|
விறகு வெட்டும் ஒருவன் காட்டிற்கு மரம் வெட்டச் சென்றான். காட்டிற்குள் ஓடிய ஆற்றங்கரையோரம் இருந்த மரத்தை அவன் வெட்டும் போது, கோடரி கை நழுவி ஆற்றுக்குள் விழுந்தது. பதைபதைத்து போன அவன் மனதிற்குள், ஆத்தா! மகமாயி! உன் கோவிலில் பொங்கல் திருவிழா வரப் போகிறதே....... கையில் காசில்லாத இந்த நேரத்தில் இப்படியாகி விட்டதே... என்று முறையிட்டான். அப்போது ஆற்றுக்குள் இருந்து வெளிப்பட்ட வன தேவதை ஒரு தங்க கோடரியைக் கொண்டு வந்து, இதுவா உன் கோடரி? என்று கேட்டாள். இல்லை தாயே! சாதாரண இரும்பு கோடரி என்னுடையது, என்றான். தண்ணீருக்குள் சென்ற தேவதை ஒரு இரும்பு கோடாரியை எடுத்து வந்து, இதுவா? என்று கேட்டாள். ஆம் தாயே என்று தலையசைத்தான். அவனுடைய நேர்மையைப் பாராட்டிய தேவதை இரண்டு கோடரியையும் கொடுத்து ஆசியளித்தாள். தேவதை அளித்த பரிசுடன் விறகு வெட்டி வீடு திரும்பினான்.
இந்த விஷயம் அறிந்த பக்கத்து வீட்டுக்காரன் விறகுவெட்டி மீது பொறாமை கொண்டான். வனதேவதை இவனுக்கு மட்டும் தான் பரிசு கொடுப்பாளா? உலகிலுள்ள அனைவரும் அவளது பிள்ளைகள் தானே...! எனக்கும் தான் கொடுப்பாள் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு, கோடரியுடன் காட்டிற்குப் புறப்பட்டான். கோடரி ஆற்றிற்குள் விழுமளவு வேகமாக ஒரு மரத்தை வெட்டினான். கோடரியும் நழுவி விழுந்தது. அம்மா....! வனதேவதையே! எனக்காகவும் ஓடி வரமாட்டாயா... தாயே...! என்று உருக்கமாக அழைத்தான். ணதேவதையும் அவன் முன் தோன்றி நின்றாள். இதோ... உன் கோடரியை இப்போதே தருகிறேன் என்று சொல்லி தண்ணீருக்குள் மறைந்தாள். ஒருவேளை தனக்கு தங்க கோடரி கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று பரபரத்தான். ஆனால் தங்க கோடரியுடன் வந்த தேவதை, இதுவா... உன்னுடையது என்று கேட்டாள். பேராசையால், ஆமாம் தாயே...ஆமாம் என்று வேகமாகக் கை நீட்டினான். உடனே தேவதை மாயமாக மறைந்து விட்டாள். பேராசையால் இருந்ததையும் இழந்த அவன் வருத்தத்துடன் நின்றான். தேவதை சிறிது நேரத்தில் அவன் முன் வந்து, மகனே! பேராசை என்னும் இருள் சூழ்ந்தால், இருப்பதையும் மனிதன் இழக்க நேரிடும். நேர்மை என்னும் விளக்கை மனதில் ஏற்றி வைத்தால் நன்மை இரட்டிப்பாகும். இந்த உண்மையை உணர்ந்து கொள். இந்த அறிவுரையே உனக்கான பரிசு, என்று சொல்லி மறைந்தாள். |
|
|
|