|
ஓர் ஊரில், பிரசித்திபெற்ற குரு ஒருவரது பிரசங்கத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவரை அழைத்து வர குதிரைக்காரன் ஒருவன் சென்றிருந்தான். அவர்கள் வருவதற்குள் பெருமழை பிடித்துக்கொண்டது. எனவே, கூட்டம் கலைந்துவிட, குருநாதர் வந்தபோது அங்கு யாருமே இல்லை, பேசுவதற்காக நிறைய தயார் செய்து வந்த குருவுக்கு ஏமாற்றம். குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணுவதற்கு குருவுக்கு மனசில்லை. எனவே, அவனிடமே என்னப்பா பண்ணலாம்? என்று கேட்டார். அவனோ, ஐயா! நான் குதிரைக்காரன். எனக்கு பெரிசா எதுவும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணு... நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ மற்ற குதிரைங்க எல்லாம் வெளியே போயிருக்க, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க, நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க. திரும்புவேன் என்றான்.
பொளேர் என்று அறைந்தது போல் இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு சபாஷ் போட்டுவிட்டு, அவனுக்கு மட்டும் தனது பிரசங்கத்தைத் தொடங்கினார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் என்று பிரசங்கத்தை பிரமாதப்படுத்திவிட்டார் குரு. பிரசங்கம் முடிந்ததும் எப்படிப்பா இருந்தது? என்று பெருமிதம் பொங்கக் கேட்டார். ஐயா.... நான் குதிரைக்காரன். எனக்கு பெரிசா எதுவும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணு... நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன் முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வரமாட்டேன்! என்றான்.
மற்றவர்களுக்கு எதைச் சொன்னால் புரியுமோ அதை மட்டுமே சொல்லவேண்டும். புரியாத, தேவையில்லாத விஷயங்களை சொல்வதும், போதிப்பதும் நம்மைதான் முட்டாளாக்கும். |
|
|
|