|
அரியாங்குப்பம் என்னும் ஊரில் ஜெய்சங்கர், விஷ்வா என்ற நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். இருவரும், மக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள். அவர்கள் இருவரும் ஏழை மக்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் செய்தனர். ஒருநாள்- நண்பா, நாமும் எவ்வளவோ காலமாக இந்த ஏழை மக்களுக்கு தொண்டாற்றி வருகிறோம். ஆயினும் இவர்களுடைய வறுமையைப் போக்க முடியவில்லை. இறைவன் என்னை கோடீஸ்வரனாகப் படைத்திருந்தால், என்னுடைய செல்வத்தையெல்லாம் எளிய மக்களுக்குக் கொடுத்து அவர்களுடைய துயரைப் போக்கியிருப்பேன், என்றான் விஷ்வா. விஷ்வா, நான் கூட இவ்வளவு நாட்களாக உன்னைப் போல் தான் நினைத்திருந்தேன். வறுமைக்குக் காரணம் பணம் இன்மை என்று நினைத்திருந்தேன். ஆனால், இன்று முதல் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். வறுமைக்குக் காரணம் பணம் இல்லாமை அன்று. வேலை இல்லாமைதான், என்றான் ஜெய்சங்கர். இதை நான் ஒப்புக் கொள்ள முடியாது, என்றான் விஷ்வா. நாம் ஏன் இதைப் பற்றி வீணே விவாதித்துக் கொண்டிருக்க வேண்டும்? பேசாமல் ஒன்று செய்வோம். யாராவது ஓர் ஏழையிடம் சோதனை செய்து பார்ப்போம், என்றான் ஜெய்சங்கர்.
அது நல்ல யோசனை. என்னிடம் 2 ஆயிரம் ரூபாய் உள்ளது. அதை யாராவது ஓர் ஏழையிடம் கொடுத்துப் பார்ப்போம், என்றான் விஷ்வா. ஜெய்சங்கரும் அதற்கு ஒப்புக்கொண்டான். விஷ்வாவும், ஜெய்சங்கரும் ஓர் ஏழையைத் தேடிக் கண்டுபிடித்தனர். விஷ்வா அந்த ஏழையிடம், அய்யா என்னிடம் 2 ஆயிரம் ரூபாய் இருக்கிறது. அதனை உங்களுக்குத் தருகிறேன். ஏதாவது ஒரு சிறு தொழில் செய்து உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுங்கள், என்று தன்னிடமிருந்த 2 ஆயிரம் ரூபாயை அவனிடம் கொடுத்தான். 2 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்ட ஏழை, விஷ்வாவை வாயார வாழ்த்தினான். பணம் கைக்கு வந்ததும், வீட்டுக்கு வேண்டிய உணவுப்பொருள்களையெல்லாம் வாங்கிப் போட்டான். நல்ல துணிமணிகள் வாங்கிக் கொண்டான். மீதியுள்ள பணத்தில் என்ன தொழில் செய்வது என்றே அவனுக்குப் புரியவில்லை. அதையும் சாப்பிட்டு தீர்த்தான். சில நாட்கள் சென்றபிறகு ஜெய்சங்கரும், விஷ்வாவும் அந்த ஏழையைக் காண வந்தனர். ஏழையின் போக்கிலே எவ்வித மாறுதலும் இல்லாததைக் கண்டு விஷ்வா திடுக்கிட்டான். நான் கொடுத்த 2 ஆயிரம் ரூபாய் என்ன ஆயிற்று? என்று கேட்டான் விஷ்வா. அது எவ்வளவு நாளைக்கு வரும்? பத்து, பதினைந்து நாட்களுக்குள்ளாகவே செலவாகி விட்டது, என்றான் அந்த ஏழை. சரி, அது போனால் போகட்டும் நீ என்னுடன் வா, நான் உனக்கு உதவி செய்கிறேன், என்று கூறி அந்த ஏழையை கடை வீதிக்கு அழைத்துச் சென்றான் ஜெய்சங்கர்.
