|
சீடன் ஒருவன் இறைவழிபாட்டிற்காக நந்தவனத்தில் ரோஜாமலர் பறிக்கும்போது, முட்கள் அவன் கையைக் கீறி ரத்தம் வரவழைக்க, கடவுளுக்கு கண் இருந்திருந்தால் அழகிய ரோஜாவில் முட்களை வைத்திருப்பானா? என எண்ணினான். பின்னர் அங்கிருந்து திரும்பும் வழியில் பாதை ஓரத்தில் இருந்த நெருஞ்சியை கவனிக்காமல் அதன் மேல் கால் வைக்க, முள் சீடனின் காலில் ஏறி வலியை உண்டாக்கியது. சே! கடவுளுக்கு கண் இருந்திருந்தால், இந்த அழகிய நந்தவனத்தின் ஓரம் நெருஞ்சி முட்களை வைத்திருப்பானா? என எண்ணினான். ஆசிரமம் வந்த சீடனிடம், மீனவ பக்தன் ஒருவன் வழங்கிய முத்துச்சிப்பிக் கூடை ஒன்றைத் தந்த குருநாதர், இதில் ஏதோ ஒரு சிப்பியில் முத்து உள்ளது. ஓடுகளை நீக்கி முத்தை எடுத்து ஆசிரம கணக்கில் வரவு வை! என்றார். சீடன், குரு சொன்னபடியே செய்ய, ஒவ்வொரு சிப்பியில் இருந்தும் குப்பென்று துர்நாற்றம் வீசியது. நொந்து போன சீடன், முத்தை எடுத்தபின் குருவிடம் சென்று, என்ன சுவாமி! கடவுளுக்கு கண்ணே இல்லை! இருந்திருந்தால் இந்த அழகிய முத்துகளின் மேல் இவ்வளவு துர்நாற்றத்தைத் தந்திருப்பாரா? என்று சொன்னதோடு, காலையில் நடந்த சம்பவங்களையும் சொன்னான். புன்னகைத்த குரு, இறைவன் சிருஷ்டியைப் பார்த்து அவருக்கு கண்ணில்லை என்று கூறுகிறாயே! இதை எல்லாம் <உணர்த்தத்தானே உனக்கு கண் கொடுத்துள்ளார்! என்று கூற, உண்மை நிலை உணர்ந்தான் சீடன். |
|
|
|