|
சிவன், பார்வதிக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்தபோது, அம்பாளின் மடியில் இருந்த முருகன் அதனைக் கேட்டுக் கொண்டிருந்தாராம். அம்மந்திரத்தை குருவிடம் இருந்து முறையாக கற்காமல், மறைமுகமாக கேட்டது தவறு என எண்ணிய முருகன், இத்தலத்தில் சிவனை வேண்டி தவம் செய்தார். அவருக்கு ஒரு தைப்பூசத்தன்று சிவன் காட்சி தந்தார். இந்த சிவன், சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே ஆதிசொக்கநாதராக அருளுகிறார். திருப்பரங்குன்றம் செல்பவர்கள் முதலில் இவரை வணங்கிவிட்டு செல்லவேண்டும் என்பது ஐதீகம். இவரே இங்கு பிரதான மூர்த்தி ஆவார். ஆனால் அறுபடை முருக தலங்களில் இத்தலமும் ஒன்று என்பதால் பிற்காலத்தில் முருகன் பெயராலேயே இக்கோயில் பெயர் பெற்றுள்ளது. விழாக்காலங்களில் சிவனுக்கே கொடியேற்றப்படுகிறது. ஆனால், முருகனே வீதியுலா செல்கிறார். முருகன் சிவனது அம்சானவர் என்பதால் இவ்வாறு செல்வதாக சொல்கிறார்கள். எனவே இங்குள்ள முருகனுக்கு சோமசுப்பிரமணியர் என்ற பெயரும் உள்ளது.
சோமன் என்பது சிவனைக் குறிக்கும். கருவறையில் சிவலிங்கத்திற்கு பின்புறம் சிவன், பார்வதி மற்றும் முருகனுடன் சோமாஸ்கந்தராக இருக்கிறார். இது விசேஷமான அமைப்பாகும். துர்கை அம்மனுக்கு சிவன், விமோசனம் தந்தபோது சோமாஸ்கந்தராக காட்சி தந்தாராம். இதன் அடிப்படையில் இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது. சிவலிங்கம் துர்க்கை அம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பதால் தேவி லிங்கம் என்கின்றனர். சுவாமி, சாந்தகாரம் எனும் மருந்து பூசப்பட்டவர் என்பதால் சாம்பிராணி தைலம் மட்டும் பூசி வழிபடுகின்றனர். வேதவியாசர், பராசர முனிவர் ஆகியோர் சுவாமியை வழிபட்டுள்ளனர். |
|
|
|