|
எதிலும் விரக்தி மனப்பான்மையுள்ள பக்தன் ஒருவன் காலை நேரத்தில் ஒரு மகானை அணுகினான். ஐயா! இறைவன் பலருக்கு நிறைய செல்வத்தை வாரி வழங்கிவிட்டு என்னை மட்டும் ஏழையாகப் படைத்து விட்டானே... நான் என்ன பாவம் செய்தேன்! என்று பெரிதும் வருந்தி புலம்பினான். இதைக்கேட்ட மகான், இன்று மாலை வரை என்னுடனேயே இருங்கள் என்று சொல்ல, பக்தரும் அவ்வாறே செய்தார். முதலில் பார்வையற்றவர் ஒருவர் வந்து அவரது குறையைச் சொன்னார். பின் பேச்சுக் குறைபாடுடைய ஒரு பையனை அழைத்து வந்த பெற்றோர், அவன் குறையை நிவர்த்தி செய்யுமாறு வேண்டினர். தொடர்ந்து கை இழந்தவர், கால் இழந்தவர் என பலரும் வந்து மகானை வணங்கி, நிவாரணம் வேண்டினர். மாலை வந்ததும் மகான், உலகைப் பார்த்தீர்களா உமக்கு கண், காது, வாய், கால், கை, தேகம் என எல்லா வற்றையும் இறைவன் எவ் விதக் குறையுமின்றி கொடுத்து உள்ளான். இதைக் கொண்டு... மகான் முடிக்கவில்லை. விரக்தி மனப்பான்மை கொண்ட பக்தர், உண்மையான செல்வம் எது என்பதை உணர்ந்து கொண்டார். |
|
|
|