|
இறை நம்பிக்கை கொண்ட அடியார்களை இறைவன் எப்போதும் கைவிடுவதில்லை. அன்று, கிருத்திகை திருநாள்; கந்தப்ப ஆசாரியும், மாரிசெட்டியாரும் திருப்போரூருக்கு வந்தனர். ஒவ்வொரு கிருத்திகையன்றும், சென்னையிலிருந்து நடந்தே சென்று, திருப்போரூர் முருகனை தரிசிப்பது அவர்களது வழக்கம். நடந்து வந்த களைப்பில், மலையடிவாரத்தில், வேப்ப மர நிழலில், மேலாடையை விரித்து, படுத்தனர். அப்போது, அவர்களுக்கு ஒரு கனவு வந்தது. அருகிலிருந்த புற்றிலிருந்து பாம்பின் வடிவாக முருகப்பெருமான் வெளிப்பட்டு, மாரி செட்டியாரின் மார்பு மேலேறி, உடலெங்கும் தன் வடிவத்தைக் காட்டி, புற்றுக்கு தான் வந்த விவரத்தை தெரிவித்து, தூய பக்தனே... அருகில் இருக்கும் புற்றில் நான் இருக்கிறேன்; என்னை எடுத்து, சென்னைக்கு கொண்டு போ... என்றார்.
அதே கனவு, கந்தப்பருக்கும் வந்தது. இருவரும் கனவைப் பரிமாறி, அருகில் இருக்கும் பாம்புப் புற்றை மலர்த்தினர். அதில், அழகு திருமுகத்துடன் முருகப் பெருமான் விக்ரகம் இருந்தது. இருவருமாக சேர்ந்து தூக்க முயன்றனர்; அசைக்கக் கூட முடியவில்லை. சூரசம்ஹாரா... எங்களால் முடியவில்லை. பிறந்து பத்து நாட்களே ஆன குழந்தையை போல் இருந்தால் தான், உன்னை தூக்க முடியும்; அருள் செய்... என வேண்டினர். அடியவர் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த ஆறுமுக கடவுள், பெரிய வடிவில் இருந்து, பத்து நாள் குழந்தையை போல சிறிய வடிவத்திற்கு மாறினார். இருவர் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர் வடிய, அரோஹரா... என்று கூவினர். பின், இருவரும் முருகனை சுமந்தபடி, சென்னை திரும்பினர். வழியில், பக்கிம்ஹாம் கால்வாய் குறுக்கிட்டது. இடியும், மின்னலுமாக மழை கொட்ட, கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. என்ன செய்வது என்று புரியாமல் இருவரும் திகைத்த போது, தைரியமாக இறங்குங்கள்... என அசரீரி கேட்டது.
அதனால், மாரி செட்டியார், விக்ரகத்தை முதுகில் கட்டிக் கொள்ள, ஒருவர் கையை, மற்றவர் பிடித்தபடி வெள்ளத்தில் இறங்கினர். சற்று நேரத்தில் இருவரும் மூழ்கும் நிலை வந்தது. அப்போது, பெருத்த ஓசையுடன் வந்த அலை ஒன்று, அவர்களை மோத, என்னவென்று உணர்வதற்குள், இருவரும் எதிர்க்கரையில் இருந்தனர். சுவாமியுடன் திருவான்மியூர் வழியாக மயிலாப்பூரை அடைந்த போது நள்ளிரவு! அதனால், மயிலை குளக்கரையில் இருந்த தென்னஞ் சோலையில், மேலாடையில் முருகனை மறைத்து வைத்து, இருவரும் கண்ணயர்ந்தனர். அப்போது, விபூதி, ருத்ராட்சம், காதுகளில் குண்டலங்கள், சடை, கையில் பொற்பிரம்பு ஆகியவற்றுடன் அந்தணர் ஒருவர் பிரம்பால் அவர்களை தட்டி எழுப்பி, என்ன இது... இப்படியா தூங்குவது... எழுந்திருங்கள்; விடிவதற்குள் உங்கள் இடத்திற்கு போய் விடுங்கள்... என எச்சரித்தார். இருவரும் விழித்துப் பார்த்தனர்; யாரையும் காணவில்லை. தாங்கள் கண்டது கனவு என்றாலும், அதை அலட்சியப்படுத்தாமல், உடனே தாங்கள் அடைய வேண்டிய இடம் அடைந்து, முருகப் பெருமானை அங்கே பிரதிஷ்டை செய்தனர். 16ம் நூற்றாண்டில் நடந்த நிகழ்ச்சி இது! இந்த முருகனை பாம்பன் சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், வள்ளலார் எனும் ராமலிங்க சுவாமிகள் ஆகியோர் தரிசித்துள்ளனர். தருமமிகு சென்னையில் கந்தக்கோட்டத்தில் எழுந்தருளி முத்துக்குமாரசுவாமி எனும் திருநாமத்துடன் அருள் புரியும், அந்த முருகப் பெருமானை நாமும் தரிசிக்கலாம்! |
|
|
|