|
ரமேஷ், கடவுள் நம்பிக்கையுள்ள குடும்பத்தில் பிறந்திருந்தாலும்,அவனுக்கு என்னவோபக்தியில் ஈடுபாடு இல்லாமல் இருந்தது. சில சமயங்களில் கடவுள் கோட்பாட்டை கிண்டல் செய்யவும் ஆரம்பித்துவிட்டான்.பள்ளிக்குப் போய் விட்டு மாலை ஐந்தரை மணிக்கு வந்தவன், ‘டிவி’ பார்த்துக் கொண்டிருந்தான்.“ரமேஷ்! மணி ஆறாகி விட்டது. லட்சுமி வீட்டுக்கு வரும் வேளை! அம்மா விளக்கேத்தி வைக்கப்போறேன். ‘டிவி’யை ஆப் பண்ணிட்டு, வாசல் கதவைத் திறந்து வைடா!” என்று அம்மா குரல் கொடுத்தாள்.“அம்மா! கடவுளாலே தான் எல்லாம் செய்யமுடியுமுனு சொல்வியே! வாசலைத்திறந்தா தான் லட்சுமியால வரமுடியுமா? ஜன்னல் திறந்து தானே இருக்கு! அது வழியே வந்தா ஆகாதா?” என்று பதிலளித்தான் ரமேஷ்.அம்மாவுக்கு, ரமேஷின் பேச்சைக் கேட்டு வருத்தம் உண்டானது. அவனைத் திருத்த வேண்டும் என்ற எண்ணத்தில், கற்றறிந்த பெரியவர் ஒருவரிடம் அழைத்துச் சென்றாள்.
அம்மாவிடம் நடந்ததைக் கேட்ட பெரியவர், ஒரு பாட்டில் திரவத்தை எடுத்தார்.“இது என்ன தெரிகிறதா!” என்றார். “காதில் ஊற்றும் மருந்து,” என்றான் ரமேஷ்.“இதை உன் காதில் சிறிது ஊற்று. லட்சுமி வாசல்வழியாக வருகிறாளா என்பது தெரிந்து விடும்,” என்றார் பெரியவர்.அவரைப் பார்த்து சிரித்த ரமேஷ், “இவ்வளவு தானே!” என்றவன், இரண்டு சொட்டு திரவத்தை ஊற்றினான்.சிறிது நேரத்தில்,அவனுடைய வாய் கசக்கத் தொடங்கியது. “கசக்கிறதே!” என்றான்.“ரமேஷ்! காதுக்குள் ஊற்றிய திரவம் எப்படி வாய்க்குள் வந்தது? வாய்க்கும் தொடர்புஇருக்கிறது என்பது தெரிகிறதல்லவா?” என்றார்.தலையசைத்த ரமேஷிடம்,“இனிமேல், உனக்கான சாப்பாட்டை நீ காதுவழியாக தான் ஏற்க வேண்டும்,” என்றார் பெரியவர்.கோபமடைந்த ரமேஷ்,“என்ன சொல்கிறீர்கள்? வாய் இருக்க, வாய் வழியாக உண்ண எனக்கு என்ன பைத்தியமா?” என்றுகத்தினான்.பெரியவர் அவனைத் தட்டிக் கொடுத்து, “இதோ பாரப்பா! நீயும் அம்மாவிடம் அப்படித் தானே கேட்டாய். வாசல் வழியா வரும் லட்சுமி, ஜன்னல் வழியா வரக்கூடாதா என்றாயே!” என்றார்.தவறை உணர்ந்த ரமேஷ், “மன்னியுங்க சுவாமி!இனிமேல் அம்மாவின் பேச்சைக் கேட்டு நடப்பேன்,” என்றான்.அம்மா முகம் மலர்ந்தது.
|
|
|
|