|
ஒருமுறை, தங்களின் கஷ்டத்தை தீர்க்குமாறு வேண்டிக்கிட்ட இரண்டு பக்தர்களுக்காக, சிவனும் பார்வதியும் வயதான தம்பதி மாதிரி பூமிக்கு வந்தார்கள். முதலில் ஒரு வீட்டுக் கதவைத் தட்டி, சாப்பிட கொஞ்சம் உணவும், ராத்திரி தங்க இடமும் தரும்படி கேட்டாங்க. நாங்களே கஷ்டத்தில் இருக்கோம். இதுல நீங்க வேறயா என்று எரிச்சலடைந்து சாப்பிடக் கொஞ்சம் பழைய சோறும், படுக்க ஒரு கிழிஞ்ச பாயும் கொடுத்து, திண்ணையில் படுக்கச் சொன்னார்கள். சிவனார் அந்தச் சோற்றுப் பருக்கைகளைத் தொட்டதுமே அது வெள்ளி நாணயங்களாக மாறின. மறுநாள் அதைப் பார்த்ததும்தான்! அடடே! நேத்து வந்தவங்க கடவுளா! சரியாக உபசரிக்காம விட்டுட்டோமே! என்று வருத்தப்பட்டு, இனிமே விருந்தாளிகளைக் கனிவோட உபசரிக்கணும் என்று முடிவெடுத்தார்கள்.
சிவனும் பார்வதியும் இன்னொரு பக்தர் வீட்டுக்குப் போனார்கள். அவங்களோ அன்போடு வரவேற்று, கொஞ்சம் நொய் இருக்கு. உப்புமா பண்ணித் தரேன். வெளியே குளிரும்! நீங்க உள்ள கட்டிலில் படுத்துக்குங்க வெளித் திண்ணையில் நாங்க படுத்துக்கிறோம் என்றார்கள். அன்னிக்கு ராத்திரி பெரிய இடி விழுந்து, அந்த வீட்டின் கூரை எரிந்தது. தொழுவத்தில் கட்டியிருந்த பசுமாடும் இறந்திடுச்சு. கொல்லைப்புறத்தில் இருந்த வாழைத் தோட்டமும் கருகிப் போயிடுச்சு. அவர்கள் அப்பவும், தங்கள் வீட்டில் தங்கின பெரியவங்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து விட்டதா என்று தான் கவலைப்பட்டாங்க. அவர்கள் விடைபெற்று வெளியேறினதும், பார்வதி சிவனிடம், என்ன அநியாயம்! எரிச்சலோடு வரவேற்றவங்களுக்கு அவர்கள் கஷ்டம் தீர, வெள்ளி நாணயங்களைப் பரிசா அளித்தீர்கள். அதுவே அன்போட வரவேற்றவர்களுக்கு இடி மூலமா, மேலும் கஷ்டம் கொடுத்தீங்க, இது சரிதானா சுவாமி? என்று கேட்டாங்க.
சுவாமி சிரிச்சார். பார்வதி! முதல் பக்தருக்குத் தங்க நாணயங்கள் தரணும் என்று நினைத்தேன். ஆனா, அவர்கள் இன்னும் பண்படணும் தெரிஞ்சதும் வெள்ளி நாணயங்களை மட்டுமே கொடுத்தேன். இரண்டாவது பக்தர் வீட்டில், அவர் மகனுக்கு வெகு சீக்கிரமே ராஜாங்கத்தில் நல்ல உத்தியோகம் கிடைக்கப் போகுது. அவன் குடும்பமே அவனால் பேரும் புகழும் அடையப் போகுது, ஆனா, அன்னிக்கு ராத்திரி இடி தாக்கி அவன் இறந்து, அவனோட பெற்றோர் நிர்க்கதியா நிக்கும்படியா விதி இருந்தது. நாம் உள்ளே படுத்து, அவன் தன் பெற்றோரோடு வெளியே படுத்துக்கிட்டதால், அவன் தப்பிச்சான், அவன் விதியை மாத்தி எழுதினேன், ஆக, இரண்டு பக்தர்களுக்குமே அவங்க பக்திக்கும் பண்புக்கும் தகுந்த பலனைத்தான் கொடுத்திருக்கேன் என்றார். |
|
|
|