நூல் நூற்கும் இராட்டினங்கள் இரண்டை வாங்கினான். இரண்டு, மூன்று தக்ளிகளையும், கொஞ்சம் பஞ்சையும் வாங்கிக் கொண்டான். அனைத்தையும் அந்த ஏழையிடம் கொடுத்து, இராட்டினத்தின் மூலமும் தக்ளியின் மூலமும் நூல் நூற்க அவனுக்கு கற்றுக் கொடுத்தான். பின்னர், அய்யா, பஞ்சிலிருந்து நூற்கும் நூலை கொடுத்தால் பணம் கொடுப்பார்கள். அவற்றைக் கொண்டு நீங்கள் பிழைத்துக் கொள்ளலாம், என்று ஏழையிடம் கூறினான் ஜெய்சங்கர். மாதங்கள் சில கடந்தன- விஷ்வாவும், ஜெய்சங்கரும் அந்த ஏழையின் வீட்டுப் பக்கம் மீண்டும் வந்தனர். வீட்டுக்குள்ளிருந்து தறியின் ஓசையும், இராட்டினம் சுற்றும் ஓசையும் கேட்டது. இருவரும் உள்ளே நுழைந்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அந்த ஏழை இப்போது மலர்ந்த முகத்துடன் காணப்பட்டான். அவன் முகத்தில் மகிழ்ச்சி ததும்பி கொண்டிருந்தது. தறியில் உட்கார்ந்து அவன் துணி நெய்து கொண்டிருந்தான். மற்றொருபுறம் அவன் மனைவியும், மூத்த மகனும் ராட்டினத்தில் நூல் நூற்றுக் கொண்டிருந்தனர். சிறிய பிள்ளைகள் இரண்டு பேர் தக்ளிகளில் நூல் நூற்றுக் கொண்டிருந்தனர். பெரிய பெண் ஒருத்தி நூற்ற நூல்களையெல்லாம் சிட்டமாக்கிக் கொண்டிருந்தாள். இப்போது அவன் வீட்டில் வறுமை இல்லை. விஷ்வாவையும், ஜெய்சங்கரையும் கண்டதும் ஏழை தறியிலிருந்து எழுந்து வந்தான். நீங்கள் செய்த உதவியை நான் மறக்க மாட்டேன். நூல் நூற்று அவற்றின் மூலம் கொஞ்ச நாள் மகிழ்ச்சியாகக் காலம் தள்ளினேன். திடீரென்று ஒருநாள் நூலை விலைக்கு வாங்கிக் கொள்ளும் அந்தக் கடையை மூடிவிட்டனர். உடனே எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. கையிலிருந்த பணத்தையெல்லாம் போட்டு ஒரு தறி வாங்கிப் போட்டுவிட்டேன். அதில் நெய்வதற்கும் கற்றுக் கொண்டேன். இப்போது துணியாகவே விற்பனை செய்து வருகிறேன். நன்கு விற்பனையாகிறது, என்று கூறினான் அந்த நெசவாளி. பின்னர், அந்த நெசவாளி இருவருக்கும் குடிப்பதற்கு பானங்கள் கொடுத்தான். பின்னர் வீட்டுக்குள் சென்று 2 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்து விஷ்வாவிடம் கொடுத்து, அய்யா நீங்கள் கொடுத்த 2 ஆயிரம் ரூபாயைத் திருப்ப பெற்றுக் கொள்ளுங்கள், என்றான். மற்றொரு 2 ஆயிரம் ரூபாயை ஜெய்சங்கரிடம் கொடுத்து, நீங்கள் எனக்கு வாங்கிக் கொடுத்த சாமான்களுக்கான தொகை இது, என்று கூறினான்.பின்னர் இருவரும் அந்த நெசவாளியிடம் விடை பெற்றுக் கிளம்பினர். நண்பா, நீ சொன்னது உண்மைதான். வறுமைக்குக் காரணம் பணம் இல்லாமை அன்று; வேலை இல்லாமைதான், என்றான் விஷ்வா. |
|
|
|