|
குரு ஒருவரை வணங்கிய சீடன், சுவாமி இறைவனை மிக விரிவாக ஆராதனை செய்து, மிக உயர்நிலையை அடைய எனக்கு ஆசையாக உள்ளது. அதற்குரிய மார்க்கத்தை எனக்குத் தெரிவியுங்கள்! என்றான். உடனே கனத்த சுவடித் தொகுப்பு ஒன்றை அவனிடம் தந்த குரு, இதில் கடவுள் வழிபாடு பற்றிய எல்லா விவரங்களும் உள்ளன. வைத்துக்கொள்! என வாழ்த்தி அனுப்பினார். அதில் உள்ளபடி ஆராதனை செய்ய சீடனுக்கு 24 மணி நேரம் போதவில்லை. நம் குரு இதில் உள்ளபடி செய்வாரா? என சந்தேகம் கொண்டு, குருவின் வழிபாட்டை மறைந்து நின்று கவனித்தான். பின்னர் குருவிடம், சுவாமி! எனக்கு மட்டும் பெரிய சுவடியைக் கொடுத்து அதன்படி நடக்கச் சொன்னீர்கள். ஆனால் நீங்கள் வழிபாட்டின்போது, தட்டின் தீபத்தின் மேல் ஒரு சைகை மட்டும்தானே காட்டினீர்கள். எனக்கு 24 மணி நேரம்! உங்களுக்கு ஒரே ஒரு வினாடி மட்டும்தானா? எனக்கேட்டான். புன்னகைத்த குரு ஓ..... அதுவா! என்னைப் பொறுத்தவரையில் நீ கண்ட அந்த நேரம்கூட எனக்குத் தேவையில்லை. உனக்கோ நாள் முழுதும் போதாதுதான். இறை வழிபாட்டில் மன ஒருமைப்பாட்டுடன் லயித்து இருப்பதுதான் முக்கியம். வெளிப்படையான சரீர அவயவ நியாயங்கள் முக்கியமல்ல, லயிப்பது அரைக் கணமானாலும் போதும்! என்றார். |
|
|
|