|
பரம்பொருளாம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் கண்ண பிரானே! தாங்கள் மனித குலம் முழுவதற்குமாக மாபெரும் தத்துவச் சுரங்கமான கீதையை அருளியுள்ளீர்கள். இதில் நுட்பமான அறிய பல கருத்துக்களை எடுத்து சொல்வதற்கு நீங்கள் என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? என்று அர்ஜுனன் பகவானுடைய பாதாரவிந்தங்களில் சேவித்து அடக்கமுடன் கேட்டான். தத்துவ உபதேசங்களுக்குத் தகுதிவாய்ந்தவரான பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம். ஒருவேளை அவர் எதிர்முகாமில் இருப்பதால் அவரை நீங்கள் தவிர்த்தது நியாயமாக இருக்கலாம். அண்ணன் தர்மரை விடக் கீதையைக் கேட்டு நடக்கப் பொருத்தமானவர் வேறு யாரும் இருக்க முடியாது. அவர் தர்ம நீதிகளை நன்றாக அறிந்தவர். மூத்தவர் பொறுமைசாலி கோபம் கொள்ளாதவர் அவரை ஏன் நீங்கள் புறக்கணித்தீர்கள். அண்ணன் பீமன் இருக்கிறார்.
அவர் வெறும் பலசாலி மட்டுமல்ல, மிகச் சிறந்த மானசீக பக்திமான். பூஜை நியமங்களை ஒழுங்காக ஒழுக்கத்துடன் தவறாமல் செய்பவர் இப்படி நல்லவர்களை எல்லாம் விட்டு விட்டு உலக சுகங்களில் அதிக நாட்டம் உள்ளவனும், உணர்ச்சிவசப்பட்டு அடிக்கடி கோபம் கொள்பவனும் பல தவறுகள் செய்து விடுபவனும் ஆத்திரக்காரனுமான என்னைப் போய் தாங்கள் கீதை உபதேசம் கேட்கத் தகுதியுள்ளவனாய் கருதியிருக்கிறீர்களே இது எந்த வகையில் நியாயம் என்று அர்ஜுனன் பகவான் கிருஷ்ணரை நோக்கி சிரம் தாழ்ந்து வணக்கத்துடன் கேட்டான். அர்ஜுனா! நீ என்னோடு நெருங்கிப் பழகுவதாலோ என் மீது அளவு கடந்த பாசத்தோடு இருப்பதாலோ நான் உனக்கு கீதையைச் சொல்லவில்லை. நீ நினைப்பது போல் பிதாமகர் பீஷ்மர் அறங்கள் அனைத்தையும் அறிந்தவர் என்று என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. அப்படியே அறிந்தவராக இருந்தாலும், தர்ம நீதிகளை கடைப்பிடிக்காதவர், கவுரவர்கள் அதர்மம் செய்கிறார்கள் என்பதை தெரிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே உண்டசோற்றுக்கு அடிமையானார். அதுமட்டுமல்ல, பாண்டவர்களைத் தனியே பார்க்க நேரும் போது தர்மம் வெல்ல ஆசீர்வதிப்பதாக கூறுகிறவர். ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகள் மீது சவாரி செய்பவர் எண்ணம், சொல், செயல் இந்த மூன்றும் ஒன்றாக எவரிடம் இணைந்து இருக்கிறதோ அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை. தர்மர் கீதையைக் கேட்க தகுதியானவர் என்று நீ நினைக்கிறாய். அவர் நல்லவர் தான் ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்து விட்டு பிறகு வருந்திக் கொண்டிருப்பது அவர் இயல்பு. தர்மத்தையும் நீதியையும் கடைப்பிடிப்பவர் தர்மர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரால் தக்க நேரத்தில் தன் கடமையை உணர்ந்து செயல்பட முடியாதவர். பீமனைப் பற்றிச் சொல்கிறாய். பீமன் அளவற்ற பலசாலி. பக்திமான் ஆனால் அவனிடம் மனோபலமும், அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தினால் அவன் விளைவித்த விபரீதங்கள் ஏராளம்.
அர்ஜூனா! நீ இவர்களைப் போன்றவன் அல்ல மாவீரன், அதிநுட்பம் வாய்ந்த அஸ்திரவித்தைகளை மனப்பாடம் செய்து பல கற்றவன். எல்லாவற்றிற்கும் மேலாக முன் யோசனை உள்ளவன். அதுதான் உன்னுடைய தனிச்சிறப்பு. உன்னை விடப் பெரியவர்கள் பலரை நீ மதிப்பதால்தான் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்டாய். போர்க்களத்தில் நின்றபோது கூட உற்றார் உறவினர் பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது இப்படி பல உயிர்களை கொன்று அரசாட்சியைப் பிடிப்பது அவசியம் தானா? என்றெல்லாம் என்னிடம் கேட்டாய். நீ பதவிவெறியனல்ல. பழைய விரோதங்களை மனதில் வைத்துக் கொண்டு போர்க்களத்தில் பழி வாங்காமல் அவர்களை மன்னித்து அனுப்பும் பெரிய உள்ளம் உன்னிடம் உள்ளது. இப்படி எல்லா சூழ்நிலையிலும் நீதி எது? அநீதி எது? என்று சிந்திப்பவனாக நீ இருக்கிறாய். நீதிக்காக அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் உன்னிடம் உள்ளது. அது மட்டுமல்ல தன்னுடைய புனிதமான கடைமையை உணர்ந்து கொள்பவருக்குத்தான் கீதையைக் கேட்கும் தகுதி உள்ளது. இந்தத்தகுதியெல்லாம் உனக்கு இருப்பதால்தான் நான் உனக்கு கீதையை உபதேசம் செய்தேன். இப்போது புரிகிறதா அர்ஜுனா நான் உனக்கு கீதையை சொல்லக் காரணம் என்றான். அர்ஜுனன் அப்போது அகந்தை ஏதுமற்றவனாய் அடக்கத்தோடு வணங்கி தன் கடமையைத் தவறாது செய்தான். ஆகவே அகந்தை கொள்ளாமல் அடக்கமாய் வாழ்ந்தால் ஆனந்தமாக வாழலாம். |
|
|
|