாடுவோமாக. |
|
|
|