|
குருவிடம் வந்த சீடன் ஒருவன், சுவாமி! சில சமயம் சக சீடர்கள் என்னை கிண்டல் செய்தால், நானும் சிரித்து பதிலுக்கு கிண்டல் செய்து விஷயத்தை அதோடு முடித்து விடுவேன். ஆனால் சில சமயம் அதே கிண்டல் எனக்குள் கோபத்தை ஏற்படுத்துவது ஏன்? உடனடியாய் எதுவும் சொல்லாத குரு வாளி ஒன்றை எடுத்துக்கொண்டு என்னுடன் வா! என நடந்தார். முதலில் வறண்ட கிணறு ஒன்றில் வாளியை விட்டார் குரு. மேலே இழுத்த போது காலியாக வாளி திரும்பியது. அடுத்ததாக நீருள்ள கிணற்றில் குரு வாளியை விட, வாளி நீருடன் திரும்பியது. இதிலிருந்து என்ன புரிந்தது உனக்கு? ஒன்றும் புரியாமல் சீடன் விழிக்க, குரு சொன்னார். கிணற்றில் வாளியை விட்டால் உள்ளே உள்ளதை மட்டுமே அதனால் கொண்டு வர முடியும். வாளியால் நீரை உருவாக்க முடியாது. அடுத்தவர்கள் வாளிகளைப் போன்றவர்கள் அவர்களது சொற்களும், செயல்களும் நமக்குள்ளே சென்று வெளிக்கொணர்வது நமக்குள்ளே இருப்பதைத்தான். அது கோபமாகட்டும், வெறுப்பாகட்டும், அன்பாகட்டும், நல்லதாகட்டும், தீயதாகட்டும். அதனால்தான் நீ சந்தோஷமாக இருக்கும்பொழுது நண்பரின் கிண்டலை சாதாரணமாக எடுத்துக் கொண்டு ரசிக்கிறாய். ஆனால் ஏதாவது பிரச்னைகளால் மனநிலை சரியில்லாமல் இருந்தால், அந்த நண்பரது வார்த்தைகளுக்கு அந்த நேரம் ஒரு தனி அர்த்தம் தெரியும். அதனால் உனக்கு எரிச்சல் வருகிறது! |
|
|
|