|
காடுவெட்டிச் சோழன் என்ற மன்னன் அடிக்கடி மதுரை வந்து சொக்கநாதரை தரிசித்தான். மன்னன் ராஜேந்திர பாண்டியனையும் நேரில் சந்தித்து உறவாடினான். ஒருமுறை சோழன் நட்புணர்வுடன் ராஜேந்திர பாண்டியனுக்கு விலை உயர்ந்த ஆபரணங்களைப் பரிசாக அனுப்பினான். பாண்டியனும் சோழனின் நட்பை ஏற்கும் விதத்தில் துõதர்கள் மூலம் பட்டாடை, நவரத்தின ஆபரணங்களை அனுப்பினான். இருவருக்கும் உறவு பலப்பட்டது. சோழன் தன் மகளையே ராஜேந்திர பாண்டியனுக்கு திருமணம் முடிக்க எண்ணினான். ஆனால் ராஜேந்திர பாண்டியனின் தம்பியான ராஜசிம்மன், அந்தப்பெண்ணைத் தானே திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் சோழனின் நாட்டுக்கு சென்றான். காடுவெட்டிச் சோழனிடம் நயமாகப் பேசி, சோழகுமாரியை தன் மனைவியாக்கிக் கொண்டான். இதன் பின் சோழனுக்கு தீய எண்ணம் தலைதுõக்கியது. தன் மருமகன் ராஜசிம்மனைப் பாண்டியநாட்டின் மன்னனாக்கும் எண்ணத்துடன் போர் தொடுக்க ஆயத்தமானான். சோழனின் படை மதுரை நோக்கி வருவதை அறிந்த ராஜேந்திர பாண்டியன் சொக்கநாதர் கோவிலுக்கு விரைந்தான்.
பெருமானே! உண்மையான பக்தர்க்கு அருள்புரிபவனே! நயவஞ்சகனான காடுவெட்டிச் சோழனுடன் நடக்கும் போரில் எனக்கு வெற்றியைத் தந்தருள வேண்டும் என்று வேண்டினான். அப்போது வானில் , ராஜேந்திரபாண்டியனே! பயம் வேண்டாம். துணிவுடன் எதிர்த்து நில்! உனக்கே போரில் வெற்றி உண்டாகும், என்று அசரீரி ஒலித்தது. இதன் பின் அரண்மனை திரும்பிய ராஜேந்திர பாண்டியன், படைவீரர்களை ஒன்று திரட்டினான். போர்க்களத்தில் ஈசன் நடத்திய திருவிளையாடலால், பாண்டியநாட்டு படைவீரர் ஒவ்வொருவரும் சோழப்படையினரின் கண்களுக்கு பல வீரர்களாக காட்சியளித்தனர். அவர்கள் தங்களின் மனதிற்குள், இதென்ன மாயம்? என்று அதிர்ச்சி அடைந்தனர். உச்சி வேளையானதால் வானில் சூரியன் சுட்டெரித்தது. நா வறட்சியால் பாண்டிய வீரர்கள் சற்று சோர்ந்தனர். அவர்களின் தாகத்தை தணிக்க ஒரு பணியாளர் போல வந்த சிவன் வீரர்களுக்கு குளிர்ந்த நீரைக் கொடுத்தார். தாகம் தீர்ந்ததும் வீரர்களின் உடம்பில் புத்துணர்ச்சி உண்டானது. முன்னை விட பலத்துடன் சோழநாட்டு வீரர்களைத் தாக்கினர். வெற்றி தேவதை ராஜேந்திர பாண்டியனுக்கு மாலையிட்டாள். தோற்றுப்போன காடுவெட்டிச்சோழனும், அவன் மருமகன் ராஜசிம்மனும் ராஜேந்திர பாண்டியனிடம் அடிமை போல அழைத்து வரப்பட்டனர். பெருந்தன்மையுடன் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கிய ராஜேந்திர பாண்டியன், சோழனுக்கு பரிசுப்பொருட்களை அளித்து அனுப்பி வைத்தான். தம்பி ராஜசிம்மனுக்கு பாதி நாட்டை வழங்கினான். துரோகம் செய்தவர்களை சொக்கநாதர் தண்டிப்பார் என்பதற்கு இந்தக் கதை உதாரணம். |
|
|
|