|
கோல்கட்டாவைச் சேர்ந்த ராணி ராசமணி, காசி யாத்திரை செல்லும் வழியில் தட்சிணேஸ்வரத்தில் தங்கினார். ராணியின் கனவில் தோன்றிய காளி, அங்கு தனக்கு ஒரு கோவில் கட்டுமாறு உத்தரவிட்டாள். ராணியும் பெரும் செலவில் கோவிலைக் கட்டினாள். ராமகிருஷ்ண பரமஹம்சரின் சகோதரரான ராம்குமார் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. அவரே கோவிலின் தலைமை அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். அவரது மறைவுக்குப் பின் தலைமைப் பொறுப்பு ராமகிருஷ்ணரிடம் ஒப்படைக்கப்பட்டது. பொறுப்புக்கு வந்த சில நாட்களில் ராணி கோவிலுக்கு வந்தாள். அப்போது ராணி ராமகிருஷ்ணரிடம் பக்தி பாடல் பாடும்படி வேண்டினாள். அவரும் பாடத் தொடங்கினார். சிறிது நேரத்தில் ராணியின் கவனம் வேறு பக்கம் திரும்பியது. தன் குடும்பம் சார்பாக நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு பற்றி சிந்திக்க ஆரம்பித்து விட்டாள். ராணியின் சிந்தனை எங்கோ போவதை புரிந்து கொண்ட ராமகிருஷ்ணர் பாடுவதை நிறுத்தி விட்டார். கடும் கோபத்துடன் ராணியின் கன்னத்தில் அறைந்தார். காளியைப் பற்றி பாடும் வேளையில் அவளைப் பற்றி சிந்திக்காமல் வேறு எதையோ சிந்திக்கிறாயே! என்று கத்தினார். அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ராமகிருஷ்ணருக்கு ராணி தண்டனை வழங்குவார் என்று எதிர்பார்த்தனர். ராணியோ, இவர் எவ்வளவு பெரிய மகானாக இருந்தால், என் மனதில் ஓடும் எண்ணத்தை புரிந்து கொண்டிருப்பார். கோவிலில் பிற விஷயம் பற்றி சிந்தித்த எனக்கு, இவர் அளித்த தண்டனை சரியானதே என்று சமாதானம் அடைந்தாள். |
|
|
|